Friday, February 29, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...21.

திகிலூட்டிய பாதுகாப்பான வீடு

குல்பர்க் பகுதியில் அச்சத்தால் உறைந்து போன முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்கு நிச்சயமுண்டு என்னும் நம்பிக்கையோடு முன்னாள்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாப்ரியின் வீட்டில் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் எதைக் கொண்டு அச்சப்பட்டார்களோ, அது அங்கே உயிர்பெற்றது.

குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றி 5 மாத காலமாக தெஹல்கா நடத்திய விசாரணைகளின் போது, வன்முறையாளர்கள் மற்றும் சதி திட்டங்களை வகுத்தச் சதிகாரர்களில் அதிகமானவர்கள் தங்களது பங்களிப்பைப் பற்றி மிக விளக்கமாகவே கூறினார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளப் படாத ஒரு இடம் உண்டு - அது தான் குல்பர்க். அஹ்மதாபாத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த சமூக குடியிருப்பானது, ஒரு சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாப்ரியின் இருப்பிடமாக இருந்தது. காவல்துறையின் படைகுழு ஒன்று அங்கே இருந்தும் கூட, பிப்ரவரி 28 அன்று வன்முறை வெறிபிடித்த ஹிந்துத்துவக் கும்பல் ஒன்று அந்த குடியிருப்பை முற்றுகையிட்டது. 5 மணி நேரத்துக்கும் மேலாக ஜாப்ரி பதட்டத்தோடு காவல் துறை ஆணையாளருக்கும், முதலமைச்சர் அலுவலகத்திற்கும், டெல்லியிலிருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் உதவி கோரி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார்.

கிட்டத்தட்ட 30 முஸ்லிம் குடும்பத்தினர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக பிராத்தனை செய்தவர்களாகத் தாங்கள் ஆபத்திலிருந்துக் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தனர். இவர்களோடுப் பக்கத்து சேரிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும் குல்பர்கிலே தஞ்சம் தேடியிருந்தனர். காரணம் காங்கிரஸ் தலைவர் தங்கியுள்ள சமூகக் குடியிருப்பு, பலமான பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். இறுதியில் மதியம் 2:30 மணியளவிலே காட்டுமிராண்டி வெறியர்கள் கூட்டம் சமூக குடியிருப்புக்குள்ளே நுழைந்து மூர்க்கத்தனமாகத் தாக்க ஆரம்பித்து, யாரெல்லாம் அவர்களின் கைகளில் அகப்பட்டார்களோ அவர்கள் அனைவரையும் கொன்றனர். அதிகாரப்பூர்வமாக 39 பேர் கொல்லப்பட்டதாக கூறினாலும், உயிர் பிழைத்தவர்களின் கூற்றுபடி மிக அதிக எண்ணிக்கையிலான பேர் கொல்லபட்டனர். ஜாப்ரியே உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். அவரது உடல் பாகங்கள் எதுவும் கண்டெடுக்கப் படவில்லை (முற்றிலுமாக அவர் கரித்துச் சாம்பலாக்கப்பட்டார்). குல்பர்க்கிலும், நரோடாவிலும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள், 6ம் தேதி மார்ச் 2002 அன்று அஹ்மதாபாத்திலுள்ள கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2007 செப்டம்பர் 1ம் தேதி கடைசியாக தெஹல்கா பஜ்ரங்கியைச் சந்தித்த போது, குல்பர்க் படுகொலைகளில் பங்கெடுத்த குற்றவாளிகளில் விஹெச்பியைச் சார்ந்த அதிகமானவர்களை தனக்குத் தெரியும் என்று கூறினான். விஹெச்பி அவர்களை முறையாக கவனிக்கவில்லை. எனவே அவசியப்பட்டால் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் வருத்தத்துடன் கூறினான். "குல்பர்க் குற்றாவாளிகளைச் சந்திப்பதற்காக 2007 செப்டம்பர் 8ம் தேதி அஹ்மதாபத்திற்கு பறந்து சென்றேன். பஜ்ரங்கியின் உதவியாளர்களில் ஒருவன் குல்பர்க் சங்கம் இருக்கும் பகுதியான மெகானின் நகருக்கு என்னை அழைத்து சென்றான். குல்பர்க் சங்கத்திற்கு எதிரேயுள்ள சாலையின் புறத்தில் சந்திப்பதற்கு முடிவு செய்தோம். பரபரப்பு மிகுந்த பார்ப்பதற்கு குளிர்ச்சியான பகுதியின் மையத்தில் அமைந்துள்ள குல்பர்க் சங்கம், மக்கள் யாருமில்லாமல் வெறிச்சோடி கிடப்பதைப் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு பயத்தை வரவழைக்கிறது. முன்னால் உள்ள இரும்பு கதவு, அதனுள் இருக்கும் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், மேல் கூரை என எல்லாம் ஒரே நிறத்தில் காட்சியளிக்கிறது -- அடுப்பு கரி கருப்பு நிறத்தில்.

