Sunday, October 16, 2005

மதமாற்றமல்ல - மனமாற்றம் - 7

******************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
******************************************************

இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் என்று பொருள், முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை கைக் கொண்டு முற்றிலும் இறைவனுக்கே (குர்ஆனின் சட்டத்திட்டங்களுக்கு) கீழ்ப்பட்டு நடப்பவர்கள் என்று பொருள்.

பரிசுத்த குர்ஆன் மனித சமூகத்திற்கு "ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள்" என்ற மகத்தான தத்துவத்தை போதிப்பது மட்டுமல்ல. நடைமுறையில் ஒரு ஐக்கியமான சகோதர பாசத்தையும், சகிப்புத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் அது வலியுறுத்துகிறது.

இஸ்லாத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள், அகில உலக சாந்தி சமாதான, சகோதரத்துவத்தை உண்டுபண்ணி, உலகளவில் அது ஒரு ஜீவன் உள்ள இரத்த உணர்ச்சியை உறவை உண்டாக்கிவிடுகிறது.

இஸ்லாம் தவிர ஏனைய மதங்கள் மனித சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் நடைமுறையில் மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுத்துவதையும் உயர்வு தாழ்வு சாதி மனப்பான்மையை ஏற்படுத்துவதையும் தவிர்க்கமுடியவில்லை.
ஆனால் இஸ்லாத்தின் பரிசுத்த கிரந்தம் சொல்லுகிறது.

"மனிதனுக்கு மனிதன் வணங்கத் தேவையில்லை. மண்டியிட அவசியம் இல்லை. சிரம் தாழ்த்த வேண்டியது இல்லை" என்ற உணர்வினை அது ஊட்டி விடுகிறது. எல்லாம் வல்ல பரம் பொருளாகிய அந்த அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் தலையினை சாய்த்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் பிற மனிதர்களின் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் மனித மூளையை அடகு வைக்கும் ஆதிக்கம் சுதந்திரச் சிந்தனையைத் தேய்க்கும் மனிதக் கட்டுப்பாடுகள் இங்கே தூள் தூளாக நொறுங்கி விடுகின்றன. அடிமைச் சங்கிலிப் பொட்டித் தெறிக்கின்றன.

சுதந்திரம் சமத்துவம் பெற்று மனிதன் இங்கு முழு நிலவு ஆகின்றான். சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ அவன் இங்கு கூன் நிமிர்ந்து நிற்கிறான். மனிதகுலம் இதுவரைக் கண்டிராத மனித குல சுதந்திர சாசனம் மாக்ன கார்டாவை விட மிக உயர்ந்த சாசனம் திருக் குர்ஆன் ஒன்றே. முகம்மது (ஸல்) மானிட மக்களின் நல்வாழ்விற்காக கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாம் சமுத்திரத்தை போன்றதாகும். நதிகளும், ஆறுகளும், கால்வாய்களும், கழிவு நீர் சாக்கடைகளும், சமுத்திரத்தில் கலக்கும் போது அது ஒரே தன்மையுடைய சமுத்திரத் தண்ணீராக சங்கமமாவது போல் உலகில் எல்லா இன சாதி, மொழி, நிற உயர்வு தாழ்வு மக்களும் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமில் சங்கமம் ஆகி முஸ்லிம் என்ற ஒரே சமூக மக்களாக இன, சாதி வேற்றுமை காண முடியாத ஒரே சக்தியாக ஆகி விடுகின்றனர்.

எனக்கு கிடைத்த அனுபவங்கள்;

நான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.

நாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.

நாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.

இரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் "அலைக்கும் சலாம்" என்று சொன்னேன்.

அங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள். அவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.

இரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை சந்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர் கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளூர உணர்ந்து கொண்டிருந்தேன்.

நான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.

இன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.
சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் "கிராத்" ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது. இப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர் அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது மேலும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.

அடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன். அங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்த சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன். இறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன். அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

தீண்டாமை, சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வு ஆகிய சாபக்கேடுகள் எச்சமூகத்தில் தலைவிரித்தாடுகிறதோ அச்சமூகத்திற்கு ஒரு போதும் உய்வும் இல்லை, உயர்வும் இல்லை.

மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதும் சிலரை உயர்ந்தவர்களாக கருதுவதும் அவ்வேற்றுமை நிறம், இனம், ஆகியவற்றின் பேரால் இருப்பினும் சரி, அல்லது பணம், தேசம், சமுதாயம் ஆகியவற்றின் பெயரால் இருப்பினும் சரி, உண்மையில் சமூகத்தின் முகத்தில் அது ஒரு கோரத்தழும்பேயாகும்.
நாம் இங்கு சிந்தித்துப் பார்த்தால் தீண்டாமை ஏற்றத்தாழ்வு ஆகியவை இயற்கைக்குப் புறம்பானவை என்ற உண்மையை நாம் உணரமுடியும். இன்று நமது பாரத நாட்டை பொறுத்தமட்டில் எல்லா மாநிலங்களிலும் தீண்டாமைக் கொடுமை அதன் நர்த்தனம் நம்மை அலைக்கழிக்க வைத்துள்ளது.

