Tuesday, May 2, 2006

சூரிய நாராயணன்!

சகோதரர் ஆசிப் அவர்களின் பதிவில் எழுதிய பின்னூட்டத்தை இங்கு மீழ் பதிவு செய்கிறேன்.

//டோண்டு என்ன சொல்ல வருகிறார் ?ஒவ்வொரு முஸ்லிமும் வரிசையாக வந்து இவரிடம் கண்டனத்தை பதிவு செய்தால் தான் ஒத்துக்கொள்வாராமா?//

ஆமா! அப்படி ஒவ்வொருவரா பதிவு செய்தா மட்டும் ஒத்துக் கொள்வார்களா என்ன? அவர்களின் நோக்கமே அதுவல்லவே! அப்படி ஒவ்வொருவரா பதிவு செய்தால் அதனை இப்படியும் வியாக்கியானப் படுத்துவார்கள்.

//உங்களின் நோக்கம் இத்தகைய பாதகச் செயல்களுக்குப் பின் இருக்கும் மதவெறியை மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கச் செய்வதோ என ஐயுறுகின்றேன்.//

இதிலிருந்து தெளிவாகத் தெரிவது என்ன? எப்படியாவது முஸ்லிம் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு துணைப் போகுபவர்களாகவோ சித்தரிப்பது. அதன் மூலம் சமூகத்தில் அவர்களின் நியாயமான கருத்துக்களை இருட்டடிப்புச் செய்து விட்டு தங்களை சமூக நல்லிணக்கவாதிகளாக காட்டிக் கொள்வது.

ஆமாம், நான் தெரியாமல் தான் கேட்கிறேன், இங்கு நான் வருந்துகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியவுடன் தங்களது துணையை இழந்து தவிக்கும் சகோதரர் சூரிய நாராயணனின் குடும்பத்திற்கு சமாதானம் கிடைத்து விடுமா?

இங்கே இருந்து கொண்டு இதனைக் குறித்து விவாதித்துக் கொண்டிருப்பதை விட ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டிருப்பதை விட, ஆக்க பூர்வமான வேறு பல வழிகளைக் குறித்தும் சிந்திக்கலாமே.

முடிந்தால் அக்குடும்பத்தை நேரில் சென்று கண்டு உங்கள் சகோதரர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறி வரலாம். முடியாதவர்கள் ஒரு கடிதம் மூலமாகவாவது அதனைத் தெரிவிக்கலாம். அக்குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தகுந்த ஓர் அடித்தளம் அமைத்துக் கொடுப்பதைக் குறித்து சிந்திக்கலாம்.

மேலும் இது போல் சம்பவம் நடக்காமல் இருக்க இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு செல்பவர்களின் பட்டியல் தயார் செய்து அவர்களின் பாதுகாப்புக்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய முன்னராகவே ஆப்கன் அரசாங்கத்தை வலியுறுத்தலாம். ஏற்கெனவே அங்கு இருப்பவர்களின் பட்டியலை அதிவிரைவில் தயார் செய்து அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை அந்த அரசாங்கத்திடமிருந்து பெற இந்திய அரசாங்கத்தை நாம் வலியுறுத்தலாம்.

இதில் ஒன்றும் பங்கு கொள்ள முடியாதவர்கள் தனது இரங்கலை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்தலாம். அதில் ஒரு வகையே இப்பதிவும்.

ஆனால் இங்கு நடப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே இந்த சம்பவத்தினால் இவர்கள் கவலையடைந்தவர்களாகவோ அக்குடும்பத்தின் மேல் பரிதாபப் படுபவர்களாகவோ காண முடியவில்லை. தனது இரங்கலைத் தெரிவிக்க வரும் இடத்திலும் தங்கள் ஆழ்மன வெறுப்பை வாந்தியெடுக்க ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது போல் வெறுப்பை உமிழ்ந்து செல்லும் கல் நெஞ்சக் காரர்களை எந்த ரகத்தில் சேர்க்க?