கடைகாரர்கள், தெரு ஓர வியாபரிகள், பக்கத்தில் வசிப்போர், வழியாக செல்வோர் என எவரும் இந்த இடத்தை சற்று கூட ஏறிட்டும் பார்க்காமலேயே செல்கிறனர். இரண்டு உள்ளுர் விஹெச்பி தலைவர்கள் அங்கு வந்து சேரும் வரை 20 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்தோம். அதில் ஒருவன் பெயர் மஹேஷ் பட்டேல். இவனுக்கு பக்கத்திலேயே கடையும் உள்ளது. இவர்கள் இருவரும் காவல்துறையினரின் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் எவர்களுடைய பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கிறதோ அவர்களை இவ்விருவரும் அறிமுகம் செய்து வைத்தனர். மஹேஷ் பட்டேல் ஒரு வீட்டிற்கு என்னை அழைத்து சென்று, அவனுடைய இடத்திற்கு வந்து சேருமாறு குற்றவாளிகளுக்குத் தகவல் அனுப்பினான். குற்றவாளிகளுக்கு விஹெச்பி செய்தவற்றை பட்டேல் கூறும் போது- சிறையில் உணவு அளிப்பது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவது, சட்ட உதவிகள் வழங்குவது என விஹெச்பி செய்யும் உதவிகளை அடுக்கிக் கொண்டு சென்றான் (பட்டேலைப் பொருத்த வரை நான் ஒரு RSSகாரன், கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள் - குற்றவாளிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி மதிப்பீடு செய்ய டெல்லியிருந்து வந்திருப்பவன்)

சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு, பிரகலாத் ராஜு, மங்கிலால் ஜெயின் மற்றும் மதன் சாவல் ஆகிய மூன்று குற்றவாளிகள் வந்து சேர்ந்தனர் (39 ஹிந்துக்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தும் மூவரை மட்டுமே அன்றைய தினத்தில் சந்திக்க முடிந்தது). அவர்கள் தங்களது பேச்சைத் துவக்கும் போதே, விஹெச்பி குற்றவாளிகளை நன்றாகக் கவனித்து கொள்கிறது என்னும் பட்டேலுடைய கூற்றைத் தகர்த்தெறிந்தனர். (விஹெச்பி குறித்த) அவர்களுடைய குற்றச்சாட்டுகளின் பட்டியல் மிக நீளமானதும் கசப்பானதுமாகும். நான் அவர்களுடைய தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய எல்லா குற்றச்சாட்டுகளும் முறையாக சரியானவர்களிடம் எடுத்துச் சொல்லபடும், அவர்களுக்கு அதிகமான உதவிகள் விஹெச்பி மற்றும் RSSஆல் செய்து தரப்படும் என்ற உத்திரவாதத்தையும் அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். அவ்வாறு செல்லும் வழியில், மங்கிலாலை அவனது கைத்தொலைபேசி மூலமாக அழைத்து என்னை அஹ்மதாபாத் வானூர்தி நிலைத்திற்கு சமீபமாக நான் தங்கியுள்ள விடுதியில் வந்து சந்திக்குமாறு கூறி, அவனுடன் மற்ற இருவரையும் உடன் அழைத்து வரவும் கேட்டுக் கொண்டேன்".

இறைவன் நாடினால் தொடரும்....

Friday, February 22, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...20.

ஒரு குற்றவாளி கூட அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப் படவில்லை:

குற்றவியல் நடவடிக்கை சட்டத்தின் 164வது பரிவின் படி குற்றவாளிகளில் எவருடைய வாக்குமூலமும் ஒன்று கூட பதியப்படாத நிலையைப் பார்க்கும் போது, காவல்துறை வழக்கமாக நடத்தும் விசாரணைகள் மூலமாக ஏதாவது முக்கிய தகவல்கள் பெறுவதில் தோல்வியடைந்துள்ளார்கள்(?) என்பதை காட்டுகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக விஞ்ஞான ரீதியில் நடத்தபடும் சோதனைகளான உண்மையை கண்டறிதல் அல்லது ஆழ்நிலை உறக்கத்திற்குக் கொண்டு சென்று கேள்வி கேட்டல் அல்லது மூளையின் அதிர்வுகளை கண்டறியும் சோதனை போன்றவற்றை நாடியிருக்க வேண்டும். ஆனால் காவல்துறை இந்த வழிகளில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

கற்பழிப்புகள் குறித்து ஒன்றும் குறிப்பிடப்படவில்லை:

நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகளுக்காகத் தனித்தனியாக மூன்று குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள
து. ஆயினும், வன்முறை வெறியாட்டத்தின் போது உயிர்தப்பியவர்களில் டஜன்கள் எண்ணிக்கையிலானோர்கள், பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக சாட்சிகள் கூறிய போதிலும் ஒரு கற்பழிப்பு பற்றிக் கூட பதிவுகள் செய்யபடவில்லை. ஒரு பிரேத பரிசோதனை அறிக்கை சாவுக்குக் காரணம் பாலியல் பலாத்காரத்தால் இருக்க கூடும் என தெரிவித்திருந்தும் கூட, இந்த திசையில் ஒரு விசாரணைகளும் நடத்தப்படவில்லை. (இங்கே முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், 41 பிரேதங்களுக்குப் பிரேத பரிசோதனையே நடத்தப்படாத காரணத்தால், இவைகளில் எத்தனை பெண்களின் பிரேதம்? என்பதும், அவைகளில் பாலியல் பலாத்காரத்திற்கான வடுக்கள் ஏதும் இருந்தனவா? என்பதும் உறுதி செய்யபடவில்லை.)

சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைதொலைபேசி ஆராயப்படவில்லை:

படுகொலைகள் நடத்தப்பட்ட தினத்தன்று, உயிர் தப்பியவர்களில் ஒருவரான மிர்ஜா ஹுசைன் பீவி என்பவர் நரோடா பாட்டியாவிலுள்ள தனது வீட்டின் அருகிலிருந்து ஒரு கைதொலைபேசியைக் கண்டெடுத்துள்ளார். குற்றவாளிகளில் ஒருவன் தனது கவனக்குறைவால் தவறவிட்டு செல்லப்பட்ட இது காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் போது கூடுதல் காவல் ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு) AK சுரேலியா, இக் கைதொலைபேசி படுகொலைகளில் குற்றவாளியான அசோக் சிந்தி என்பவனுடையது என கண்டுபிடித்தார். மிகக் கடுமையாக விசாரணையை முடுக்கி விட்டு, பாபு பஜ்ரங்கி மற்றும் சிந்தி உள்பட பிறக் குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளைச் சுரேலியா சேகரித்தார். (குற்றவாளிகள் என கருதப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளைக் கேட்டு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சுரேலியா எழுதிய கடிதங்கள் தெஹல்காவிடம் உள்ளது. இன்னும் பஜ்ரங்கி எனபவனே அக்கொடிய சம்பவங்களின் "பின்னணியில் இருப்பதாக" தான் நம்புவதாக இவர் (சுரேலியா ) கைபட எழுதிய குறிப்புகளும் எங்களிடம் உள்ளது). ஆனால் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மேலே எடுத்து செல்வதற்கு முன்பே சுரேலியா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்ற பிறகு, சிந்தியின் கைதொலைபேசியின் அழைப்புப் பதிவுகளைப் பார்ப்பதையும் காவல்துறையினர் நிறுத்தி விட்டனர். குற்றவாளி ஒருவனுடைய கைதொலைபேசி குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக எந்தத் தகவலும், நரோடா பாட்டியா படுகொலைகள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றப் பத்திரிக்கைகளில் ஒன்றில் கூட குறிப்பிடப்படவில்லை.

குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளியின் கைதொலைபேசி பதிவுகள் இடம்பெறவில்லை:

விசாரணை அஹ்மதாபாத் காவல்துறையின் குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டவுடன், எல்லா குற்றவாளிகளின் கைத்தொலைபேசியின் பதிவுகளை சேகரிப்பதற்காக உதவி காவல்துறை ஆணையாளர் ராகுல் சர்மா நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். ஆனால், விசாரணை ஆரம்பித்த சில வாரங்களிலேயே, திடீரென இவர் இவ்விசாரணையை மேற்கொள்வதிலிருந்தும் நீக்கப்பட்டு, மற்றொரு உதவி காவல்துறை ஆணையாளரான DG வன்ஸாரா என்பரிடம் இவ்விசாரணை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தான் திரட்டிய தொலைபேசி அழைப்புகளின் எல்லா பதிவுகளையும் சர்மா நகல் எடுத்து வைத்துக் கொண்டதால், இவற்றை நானாவதி-ஷா ஆணையத்திடம் சமர்பித்தார். இந்தத் தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், நரோடா படுகொலைகள் நடந்தேறி கொண்டிருக்கும் வேளையிலே இக்கொடூர குற்றவாளிகள் தங்களுக்கிடையில் உணர்ச்சி வயப்பட்டவர்களாகப் பேசிக் கொண்டார்கள் என்பதை மிக வலுவான முறையில் உறுதிபடுத்தும் அத்தாட்சிகளாக அமைவதோடு மட்டுமில்லாமல், இன்னும் சம்பவ இடங்களில் அவர்கள் இருந்ததை உறுதி செய்யும் அத்தாட்சிகளாக அமைந்துள்ளது. இத்தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் எதுவும் ஆதாரங்களாக குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறவில்லை.

