Tuesday, October 11, 2005

மதமாற்றமல்ல - மனமாற்றம் - 2

**************************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
**************************************************************

அருமை நண்பர்களே!

ஜாதி தெய்வீகமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே, ஜாதியோடு இணைக்கப்பட்டிருக்கும் புனிதத்தையும் - அதில் காணும் தெய்வீகத்தையும் முதன் முதலில் சமூக சீர்திருத்தம் காணவிரும்பும் நீங்கள் அகற்றவேண்டும். அதாவது ஜாதியமைப்பு முறைக்கு வேத சாஸ்திர பிண்ணனி இல்லை என்று நீங்கள் நிரூபிக்கவேண்டும்.

நான் கூறுகிறேன் நமது நாட்டில் ஜாதிகள் சமூகத்தில், பக்கவேர், சல்லிவேர், ஆணி வேரடித்து அது பற்றிப் படர்ந்து பலன் பெற்றுள்ளதென்று. ஜாதிகளை இந்து சமயம் புனிதமாகக் கருதி பாதுகாத்து வருகிறது இன்றும். வர்ணாசிரம தர்மப்படி இந்து சமயத்தின் ஜாதியமைப்பு முறைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆகவே, தீண்டாமைக்கு மூலக்காரணமாக இருக்கும் "ஜாதியை" ஒழிக்காமல் எப்படி தீண்டாமையை ஒழிக்கப்போகிறீர்கள்? எனவே தான் நான் இங்கு அழுத்தமாக கூற விரும்புவது இன்றைய சமூக சூழ்நிலையில் சாதிகள் ஒழிந்தாலே தீண்டாமை ஒழிந்திட வாய்ப்புண்டு. இந்துக்கள் வர்ணாசிரம கொள்கையை கடைப்பிடித்து வருவதால் பல்வேறு சாதிகளை கொண்ட இந்துக்கள் ஒருவருக்கொருவர் - நேசமோ, இணக்கமோ கொள்வதில்லை.
அதனால், ஒரு இந்து மற்றொரு இந்துவை சகோதரனாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறான். இருந்தும் நாங்கள் இந்துக்களே என்று துணிந்து கூச்சப்படாமல் அந்நியனிடம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். இந்து சமூகம் என்பது உண்மையில் பல்வேறு ஜாதிகளை சார்ந்த ஒரு கதம்பமே ஆகும். ஒவ்வொரு சாதியும் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதே, தனது உயிர் இலட்சியமாக மதிக்கிறது. பல இந்து ஜாதியாரும் ஒரு சமஷ்டியாக கூட சேர்வதில்லை. இந்து-முஸ்லீம் கலகம் ஏற்படும் காலங்களில் அல்லாமல் மற்ற காலங்களில் தமக்கு பரஸ்பர தொடர்பு உண்டு என்று இந்து ஜாதிகள் உணர்வதில்லை. இதனால் இந்துக்கள் ஒரு சமூகமாகவோ ஒரு நேஷனாகவோ ஐக்கியப்படாமல் இருக்கிறார்கள். ஜாதி ஏற்பாடே இதற்கு தடையாக - முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆனால், தேசாபிமான மேலீட்டினால் இந்தியா ஒரு (நேஷன்) நாடு அல்ல என்று ஒப்புக்கொள்ள நம்மில் பலர் தயங்குகிறோம்.

இந்தியர்களிடையே பலதரப்பட்ட வேற்றுமைகள் சடங்காச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் காரணமாக வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை இருப்பதாக நம்மில் பலர் இங்கு மழுப்புகிறார்கள். இந்துக்களுக்குள்ளே கை வலுத்தவன் மற்றவர்களை இம்சிக்கிறான். பலசாலிகளோ பலவீனனை அடிக்கிறான்.
அன்பர்களே, அரசியல் கொடுமையை விட இந்த சமூகக் கொடுமை மிக பயங்கரமானது, துன்பம் நிறைந்தது. ஒரு ஜாதி எவ்வளவுக்கு கீழானதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அந்த உரிமைகளும் குறைவானதாகவே இங்கு இருக்கின்றன. இந்த உயர்வு தாழ்வு காரணத்தினால் ஜாதி ஏற்பாட்டை ஒழிக்க மக்களை ஒன்று சேர்ப்பது முடியாத காரியமாக இருக்கிறது. எந்த ஜாதியாவது தனக்கு உயர்வான ஜாதியோடு சரிசமமாக நடக்க விரும்பினால் அது விஷமத்தனம் என்று உங்களால் தடுக்கப்படுகிறது. நமது நாட்டை பொறுத்தமட்டில் பிறப்பினால் ஒருவனுடைய ஜாதியும் தொழிலும் முன்னாடியே நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. எனவே ஒரு சமூகம் விருத்தியடைய வேண்டுமானால் ஒவ்வொரு தனி நபருக்கும் தனக்கு இஷ்டமான தொழிலை பின்பற்றக்கூடிய சுதந்திரம் வேண்டும். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்னாடியே நிர்ணயம் செய்திருப்பதால் ஜாதி ஏற்பாட்டில் ஒவ்வொரு தனிநபருக்கும் தொழில் விஷயத்தில் சுய நிர்ணய சுதந்திரம் இல்லை.

