Monday, October 3, 2005

அத்வானியின் கராச்சி ரதயாத்திரையும் உயிர்த்தெழுந்த ஜின்னாவும்! -


"வரலாற்றில் பலர் தங்களுடைய அழியாத முத்திரையைப் பதித்துள்ளனர். ஆனால் ஒரு சிலரே புதிய வரலாற்றைப் படைக்கின்றனர். முகம்மதலி ஜின்னா அத்தகைய ஒப்பரிய மனிதருள் ஒருவர். 1947 ஆகஸ்டு 11 அன்று பாகிஸ்தான் அரசமைப்புச் சட்ட அவையில் ஜின்னா ஆற்றிய உரை மதச் சார்பற்ற அரசு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுப்பதாக இருக்கிறது. மத அடிப்படையில் அரசு குடிமக்களிடையே வேறுபாடு காட்டக்கூடாது என்ற அம்மாமனிதருக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்" என்று எழுதியது யார்த் தெரியுமா? சாட்சாத் நம் ராமர் கோவில் புகழ் ரதயாத்திரை கலியுக கிரு?ணன் அத்வானி அவர்கள் தான்.
தன்னுடைய பாகிஸ்தான் பயணத்தின் போது ஜூன் மாதம் 4 ஆம் தேதி கராச்சியில் முகமத் அலி ஜின்னாவின் கல்லறைக்குச் சென்ற போது அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் மேற்கண்ட வாசகங்களை அவர் எழுதியதும் அதன் பின் இந்துத்துவ அரசியல் அரங்கில் அரங்கேறிய ஒவ்வொரு காட்சிகளையும் நாடறியும்.
கராச்சியில் பிறந்து வளர்ந்த அத்வானி 1947 பாகிSதான் பிரிவினைக்குப் பிறகுதான் இந்தியா வந்தவர். தான் பிறந்த கராச்சி மண்ணில் கால்பதித்து நின்ற போது நெஞ்சம் நெகிழ்ந்த உணர்வு வெள்ளத்தில் முதல் முறையாக ஒரு வரலாற்று உண்மையை மறைக்காமல் சொல்லிவிட்டாரா?
அதுமட்டுமல்ல.. பாகிஸ்தான் செய்தியாளர்கள் கூட்டத்தில் 1992, டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றிக் கேள்வி கேட்டபோது " அந்த நாள் என் வாழ்வின் மிகவும் துக்கமான நாள்" என்று பதிலிறுத்தார்!!
ஜின்னாவின் இருதேசங்கள் கோட்பாடுதான் இந்தியா பிளவுப்பட்டதற்கு காரணம், இப்படித்தான் ஒவ்வொரு சராசரி இந்தியனும் இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் பற்றியும் அதற்கு முழுக்காரணம் ஜின்னா தான் என்றும் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய விடுதலையின் சரித்திர வரலாறு இந்தக் கோணத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. அதனால் இன்றுவரை உள்நாட்டுப் பிரச்சனைகள் வரும்போதெல்லாம் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியலைக் கிளப்பி இந்தியத் தேசப்பற்றை கட்டவிழ்த்து இந்திய இசுலாமியர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே அயலவர்களாக்கி எப்போதும் இந்திய ஆளுமைக்கும் ஒற்றுமைக்கும் எதிரானவர்களாக சித்தரிப்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் வெற்றி கண்டுள்ளன. இப்படியே அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் இந்திய அரசியலின் தீவிரவாதிகளும் மிதவாதிகளும் அத்வானி கராச்சியில் உளறிக்கொட்டிய உண்மையைக் கண்டு ஆடிப்போய்விட்டார்கள்.
"ஜின்னா ஒரு துரோகி. துரோகியைப் புகழ்பவர்களும் துரோகிகள்தான்" என்று வெடித்தார் பிரவின் தொகாடியா.