கைத்துப்பாக்கிகள் உபயோகிக்கப்பட்ட தகவல்களும் கூறப்படவில்லை
:

வன்முறை வெறிபிடித்த வெறியர்கள் கூரிய ஆயுதங்களை மட்டுமே கொண்டு சென்றதாக காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் (அவற்றில் ஒரேயொரு ஆயதம் மட்டுமே கைபற்றப்பட்டுள்ளது). வன்முறை வெறிபிடித்த வெறியர்கள் கைத்துப்பாக்கிகள் உபயோகித்தற்கான குற்றச்சாட்டுகளை காவல்துறை நிராகரித்து விட்டது. உயிர் தப்பியவர்களில் அதிகமானோர் எவர்கள் குண்டு காயங்களுக்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டார்களோ, அந்த மருத்துவ சிகிச்சைகளின் பதிவுகள் குற்றப்பத்திரிக்கையோடு இணைக்கப்படவில்லை. அதே நேரத்தில் குண்டு அடிபட்ட காயங்கள் பற்றிய குறிப்பு நான்கு மருத்துவச் சான்றிதழ்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இச் சான்றிதழ்கள் குற்றப் பத்திரிக்கையோடு இணைக்கபட்டுள்ளது. ஒரு பிரேத பரிசோதனை அறிக்கையும் மரணத்திற்கான காரணம் குண்டு காயங்களே என்று கூறுகிறது. இந்த 5 சம்பவங்களிலும், குண்டு துளைத்தால் உருவாகும் உள் மற்றும் வெளி காயங்களின் அளவுகள், இக் காயங்கள் சிறிய ரக கைத்துப்பாக்கியால் தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கியால் ஏற்பட்டவை அல்ல என்பதையும் தெளிவுபடுத்துகிறது. வன்முறையாளர்களைக் கலைப்பதற்காக காவலதுறையினர் 91 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டதாகச் சொன்னாலும், இவைகளின் போது எவரும் காயம் அடைந்ததாக ஒரு தகவலும் இல்லை. அப்படியானால் இந்த ஐந்து பேர்களுக்கும் குண்டு காயங்கள் எப்படி உருவானது? அவை குறித்து விசாரணை முழுமையும் அமைதியே நிலவுகிறது.

அடையாள அணிவகுப்புகள் நடத்தப்படவில்லை:

குற்றவாளிகளைப் பார்த்தால் நாங்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று, இரண்டு நரோடா படுகொலைகள் சம்பவத்தின் போது உயிர் தப்பிய டஜன்கள் எண்ணிக்கையிலான சாட்சிகள் கூறினர். ஆனால் அசோக் சிந்தியைத் தவிர வேறு குற்றவாளிகள் எவரையும் காண காவல்துறையினர் அடையாள அணிவகுப்புகள் நடத்தவில்லை. கும்பலாக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணைகளில், அடையாள அணிவகுப்பு நடத்துவது மிக முக்கியமானதாகும்.

கண்ணுக்குப் புலப்படாதக் கைகள்:

மனித இன அழிப்பு கொடூரத்தின் போது காவல்துறையினரின் பங்களிப்பைப் பற்றியும் இன்னும் மத்திய உள்துறை இணையமைச்சராக அப்போது பணியாற்றிய கோர்தான் ஜடாபியரா உள்பட சங்பரிவாரில் உள்ள முதன்மையானவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தெஹல்காவுடன் உரையாடிய சமயத்தில் அவர்களை வெகுவாக புகழ்ந்துரைத்தார்கள்.

அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள பல்வேறு கைகள் சம்பந்தபட்டிருக்கும் போது, இந்த அரசாங்கத்தை தலைமையேற்று நடத்தியவனும் அக்கொடூரங்களில் பங்கு பெற்றானா?

இந்தக் கேள்வியை தெஹல்கா பஜ்ரங்கியிடம் கேட்டது. நரோடா படுகொலை சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங்கி இதற்கு பதில் அளித்த போது, படுகொலைகள் நடந்து முடிந்தப் பிறகு இரண்டு முறை முதலமைச்சர் நரேந்திர மோடி நரோடாவிற்கு வருகை புரிந்தான் - படுகொலைகள் நடந்து முடிந்த மாலையில் முதல் தடவையாக வந்த போது அவன் நரோடாவின் உள்ளுக்குள் வரமுடியவில்லை; மறுநாள் இரண்டாவது முறையாக வந்த போது நரோடா பாட்டியாவின் உள்ளே சென்றான். இவ்விரு வருகைகளின் போதும் மோடி, இதுவரை செய்தவைகள் அனைத்தும் நன்று என்றாலும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் எனக் கூறி, கொலையாளிகளை உற்சாகப்படுத்தியதாகவும் பஜ்ரங்கி கூறினான்.

படுகொலைகள் நடந்து முடிந்த மாலையில் ச்சாரா நகருக்கு மோடி வருகைபுரிந்து வன்முறை வெறிபிடித்த வெறியர்களுக்கு மாலை அணிவித்துப் பாராட்டியதாக சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் உறுதிபட அறிவித்தான். மோடி மட்டும் காவல்துறையினரைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் படி கூறாது இருந்திருந்தால், இப்படுகொலைகளை நடத்துவது சாத்தியமாகி இருக்காது என பஜ்ரங்கி கூறினான். ஆனால் வன்முறை வெறிபிடித்த வெறியர்களுக்கான மோடியின் ஆதரவு, கொலைகளை எளிதாக செய்ய வழிவகை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. நரோடா கொலைகளுக்குப் பின் 4 மாதங்களுக்கும் மேலாக தான் மறைந்திருப்பதற்கும் பிறகு கைது செய்யும் நாடகத்தை நடத்துவதற்கும் மோடி உதவியதாக பஜ்ரங்கி கூறினான். இதுவோடு மட்டும் மோடியின்உதவிகள் நின்றுவிட்டதா? என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து சாதகமான நீதிபதியை நியமித்து பஜ்ரங்கியைப் பிணையில் விடக் கோரும் மனுவை விசாரிக்க வைத்து பஜ்ரங்கி சிறையிலிருந்து வெளியில் வரவும் மோடி உதவினான்.