கிடைக்கும் சந்தர்ப்பங்களை(நாட்டில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும்) மிகச் சரியாய் தங்களது வளர்ச்சிக்கு பயன் படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி கும்பலுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். தன் விஷத்தைக் கக்க ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்திருக்கும் கயவர்களை ஒத்திருக்கிறது இவர்களின் செயல்.

இப்படிப்பட்ட மனோபாவத்தை இவர்கள் விட்டுத் தொலைக்க இறைவனிடம் பிரார்த்திப்பதை விட கூடுதலாக வேறு என்ன செய்ய முடியும். இவ்விடத்திற்கு சம்பந்தமில்லை எனினும், உலகில் எங்கெல்லாம் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் ஒருவர் ஒரு தவறை இழைத்து விட்டால் அதனை உடனேயே இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி இஸ்லாத்தை "பயங்கரவாத", "தீவிரவாத" மார்க்கமாக சிலர் சித்தரிக்க முயல்வதால், சகோதரர் தமிழினி பதிவில் இது தொடர்பாக நான் வைத்த ஒரு விளக்கத்தை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.

//வன்முறை, அதுவும் அப்பாவி மக்களின் மீது வன்முறை என்பதை வழிமுறையாக கொண்ட எந்த இயக்கமும் எதையும் சாதித்துவிடமுடியாது.

ஏனென்றால் மூலப்புத்தகத்தில் உள்ள சில தகவல்களை மற்றும் கருத்துக்களை அடிப்படையாக கூறித்தான் தீவிரவாதிகள் இயங்குகிறார்கள்.//

இவ்வார்த்தைகளில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்துவது போல் தெரிகிறது. ஒரு வேளை நான் விளங்கிக் கொண்டதில் உள்ள தவறாகக் கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும் இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

இஸ்லாம் அதனுடைய மூலப் புத்தகத்தின் மூலம் ஒரு போதும் தீவிரவாதத்தை வளர்க்கவில்லை. தவறாக விளங்கிக் கொண்ட சிலரால் தவறுகள் நடக்கும் பொழுது அதனை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்துவது தான் ஏன் என்று புரியவில்லை.

இஸ்லாம் அநியாயம் இழைக்கப்பட்ட மக்களுக்காக(கவனியுங்கள், இங்கு முஸ்லிம்களுக்காக என்று கூறவில்லை. அநியாயம் இழைப்படுகிற அடக்கி ஒடுக்கப் படுகிற எல்லா மக்களுக்காகவும் என்று தான் கூறுகிறது) அநியாயம் இழைப்பவர்களோடு, ஏகாதிபத்தியவாதிகளோடு போராட சொல்கிறது. அவ்வாறு போராடும் பொழுது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும் அனுமதிக்கவில்லை.

போராளிகளுக்கு என்று சில வரம்புகளையும் இஸ்லாம் விதிக்கிறது.

முக்கியமாக,
1. அநியாயம் யார் செய்கிறானோ அவனை மட்டுமே இலக்காக வைக்கவும், அவ்வாறு இலக்கு வைக்கும் போழ்து எந்த விதத்திலும் வரம்பு மீறாமலும்(அதாவது மிகக் கொடூரமாக பழிவாங்கல், கழுத்தை அறுத்தல், படு மோசமாக சித்திரவதை செய்தல் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்யாமல்) இருக்க அறிவுறுத்துகிறது.

2. என்ன காரணம் கொண்டும் பெண்கள், சிறுவர், வயோதிகர், நோயாளி, எதிர்த்து தாக்க சக்தி அற்றவர் போன்றவர்களை இலக்காக வைக்கக் கூடாது எனக் கூறுகின்றது. மட்டுமல்ல அவர்கள் இருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது எனக் கூறுகிறது.