"அத்வானி நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் இந்நாட்டின் இந்துக்களை ஏமாற்றிவிட்டார்" என்றார் அசோக் சிங்லால்.சரி இவர்கள் தான் விசுவ இந்து பரிசத் காரர்கள். அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் மதச்சார்பற்ற கூட்டணியின் தலைமையான காங்கிரசுக்கும் அத்வானி ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொன்னதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அத்வானி சொன்னதை ஏற்றுக்கொண்டால் காங்கிரசின் சாயமும் வெளுத்துவிடும். அதன் மிதவாத இந்துத்துவ முகம் பளிச் என்று வெளியில் தெரியும். அதனால்தான் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி 'ஜின்னாவின் ஆகஸ்டு 11, 1947 பாகிஸ்தான் அவையில் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொல்லிவிட முடியாது 'என்றார்.
இரண்டு தேசங்கள் கோட்பாட்டை முதன் முதலில் சொன்னவர் சாவர்க்கர். அவரை தங்கள் இந்துத்துவ அரசியலின் தந்தையாக வைத்துக் கொண்டாடும் அத்வானி வகையறாக்கள் அவர் ஜின்னாவுக்கு முன்பே சொன்ன இரண்டு தேசக் கோட்பாட்டைப் பற்றி மட்டும் பேசவே மாட்டார்கள். அகண்ட பாரதத்தை அமைப்பதே தங்களின் இலட்சியமாகக் கனவுக் கண்டுகொண்டிருப்பவர்கள் இவர்கள். அதனால்தான் பொக்ரான் அணுகுண்டு வெடிப்புக்குப் பின் அமெரிக்காவிலிருந்து 2000ல் வாஜ்பாய் அரசுடன் பேச வந்த ஸ்ட் ரோப் தல்போட்டிடம் (strobe talbott) அத்வானி தன்னுடைய அகண்டபாரதம்.. அதாவது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மார் அடங்கிய தெற்கு ஆசியக் கூட்டமைப்பு கனவைச் சொல்லி தன்னுடைய பாசிச முகம் காட்டி அமெரிக்க அரசுக்கே அதிர்ச்சி கொடுத்தவர் (ஆதாரம்: economic and political weekly, june 11, 2005, சுகுமார் முரளிதரன் எழுதியுள்ள கட்டுரை).
"அமைதியாக இருந்த எரிமலை கனல் கக்கத் தொடங்கிவிட்டது. அது முசுலீம் ஆண்களின் புட்டங்களை எரிக்க .....ஆண்குறிகளைக் கட்டுக்குள் வைத்திருந்த தளைகளை நாங்கள் அகற்றி முசுலீம் பெண்களின் பிறப்புறுப்புகளை விரியச் செய்துவிட்டோம்.." என்று ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை அச்சடித்து குஜராத் படுகொலையின் போது விநியோகம் செய்தவர்கள் இன்றுவரைத் தண்டிக்கப்படவில்லை. (ஆதாரம். எஸ்.வி.இராஜதுரை எழுதியுள்ள இந்து இந்தியா- அக்ரனியிலிருந்து அத்வானிவரை நூல் பக். 232) அவர்கள் அனைவரையும் ஆதரித்து வளர்த்தவர் அத்வானி. அவர்தான் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக மறைக்கப்பட்ட உண்மையான அரசியல் வரலாற்றைச் சொல்லி உலக அரங்கில் தன்னுடைய பாசிச முகத்தை மறைக்க நினைத்தாரா?
தன்னையும் மதச்சார்பில்லாத அரசியல் தலைவராகக் காட்ட நினைத்தாரா..?
எப்படி பார்த்தாலும் அத்வானியின் முயற்சி தோல்விதான். அவருடைய பதவி விலகல் நாடகம், அதன் பின் நிறைவேற்றப் பட்ட கண்துடைப்பு தீர்மானங்கள் இன்றுவரை இவர்கள் பேசிய அடிப்படை இந்துத்துவ கொள்கையைக் கேலிக்குரியதாக்கிவிட்டது.
ஆனால் அத்வானி சொன்ன ஓர் உண்மை சில முடிச்சுகளை இந்திய வரலாற்றில் அவிழ்த்திருக்கிறது.