திகிலூட்டிய பாதுகாப்பான வீடு
இந்த உபத்தலைப்பின் கீழ்வரும் தகவல்கள் விரைவில் இறைவன் நாடினால்......

Monday, February 11, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...19.

முக்கியச் சான்றுகள் அழிக்கப்பட்டன:

வன்முறைகள் நிகழ்த்தப்பட்டக் காட்சிகளும் நிகழ்விடங்களும், விசாரணை நடத்துபவர்களுக்கு மிக முக்கியமான சான்றுகளாகும். நரோடா பாட்டியாவிலும் இன்னும் நரோடா காவ்னிலும், காவல்துறையினர் மிக நேர்த்தியாக அனைத்துச் சான்றுகளையும் முற்றிலுமாக அழித்ததனால் ஒரு வழக்கிலிருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஒரு குழிக்குள் வைத்து அதிகமான பேர் எரிக்கப்பட்டச் சம்பவம் விசாரிக்க கூடப்படவில்லை - மனித திசுக்களின் தடயங்களோ அல்லது சிந்தப்பட்ட எரிபொருள்களின் தடயங்களையோ அம் மண்ணிலிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக, படுகொலைகள் பற்றிய காவல்துறையின் கூற்றில் இந்தக் குழியைப் பற்றியத் தகவல்களே இடம்பெறவில்லை. தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட 7 பேர்களின் மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. இவர்களில் இருவர் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை கொடுக்கபட்டப் பின்பும் மார்ச் 11ம் தேதியன்று இறந்து விட்டனர். இவர்களுடைய வாக்கு பிரமாணங்கள் ஏன் பதியப் படவில்லை என்பது பற்றி எந்தவொரு விளக்கமும் குற்றப் பத்திரிக்கையில் வரவில்லை.

பாஜக சட்டமன்ற மன்ற உறுப்பினர் (MLA) குற்றச்சாட்டுகளிலிருந்து நீக்கப்பட்டாள்:

நரோடா படுகொலை சம்பவங்களின் போது உயிர் தப்பியவர்கள், "உள்ளூர் MLA-வான மாயாபென் கோட்னானி தான் வன்முறை வெறியர்களைக் கொலைகள் செய்வதற்கு ஊக்குவித்தாள்" என்று பெயர் குறிப்பிட்டு கூறினார்கள். ஆனால் இம்மனிதப் பேரழிவு பற்றியக் குற்றப்பத்திரிக்கையில், இவளது பெயர் குற்றம் சாட்டப்பட்டக் குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து காவல்துறையினரால் நீக்கம் செய்யப்பட்டது. இதற்குக் காவல்துறையினரால், "இவருக்கு எதிராக எந்தச் சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை" என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் படுகொலைகள், வன்முறைகளில் இவளுடைய பங்குகள் மிகப்பெரிய அளவில் இருந்ததாக ரிச்சர்ட் கூறினான். மாயாபென் நாள் முழுவதும் நரோடா பாட்டியாவின் தெருக்களில் சுற்றி வந்தவளாய் வன்முறையாளர்கள் முஸ்லிம்களைக் கொன்றொழிக்குமாறு ஊக்குவித்தாள் என ரிச்சர்டும் இன்னும் அவனுடன் சேர்ந்து இப்படுகொலை சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரகாஷ் ரத்தோடும் கூறினார்கள்.

நூரானி மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படவில்லை:

குற்றம் நிகழ்ந்த நூரானி மசூதி இடத்தில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் அசோக் லேய்லண்ட் டாங்கர் லாரி, அதன் பின் பகுதி மசூதியின் சுவரில் ஒட்டியிருக்கும் நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த லாரியின் முன்பகுதியிலுள்ள எண் தகடு எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் இருந்துள்ளதோடு, அந்த லாரியின் எண் GT-1T 7384 தெளிவாகப் படிக்கும் விதத்திலும் இருந்துள்ளது. ஆனால் இந்த லாரி பறிமுதல் செய்யப்படவில்லை. இதனுடைய உரிமையாளரைக் கண்டுபிடிக்க வட்டார போக்குவரத்து அலுவகத்தைத் தொடர்பு கொள்ளவில்லை. தடயவியல் பரிசோதனை செய்வதற்காக அதிலுள்ள பொருளிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. 12க்கும் அதிகமான காவல்துறையினரால் தொடர் கண்காணிப்பில் உள்ள பகுதியான நூரானி மசூதிக்கு மிக அருகில் இவ்வளவு பெரிய டேங்கர் லாரி எப்படி ஊடுருவ முடிந்தது என்பது உண்மையில் இன்றும் மர்மமாகவே இருக்கிறது.


தலைமறைவான முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை:

குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்ட உடன் அநேக முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர். பாபு பஜ்ரங்கி, கிஷன் கோரனி, பிரகாஷ் ரத்தோட் இன்னும் சுரேஷ் ரிச்சர்ட் போன்றவர்கள் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு முன்று மாதங்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டனர். பிபின் பன்ச்சால் என்பவன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பே கைது செய்யப்பட்டான். குற்றவாளி தலைமறைவானால் பொதுவாக செய்யப்படும் நடவடிக்கைகளான, தலைமறைவான குற்றவாளி என்னும் எச்சரிக்கை அறிவிப்பை அவனது வீட்டுக்கு வெளியே ஒட்டுவது, அவனது சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் எதையும் காவல்துறையினர் செய்யவில்லை.

குற்றத்தை ஒப்புக் கொணடதாகப் பதிவு ஒன்று கூட இல்லை:

நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள், காவல்துறையால் விசாரிக்கப்படுவதற்காக ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு போலீஸ் காவலில் கொண்டுச் செல்ல நீதிமன்றத்தால்அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் காவலும், விசாரணைகளும் வெறும் கபட நாடகமாகவே அமைந்தது. இரண்டு நரோடாக்களிலும் நடத்தப்பட்டப் படுகொலைகள் சம்பந்தமாக, குற்றவாளிகள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொணடதாக ஒரு பதிவு கூட குற்றப்பத்திரிக்கைகளில் இணைக்கபடவில்லை.

ஒரே ஒரு ஆயுதம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது:

2004ல் பிபின் பன்ச்சாலிடம் இருந்து கைபற்றபட்ட ஒரே ஒரு வாளைத் தவிர, வேறு ஆயுதங்கள் ஏதும் வன்முறை சம்பவங்கள் நடந்த இடத்திலிருந்தோ அல்லது குற்றவாளிகளிடம் இருந்தோ காவல்துறையினரால் கைபற்றப்படவில்லை. ஆனால், "குற்றம் சாட்டப்பட்ட கொடியவர்கள் உட்பட தங்களைத் தாக்கியக் காட்டுமிராண்டி கயவர்கள் அனைவரும் பல்வேறு வகையான கொடிய ஆயுதங்களான கத்திகள், வாள்கள், சூலாயுதங்கள், எரிவாயு உருளைகள், கைத்துப்பாக்கிகள் போன்ற உயிருக்கு ஊறுவிளைவிக்கும் ஆயுதங்களைத் தாங்கியிருந்தனர்" என்று வன்முறை வெறியாட்டத்தின் போது உயிர்தப்பியவர்கள் சாட்சி கூறியுள்ளார்கள். 105 பேர் ஈவு இரக்கமின்றி கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கூட ஆயுதங்கள் ஒன்றும் கைபற்றப்படாததே, விசாரணைகளின் தரம்கெட்டத் தனத்தின் அளவை பறைசாற்றுவதாக உள்ளது.

இன்னும் சொல்லப் போனால், இனஅழிப்பு அக்கிரமங்கள் நிகழ்த்தப்பட்ட தினத்தன்று தனது கிடங்கிற்கு அறிமுகமில்லாத 20 பேர் மாருதி வேனோடு வந்திறங்கி எக்கச்சக்கமான வாயு உருளைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக வாயு உருளைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் வாக்குமூலம் எழுதிக் கொடுத்துள்ளார். இச்சம்பவம் நடைபெறும் போது தனது நிறுவனத்தின் காவலாளியும் இருந்ததாகக் கூறினார். ஆனால், காவலாளியின் வாக்குமூலம் பதியப்படவில்லை. மட்டுமல்லாது கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்கவோ அல்லது இக்குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Saturday, February 2, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...18.

வஞ்சிக்கப்பட்ட மற்றுமோர் பெண் 22 வயதான சுபியா பானு, தன் தந்தையின் முன்னாலே கற்பழிக்கப்பட்டு எரிக்கப்பட்டாள். அவள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் பலனின்றி இறந்த அரசு மருத்துமனை அவள் மீதான தாக்குதல்களை உறுதி செய்தது. நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு சாட்சியளித்த அவளது தந்தை அப்துல் மஜீத், தனது மகளைக் காப்பற்ற முயன்ற போது, அவர் மிருகத்தானமான முறையில் தடுத்து தாக்கப்பட்டதோடு அவருடைய தாடியும் வெட்டப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

சுபியா பானு தவிர அந்த குடும்பத்தில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். 3 பையன்கள் - மஹ்முது, அய்யூப் ஹுசைன், இரண்டு சிறுமிகள்- அப்ரின் பானு, சாஹின் பானு இன்னும் இவர்களுடைய தாயார் லாலிபீவி. 22 வயதான சுபியா உடன் பிறந்தவர்களில் மூத்தவள், 7 வயதான ஹுசைனும் 4 வயதான சாஹின் பானுவும் மிகச் சிறியவர்கள்.