3. இதையும் மீறி அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டால் அது இவ்வுலக மக்கள் அனைவரையும் கொல்வதற்கு சமம் என்று கூறி அப்பாவியைக் கொல்வதை மிகக் கொடிய பாவமாக ஆக்குகிறது.

உண்மையில் மூல புத்தகத்தைப் படித்து இஸ்லாம் கூறுகிறது என்பதற்காக அடக்கி ஒடுக்கப் பட்டவர்களுக்காக போராட வருபவர்கள் இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு போராடுபவர்கள் மட்டுமே.

பாதியை எடுத்துக் கொண்டு பாதியை பேணாமல் அல்லது அறியாமல் அப்பாவிகள் மீது தாகுதல் தொடுப்பவர்களை எப்படி இஸ்லாத்திற்காக போராடுபவர்கள் என்று எடுத்துக் கொள்ள இயலும்.

//சங்பரிவாரை எதிர்ப்பவர்கள் பின்லேடனை ஆதரிப்பவர்கள் என்பதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

ஊசி நுழையும் இடத்தில் புல்டோசரையே நுழைக்கும் சங்பரிவாரின் பிரச்சார சூழ்ச்சியில் விழுந்து மேலும் மேலும் இஸ்லாமியர் தனிமைப்படும் அபாயம்தான் இங்கு உள்ளது.
இந்த நிலையை மாற்றுவதுதான் முஸ்லீம் அறிவுஜீவிகளின் தலையாய கடமை.//

மிகச் சரியாக சங்க்பரிவாரின் சூழ்ச்சியை தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். நிச்சயமாக ஒவ்வொரு முஸ்லிமும் தீர்க்கமாக சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டிய வரிகள் இவை. தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிம் செய்ய வேண்டிய முதல் செயலும் இதுவாக அமைந்தால் வருங்காலத்திலாவது இச்சமூகத்தின் மேல் சுமத்தப் பட்டிருக்கும் அவதூறு மாற ஒரு வழி பிறக்கும்.

நீங்கள் இவ்வளவு தெளிவாக சில விஷயங்களை நடுநிலையோடு அணுகியிருந்தும் அதனுடைய நியாயத்தை ஏற்றுக் கொள்ளாத சிலரின் பின்னூட்டம் எனக்கு மிக்க வியப்பை அளிக்கிறது. ஏன் இந்த சமூகத்தோடு இத்தனைக் காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறார்கள் என்பது இன்னும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.


எனவே நான் அனைவருக்கும் விரும்பி கேட்டுக் கொள்வது,

இஸ்லாத்தின் பெயரைக் கூறி யாராவது இது போன்ற காட்டுமிராண்டி செயல்களில் ஈடு பட்டால் அவர்களை தயவு செய்து இஸ்லாத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள். அவர்களை கண்டியுங்கள். எதிர்ப்புகளை பதிவு செய்யுங்கள். முடிந்தால் அவர்களை அழிக்க/அழித்து ஒடுக்க ஆன காரியங்களைப் பாருங்கள். நிச்சயமாக இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றும் ஓர் முஸ்லிம் செய்ய வேண்டிய கடமை என்ற அடிப்படையில் அநியாய/அக்கிரமக்காரர்களுக்கு எதிராக நாங்களும் உங்களுடன் தோள் இணைந்து செயலாற்றுகிறோம்.

கடைசியாக,

தனது துணையை இழந்து தவிக்கும் சகோதரர் சூரிய நாராயணனின் குடும்பத்திற்காக இறைவனிடம் பிராத்திப்பதோடு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இறைவன் மனஆறுதலைக் கொடுத்து, இழந்த துணைக்கு பகரமாக அவர்கள் ஆறுதல் அடையும் விதத்தில் தனது புறத்திலிருந்து ஓர் துணையையும் ஏற்படுத்திக் கொடுப்பானாக. அதோடு அநியாய/அக்கிரமக்கார காட்டுமிராண்டிக் கூட்டத்தை விட்டு எங்களைப் பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.