ஜின்னா நடத்தியது ஓர் அரசியல் போராட்டம். ஒரு நவீன நாட்டை உருவாக்கப்போகிறேன் என்ற கனவுடந்தான் அவர் இந்திய மண்ணிலிருந்து பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். அதனால்தான் பாகிஸ்தானை அவர் இஸ்லாமிய நாடாக அறிவிக்கவில்லை.
*ஜின்னா இஸ்லாமியராக இருந்தபோதும் இஸ்லாம் பற்றியோ அல்லா பற்றியோ அவர் பேசியதில்லை. அவர் குரான் படித்ததில்லை. மசூதிக்குச் சென்றதில்லை. கடவுள் நம்பிக்கைக் கொண்டதில்லை. இஸ்லாமிய உணவு,' உடை, பழக்க வழக்கங்களை கையாண்டதில்லை. தன்னுடைய கடைசி காலத்தில் மட்டுமே முசுலீம்களுக்கான "ர்வானி உடை அணிந்திருக்கிறார். பார்சி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர். ஆங்கிலேயர்களைப் போல உடை அணிபவர். ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ணம் ஆங்கிலம் பேசும் மிகச் சிறந்த வழக்கறிஞர். உருது மொழியில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச முடியாமல் தடுமாறுபவர்.
*1906 உருவான முஸ்லீம் லீக் கட்சியில் சேராதவர்.
*1909ல் மிண்டோ -மார்லி சீர்திருத்தம் தந்த முசுலீம்களுக்கான தனித் தொகுதியை எதிர்த்தவர்.
*1916ல் திலகர் ஜின்னா ஒப்பந்தம் காங்கிரசும் முசுலீம்லீக்கும் சேர்ந்து செயல்பட தீர்மானித்தது. அதனால்தான் ஜின்னா இந்து முசுலீம் ஒற்றுமையின் முத்திரையாக அழைக்கப்பட்டார்.
ஜின்னாவின் சமயச் சார்பற்ற தலைமைப் பண்பைக் கருத்தில் கொண்டே சரோஜினி நாயுடு 1918ல் ஜின்னாவைப் பற்றி " இந்து முசுலீம் ஒற்றுமையின் தூதுவர்' என்ற நூலை எழுதினார்.
*ஜின்னா தன்னை பம்பாய் இந்துப் பாரம்பரியத்தில் வந்தவராகச் சொல்லி பெருமைக் கொண்டார். காங்கிரசைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைவதாகச் சொன்ன ஜின்னா 1920ல் காங்கிரசு தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிப் போவதை உணர்ந்து தன்னைக் காங்கிரசிலிருந்து விலக்கிக் கொண்டார்.அப்போதும் தனிநாடு கொள்கை அவரிடமில்லை. *1937ல் காங்கிரசு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தது. அப்போது 25% இருந்த முசுலீம்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. பட்டேலும் நேருவும் முஸ்லீம்களுக்குரிய பங்கைக் கொடுக்கத் தடையாக இருந்தார்கள். இவைதான் 1937க்குப் பிறகு பாகிஸ்தான் பிரிவினை என்ற கோரிக்கையை எழுப்பும் நிலைக்கு ஜின்னாவைத் தள்ளியது எனலாம்.
*ஜின்னா மதவாதி என்றால் அதற்குக் காரணம் காங்கிரசுதான்: என்கிறார் வி.என் . நாயக். 'காங்கிரசு ஆட்சி செய்த மாநிலங்களில் சிறிய அளவில் முசுலீம்களை அமைச்சரவையில் சேர்த்திருந்தாலே பிரச்சனையைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அனைத்து அதிகாரங்களையும் தானே அனுபவிக்க காங்கிரசு நினைத்து இந்திய ஒற்றுமையை இறுதியாக உடைத்து எறிந்தது" என்கிறார் வி.என் . நாயக் (ஆதாரம் v N naikm jinnah- political study bombay 1947, pg 19 & 20)