காவல்துறை ஆணையாளர் PC பாண்டே நடுஇரவில் சுமார் 1 மணியளவில் நரோடா பாட்டியாவிற்கு வந்தான். அழிவுகளின் கோரத்தை ஆய்வு செய்து விட்டு, ஹல்திகாடி போர்களங்களை விடவும் கோரமாக இந்த இடம் காட்சியளிக்கிறது என்று PC பாண்டே சொன்னதாக, பஜ்ரங்கி கூறினான். படுகொலைகள் நடந்த தினத்தன்று பாஜக சட்டமன்ற உறுப்பினரான மாயாபென் கோட்னானி நரோடாவை சுற்றி வலம் வந்தவளாக, வன்முறையாளர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முஸ்லிம்களைக் கொல்லுமாறு அவர்களை உற்சாக மூட்டியதாக ரிச்சர்ட் தெஹல்காவிடம் தெரிவித்தான். இதை விட மோசமானது என்னவென்றால், ஒவ்வொரு அடிக்குப் பின்னும் விழுந்த படுகொலைகளின் எண்ணிக்கையை கை தொலைபேசி மூலமாக விஹெச்பி பொதுசெயலாளரான ஜெய்தீப் பட்டேலுக்கு பஜ்ரங்கி தெரிவித்ததாகும். இந்த ரகசியத்தை பஜ்ரங்கியே வெளிப்படுத்தினான். கை தொலைபேசியின் தொடர்பு இழக்கும் வரையிலும், ஒவ்வொரு சமயமும் தற்போதைய நிலவரத்தை 11 தொலைபேசி அழைப்புகள் மூலம் பட்டேலுக்கு அவன் (பஜ்ரங்கி) தெரிவித்தாகவும் கூறினான்.

அதே மாலையில் அப்போதைய உள்துறை ராஜாங்க மந்திரியான கோர்த்தன் ஜடாபியாவை அழைத்து தான் செய்தக் கொலைகள் எத்தனை என்ற விபரத்தை அளித்து விட்டு, இப்போது ஜடாபியா தான் சட்டத்தின் பிரச்சனைகளிலிருந்துத் தன்னை நீக்கி வைக்க வேண்டும் என்று சொன்னதாகவும் பஜ்ரங்கி கூறினான். அன்றிரவு படுக்கைக்கு தான் மஹாராணா பிரதாப் போன்ற உணர்வோடு சென்றதாகவும் கூறினான். நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட அவ்விடங்களை பார்வையிட அன்று மாலை வந்த போது அவனைச் சந்திக்க பஜ்ரங்கி முயலவில்லை. நரோடா பாட்டியாவின் உள்பகுதிகளுக்கு பார்வையிட மோடி செல்லவேயில்லை என்றும் பஜ்ரங்கி கூறினான். "அன்றைய தினம் நரோடா பாட்டியாவில் நுழைய கடவுளுக்குக் கூட சக்தியில்லை" என்று (ஆணவத்தோடு) பஜ்ரங்கி கூறினான்.

காவல் துறையின் பங்கு:

"காவல்துறை மட்டும் மறுபக்கம் திரும்பிக் கொள்ளாமல் (கண்டு கொள்ளாமல்) இருந்திருந்தால், இக்கொலைகளை செய்வது ஒரு போதும் சாத்தியமாகி இருக்காது" என்று உறுதி பட தனது எண்ணத்தை பஜ்ரங்கி கூறினான். சமூக குடியிருப்புகளைப் போல, நரோடா பாட்டியாவிற்கு ஒரேயொரு நுழைவுதான் உண்டு. காவல்துறையினர் சுமார் 50 பேர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். "எங்களை அவர்கள் வேறு வேறாக கிழித்து எடுத்திருக்க முடியும்" என்றும் அவன் சொன்னான். "ஆனால் அவர்கள்(காவல்துறையினர்) எல்லாவற்றையும் பார்த்தும் கூட தங்களது கண்களையும் வாய்களையும் மூடிக் கொண்டார்கள்". (வன்முறை கும்பலால்) தாக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே காவல்துறையினரும் சுட்டதாக ரிச்சர்ட் கூறினான். இரவின் பின் பகுதியில் வன்முறைகள் கிட்டத்தட்ட ஓய்ந்துவிட்ட நிலையில், பள்ளங்களில் ஒளிந்திருந்த முஸ்லிம்களைக் கொல்லுமாறு சில காவல்துறையினரே ச்சாராக்களிடம் விஷேடமாக கூறினார்கள்.

மூடி மறைக்கபட்டவை:

2002 படுகொலைகளின் போது பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடி வரும் "உதவி நடவடிக்கை (ஆக்ஷன் எய்டு)" என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் அஹ்மதாபாத் பிரிவை சார்ந்த வழக்கறிஞர் சோம்நாத் வாஸ்தா எனபவருடைய ஒததுழைப்போடு தெஹல்கா, நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகள் பற்றிய காவல்துறையினரின் விசாரணைகள் மற்றும் குற்றபத்திரிக்கைள் ஆகியவைகளின் பதிவுகளை குறித்து மிக நுணுக்கமாக பகுப்பாய்வு செய்தது. குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவே முடியாத அளவுக்கு மூடி மறைப்பதில் காவல்துறையினர் மிகப்பெரிய அளவில் மூடி மறைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் காண முடிந்தது.