இங்கு மனிதர்களை மிருகங்களை விட இழிவாக - கேவலமாக - அருவருப்பாக கருதுகின்றனர். இதற்கான சான்றுகள் நாமிங்கு எத்தனையோ காணமுடியும்.

ஒரு பாத்திரத்தில் நாய் ஒன்று வாய் வைத்து விட்டால் கூட பலர் அதை சகித்துக் கொள்கிறார்கள். ஏன் - மனதில் எவ்வித அருவருப்பின்றி அப்பாத்திரத்தை உபயோகிக்கவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். ஆனால் யாரேனும் ஒரு அரிசன மனிதன் தன் கரத்தால் தொட்டவுடன் அப்பாத்திரம் அசுத்தத் தன்மையடைந்து விடுகிறதாம் - அதாவது தீட்டுப்பட்டு விடுகிறதாம்.
ஆண்டவனின் படைப்பில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே, ஆண்டவனின் அடிமைகளே! அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வம்சத்தை, எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் படித்தவனாகட்டும், பாமரனாகட்டும் பணக்காரனாகட்டும் ஏழையாகட்டும், "அனைவரையும் இறைவனே படைத்திருக்கிறான்" அவன் தன் அருட்கொடைகளை எல்லா மனிதர்களுக்கும் சேர்த்தே படைத்திருக்கிறான்.
காற்று, நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், இன்னபிற பொருள்களையும் தன் அருட்கொடையால் மனித சமுதாயத்திற்கு அவன் வழங்கியுள்ளான். மேலும், எவ்வித பாகுபாடுமின்றி எல்லா மனிதர்களுக்கும் வாழுதல், இறத்தல், உண்ணுதல், உறங்குதல், பேசுதல், கேட்டு உணர்ந்து கொள்ளுதல் போன்ற ஒரே விதமான வழிமுறைகளை அருளியிருக்கிறான். எல்லா மனிதர்களின் நாடி நரம்புகளிலும் ஒரே விதமான இரத்தம் தான் ஒடிக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட பெரிய விஷயம் என்னவென்றால் - உலக மக்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் - ஆதம் ஹவ்வாவின் மக்களே ஆவர் என்று மார்க்கம் சொல்கிறது. தெளிவுபடுத்துகிறது. எனவே அனைவரும் ஒரே மனித இனத்தை ஒரே குலத்தைச் சார்ந்தவர்களாவர். அப்படி என்றால் ஒருவர் மற்றவரைவிட உயர்வும், மேன்மையும் கொண்டாடும் உரிமை எப்படி எங்கிருந்து பெறமுடியும்? - இதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது.

ஆனால் இஸ்லாம் மனிதர்களிடையே ஒரே வேற்றுமையை மட்டும் அது ஏற்றுக்கொள்கிறது. அது என்னவென்றால் அதுதான் நல்லவனுக்கும், தீயவனுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேற்றுமை. அதாவது இறையச்சமுள்ளவனுக்கும் இறையச்சம் இல்லாதவனுக்குமுள்ள வேறுபாடு.
- என்று சிறப்பாக இஸ்லாம் சொல்லுகிறது.

இறையச்சமுள்ள நல்ல மனிதன் இறையச்சமற்ற தீய மனிதனைக் காட்டிலும், உயர்ந்தவன், மேலானவன் கண்ணியத்திற்குரியவன் என்றும் அது கூறுகிறது.

இந்த ஒரே வேறுபாட்டைத்தான் தெளிந்த ஆரோக்கியமான மேலான அறிவு ஞானம் ஏற்றுக்கொள்கிறது. இந்த உண்மையை உலகில் சிந்தனை தெளிவுள்ள எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

மற்ற எல்லா வர்ண-இன பாகுபாடுகளும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தவறானவையே ஆகும் என்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. அவற்றை அழித்தொழிப்பதற்கும் அதன் மூலத்தை வேரும் வேரடி மண்ணுடன் கெல்லியெறிவதற்கும் நம்மை வீறு கொண்டெழச் செய்கிறது இஸ்லாம்.
இதனை திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக பின்வருமாறு அறிவுறுத்துகிறது.

"மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் - பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்" - என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது.

"உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அல்லாஹ்விடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்" (44:13) என்று திருமறை கூறுகிறது.

இங்கே மனிதரை இறையச்சம் கொள்ளச் செய்து நேர் வழிப்படுத்தி, மனிதப் பிறப்பின் நோக்கத்தை தெளிவுப்படுத்துகிறது.

- நமக்கு ஏற்பட்டுள்ள வர்ண பாகுபாடுகளை - மனித ஏற்றத்தாழ்வுகளை - ஆண்டான் அடிமை - தீண்டாமையின் விளைவாக எழும் சமூக ஊனத்தால் ஏற்பட்டுள்ள காயத்தை குணப்படுத்தும் மா மருந்துதான் நமக்கு மேலே குறிப்பிட்டுள்ள இறை வசனம்.

இனம் நிறம் மொழி, நாடு தேசியம் ஆகிய விரோத குரோதங்களுக்கும், மனமாச்சரியம்தான் நாட்டில் குழப்பங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்து வந்திருக்கின்றன.

- இத்தகைய படு மோசமான வழி கேட்டினை - திருமறை தகர்த்தெறிகிறது.

No comments:

Post a Comment