*1946 மே மாதம் காங்கிரசும் முசுலீம்லீக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மூன்றடுக்குத் திட்டத்தை இங்கிலாந்தின் காபினேட் தூதுக்குழு தந்தது. இரண்டு அமைப்புகளும் ஏற்றுக்கொண்டதால் பாகிஸ்தான் பிரிவினையே தேவையற்றதானது. ஆனால் பண்டித ஜவர்கலால் நேரு மாநிலங்களைத் தொகுத்துள்ள முறைச் சரிவராது என்று பேசினார். அதை மாற்றி அமைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்றார். நாணயமற்ற இந்தப் பேச்சு.. பாகிஸ்தான் பிரிவினையே கடைசித் தீர்வு என்ற நிலைக்கு இந்திய அரசியலைத் தள்ளியது. * பாகிஸ்தானின் தேசியகீதத்தை ஓர் இந்துக் கவிஞரை அழைத்து எழுத வைத்தார். (அது ஜின்னாவின் மறைவிற்குப் பின் மாற்றப்பட்டது வேறுகதை).
* 1947 டிசம்பர் 15ல் முஸ்லீம்லீக் அமைப்பில் அனைத்து மதத்தினரும் சாதியினரும் உறுப்பினராகலாம் என்ற தீர்மானம் கொண்டு வர முயன்று அதில் தோற்றுப் போனார்.
*இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துத்துவ வாதிகளும், இசுலாமிய வெறியர்களும் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வன்முறைக் காடாக்கியதைக் கண்டு ஜின்னா மனம் நொந்து விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டார் என்கிறார் டாக்டர் பா? .
**ஜின்னா இறந்தப்போது ஜுமாத் இசுலாமிய தலைவர் மவுலானா மல்தூதி ஜின்னாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுத்துவிட்டார்.
** பாகிஸ்தான் விடுதலைக்குப் பின் ஜின்னாவைக் கொல்ல நான்கு முறை முயற்சிகள் நடந்தன.
** முஸ்லீம்கள் ஜின்னாவை அவருடைய பொதுநோக்கை ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை முஸ்லீம்களின் துரோகியாகவே கருதினார்கள்.
** ஜின்னா இறந்த போது அந்த நாள் முஸ்லீம் மத வெறியர்களால் மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
** அன்று அவர்கள் அல்லாவுக்கு வழிபாடு நடத்தி நன்றி சொன்னார்கள். (** ஆதாரம்: Jamnadas Akhtar, political comnspirasies in pakistan, delhi 1969, pg 215).
போராட்டக் களத்தில் ஜின்னாவின் நிஜம் மறைக்கப்பட்டது.
இந்து ராஜ்யத்தை நிறுவி வர்ணாசிரமத்தை நிலைநிறுத்தி தங்கள் ராஜ்யத்தில் இந்து அல்லாத அனைவருமே இரண்டாம்தர குடிமக்கள்தான்.. என்ற இந்திய அரசியலின் நிலைப்பாடே பிரிவினைக்கு காரணமானது. ஆனாலும் இந்திய விடுதலை வரலாறு இந்த உண்மைகளை இருட்டடிப்பே செய்தது. எப்போதாவது ஏதாவது காரணங்களால் சில உண்மைகள் வெளிவரும். அதுவும் அரசியல் நாடகத்தில் மாறிக்கொண்டிருக்கும் காட்சி அமைப்பின் பிரமிப்பில் பொதுமக்களுக்கு மறந்து விடும்.

மேற்கோள் : முனைவர் ஜெயராமன், முகிலன் கட்டுரைகள்.

நான்றி : புதியமாதவி (மும்பை) -

2 comments:

  1. நல்ல பதிவு. அறிய தந்தமைக்கு மிக்க நன்றி, மற்றும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். இஸ்மாயில், சிங்கை

    ReplyDelete
  2. //நாணயமற்ற இந்தப் பேச்சு..//

    இதே நாணயமற்ற செயலைத் தான் காஷ்மீர் விவகாரத்திலும் செய்தார்.

    ReplyDelete