குற்றங்களின் அளவை குறைத்து காண்பிப்பதற்காக பிணங்கள் அப்புறபடுத்தப்பட்டன:

படுகொலைகள் முடிவுற்ற பின், காவல்துறைக்கு முன்னால் இருந்த முதல் கடமை இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாகத் தான் இருந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால், மக்கள் சமூகத்திலிருந்து வரும் கண்டணங்கள் மிக அதிக கூக்குரலுடன் இருக்கும். காவல்துறையினர் நரோடா பாட்டியாவில் சுற்றி வந்து அங்கு கிடந்த உடல்களை எடுத்து நகரம் நெடுகவும் உள்ள பிற பகுதிகளில் தூக்கி வீசினார்கள் என பஜ்ரங்கி விளக்கமாக சொன்னான்.

"அவைகள் டிரக்குகளில் குவிக்கப்பட்டு இருந்தது அதிகமான வண்டிகள் தேவைப்பட்டது. சில போலீஸ் ஜீப்களிலும் கூட நிரப்பப்பட்டது. இரண்டாவது முறையாக உடல்கள் சேகரிக்கபட்டுப் பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது தான், அவைகள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று இடங்களின் விபரம் எல்லாம் பதிவு செய்யப்பட்டது. இந்த முறையில், காவல்துறையினரால் இறந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக குறைக்கபட்டு, 97 எண்ணம் நரோடா பாட்டியாவிலிருந்து என்றும் 8 எண்ணம் நரோடா காவ்னிலிருந்து என்றும் காட்டப்பட்டது. நரோடாவிலிருந்து 105 பிரதேங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப் போது கொண்டு வரப்பட்டது போலவும், இன்னும் சில பிரேதங்கள் படுகொலைகள் நடந்து முடிந்தப் பிறகு நான்கு நாட்களாக கொண்டு வரப்பட்டவை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் காட்டுகின்றது.

41 பிரேதங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தவில்லை:

இவ்வாறாக ஒரு ஆதாரம் அழிக்கபட்ட பின்பு, காவல்துறை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. கருகிய நிலையிலும், துண்டு துண்டாக வெட்டபட்டதாகவும், குண்டு காயங்கள் உடையதாவும், கூரிய ஆயுத காயங்களின் அடையாளங்கள் உடையதாகவும் இன்னும் கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் உடையதாகவும் உள்ள பிரேதங்கள் கொடிய படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதன் உறுதியான நிரூபணமாக ஆகுவதோடு, அரசு நிர்வாகத்தினுடைய பங்கெடுப்பையும் காட்டுவதாக அமைந்துவிடும். இவ்வன்முறைகள் தன்னிச்சையான முறையில் நடந்தவைகள் அல்ல மாறாக ஒழுங்காக முறையாய் திட்டமிடப்பட்டு நடத்திய படுகொலைகள் என்பதற்கான மிக வலுவான சாட்சியாகவும் அமைந்துவிடும். எனவே காவல்துறையினர், நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்னிலிருந்து கொண்டு வரப்பட்ட 41 பிரேதங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தவில்லை. இத்தகைய மோசமான அலட்சியப் போக்கிற்கும் புறக்கணிப்பு செய்யபட்டதற்கும் எவ்வித விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.

இரண்டு சுதந்திரமான சாட்சிகள் அல்லது பண்சாகள் என்பவர்களைக் கொண்டு எங்கிருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டன?, எத்தகைய காயங்கள் உடலில் காணப்பட்டன? என்பன போன்றவற்றை உறுதிப்படுத்தி, பின்னர் இத்தகவல்கள் எழுதி பதிவு செய்யப்படும் சட்ட நடவடிக்கையான "பண்சாமாக்கள்" எனப்படும் விசாரணை 97 பிரேதங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. இவ்வாறு தங்களது சொந்த பதிவு அறிக்கைகள் படி 97 பிரேதங்கள் நரோடா பாட்டியாவிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விசயம் என்னவென்றால், 58 பிரேதங்களுக்கே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நரோடா காவ்னிலிருந்து எடுக்கப்பட்ட பிரேதங்களில் இரண்டிற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை.

அன்றைய தினம், காட்டுமிராண்டிதனமாக கொடூரமான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கு மறுக்க முடியாத சான்றுகள் கொடுக்கப்பட்ட பிறகும், நேர்மையான முறையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டிருக்குமானால், கொலைகள் நடத்தப்பட்ட நேரங்கள் அறியப்பட்டிருக்கும். அதன் மூலம் இக்கொடூர படுகொலைகள் மொத்தத்தில் எவ்வளவு நேரத்திற்குள் நிகழ்த்தப்பட்டன என்னும் தகவலை ஓர் அளவுக்கு சரியாகத் தந்திருக்க முடியும். இத்தகைய தகவல்கள் நீதிமன்றத்தில் மிக வலுவான சான்றுகளாக இருந்திருக்கும். ஆனால் இதை தான் காவல்துறை கண்டிப்பாக விரும்பவில்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...