ஜாதியோடு தொழிலையும் இணைக்கபட்டதாலேயே தீண்டப்படாதவனை மாற்று தொழில் செய்ய சமூகம் அனுமதிக்காததால் வேறு தொழிலில் அவனுக்கு பயிற்சியோ - பழக்கமோ இல்லாமல் ஆகிவிடுகிறது. எனவே, ஜாதி பொருளாதார-சமூக முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகவே இருந்து வருகிறது.

இந்து சமூகம் ஜாதிகளை எப்படிப் புனிதமாக கருதுகிறது என்பது பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறும்போது "ஒரு முஸ்லீமையோ ஒரு சீக்கியனையோ நீ யாரென்று கேட்டால், நான் முஸ்லீம் அல்லது சீக்கியன் என்றே விடையளிப்பான். அவர்களுக்குள் பல பிரிவுகள் இருந்தாலும் ஜாதிப்பெயரை சொல்வதில்லை. முஸ்லீம் என்று சொன்னால் நீ சுன்னியா, சியாவா அல்லது பஞ்சாரியா என்று நீங்கள் கேட்பதில்லை. சீக்கியன் என்று சொன்னால் நிஜாதா, ரோடாதா, ஜாமியா, ராம்தாஸியா என்றும் நீங்கள் கேட்பதில்லை, ஆனால், ஒருவன் தான் இந்து என்றால் அத்துடன் நீங்கள் திருப்தி அடைவதில்லை. அவனுடைய ஜாதியை அறிய நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஏனெனில் இந்துக்களுக்கு ஜாதி அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது இங்கு. அவன் ஜாதியை அறியாமல் அவன் எப்பேற்பட்டவன் என்பதை நீஙகள் உணர்ந்துக்கொள்ளமாட்டீர்கள்.

எனவே தான் அருமை நண்பர்களே!

ஜாதிகளால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை துவேச உணர்ச்சியை ஒழிக்க, இந்து சமூக அமைப்பில் வழியே இல்லை. இந்துக்கள் அல்லாதவர்களுக்குள்ளே ஒற்றுமை உணர்ச்சியை வளர்க்க தக்க சாதனங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு ஜாதி எவ்வளவு உயர்வானதாக இருக்கிறதோ அவ்வளவிற்கு அந்த உரிமைகளும் உயர்வானதாக இருக்கிறது இங்கு. எனவே, நமது நாட்டை பொறுத்தமட்டில் ஜாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருப்பதால் இதை பிரிப்பதோ அல்லது அதில் சீர்திருத்தம் காண விரும்பிட முயல்வதோ சாதாரண விஷயமல்ல. எனவே, சாதிக் கொடுமையை தீண்டாமையை எதிர்த்துப் போராடும் சமூக சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட அதிக தைரியசாலியும், புத்திசாலியும் ஆவான். அந்த வகையில் மனிதனை நேசிக்கும் உங்கள் மனிதநேயத்தை நான் இங்கு மனதாரப் பாராட்டுகிறேன்.

பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் எங்களை கை தூக்கி விட முன் வந்திருக்கிறீர்கள். அது உங்களால் முடியுமா? தரையில் நிற்பவனே தண்ணீரில் விழுந்தவனை காப்பாற்ற முடியும் என்ற முதுமொழி உண்டு. அதை நான் உங்களுக்கு இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். நீண்ட நெடுகாலமாக மனித சமூகத்தில் புரையோடிப்போன இந்த தீண்டாமை என்னும் கொடிய நோயை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? முடியுமென்று என்னால் நம்ப முடியவில்லை.

1 comment:

  1. நீங்கள் குறிப்பிட்டுள்ள இக்கருத்தரங்கிற்கு மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி தலைமை வகித்திருந்தார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete