**************************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
**************************************************************
தீண்டாமை கொடுமை என்பது காந்திஜி காலத்திலும் இருந்தது. காந்திஜிக்கு முன்னாலும் இருந்தது. இன்றும் இருக்கிறது - அது நாளையும் தொடருமோ? என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இந்த இனிய நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் திரு. சுந்தரராமசாமி, பிரபல எழுத்தாளர் - சிறந்த நாவலாசிரியர் என்ற சிறப்பு இருந்தாலும், அதோடு மேலும் ஒரு சிறப்பு, அவர் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதாகும். எனவே, இந்த நிகழ்ச்சி அவர் தலைமையில் நடைபெறுவது, மிகவும் பொருத்தமே.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை விளக்கங்களை தர இருக்கின்ற நீங்கள் - படித்தவர்கள் பட்டங்கள் பெற்றவர்கள், பல ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே தான் உங்களைப் பார்த்து நான் கேட்பதெல்லாம் தீண்டாமை என்னும் இந்த தீராத பிரச்சினைக்கு நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் கருத்துகள் சிறப்புடையதாக - தீர்வு காணக்கூடிய வகையில் - அது அமைய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
எனவே, அருமை நண்பர்களே!
நாம் இங்கு மனம் திறந்து பேசுவோம். நானும் மனம் திறந்தே பேச விரும்புகிறேன். மரியாதைக்குரிய நடுவர் அவர்கள் குறிப்பிட்டார்கள், தீண்டாமை என்பது இடைக்காலத்தில் பழமைவாதிகளால் அதாவது, மனிதனால் மனிதனுடைய தேவைகளுக்காக மனிதன் ஏற்படுத்திக் கொண்டவையாகும். அது இடைச்செருகலே, அதை ஒழிப்பதற்காகவே காந்திஜி போராடினார். நாமும் காந்திஜி போராடிய அவர் வழி நின்று போராடி வெற்றி பெறுவோம் என்றார்கள்.
அன்பார்ந்த நண்பர்களே!
நடுவர் அவர்களது பேச்சில், அனேகமாக தீண்டாமை கொடுமை, அதன் வேகம் தணிந்து விட்டதைப் போன்ற பிரமை; பேச்சின் மென்மை அப்படி இருந்தது.
மரியாதைக்குரிய நடுவர் அவர்களே!
உங்களால் எடுத்து வைக்கப்பட்ட கருத்துகளில் எனக்கு மாறுபாடு உண்டு. ஆகவே, அது பற்றிய எனது கருத்துகளை உணர்வுகளை இங்கு விளக்கிட நான் விரும்புகிறேன். வேத காலம் தொட்டே தீண்டாமை கொடுமை அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது அதற்கு ஆதாரமாக- இந்து மதத்தின் பலதரப்பட்ட நூல்களில் மனுஸ்மிருதி முக்கிய இடத்தை பெறுகிறது. இந்து மதத்தின் ஆரம்பகால நூலாக இதனைக் கொள்ளலாம். இந்த மனுஸ்மிருதி மக்களை வர்ணங்களாகப் பிரித்து - அதில் ஒரு பெரும்பகுதி மக்களை (பஞ்சமன்) - அதாவது சண்டாளன் தீண்டப்படாதவன் என்று இழிவுப்படுத்தி அதில் கூறப்பட்டுள்ளது. அன்று தொட்டே மனிதர்களிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களை இன்றும் வளர்த்து கடைபிடித்து வருகிறீர்கள்.
மனிதனை தொட்டால் தீட்டு, உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஏன் இருண்ட கண்டமென்று கூறப்படுகிற ஆப்பிரிக்கா கண்டத்தில் கூட இல்லாத அநாகரீகமான செயலிது.
உலகத்தின் பல நாடுகளில் இன்றும் நிறவேற்றுமை - இன வேற்றுமை மொழி வேற்றுமை ஆதிக்கப் போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மனிதனை தொட்டால் தீட்டு என்ற கொடுமை இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்ற கசப்பான உண்மையை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
பாரதம் பழம் பெரும் நாடு. இது உலக நாகரீகத்தின் முகடு. இங்கு, தனி மனித சுதந்திர ஜனநாயக உரிமைகள் எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று உலக நாடுகளின் அரங்குகளில், நிறவெறிக்கு எதிராக நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அங்கு பேசியபோது அங்கே குழுமியிருந்த மக்கள் அதை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்று இருக்கிறார்கள்.
அந்த பரபரப்பான செய்தியை, நாம் செய்தி தாள்களிலும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் கேட்டு படித்து அறிந்திருக்கிறோம்.
உண்மையில் தனிமனித சுதந்திரம் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறதா? தீண்டாமை கொடுமை முற்றிலும் இங்கு ஒழிந்துவிட்டதா? இந்தியாவில் பல மாநிலங்களில் கொத்தடிமைகள் இருப்பதாகவும், அவர்களை மாநில அரசுகள் விடுவிப்பதாகவும் செய்திகள் வருகின்றதே அது உண்மை இல்லையா? ஆண்டான், அடிமை முறை இன்றும் பல இந்திய கிராமங்களில் நடைமுறையில் இருந்துவருகிறதே அது நம் கண்களில் படவில்லையா? தயவுசெய்து எண்ணிப்பாருங்கள்.
அருமை நண்பர்களே!
இன்றளவும், தடையின்றி நடந்துவரும் தீண்டாமைக் கொடுமையினை எதிர்த்து காந்திஜிக்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நந்தனார் போராடியிருக்கிறார். காலமெல்லாம் தன் தெய்வமாக தன்னை ஆட்கொள்ளும் ஆண்டவனாக நம்பி, மனதுக்குள் வழிப்பட்டு வந்த தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நடராஜ பெருமானை நேரில் சென்று வணங்க, வழிபட ஆசைப்பட்டார் நந்தனார். முடிந்ததா?
ஆஸ்திக வேதியர்கள் மேல் ஜாதி இந்துக்கள் நந்தனாரைப் பார்த்து "மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா?" ஏன்று ஏளனம் பேசி சினம் கொண்டு நந்தனாரை கோயிலுக்குள் போக வழிவிட மறுத்து நந்தியானார்கள்.
நந்தனாரைத் தொடர்ந்து கேரளத்தில் பாக்கனார், நாரயணகுரு மகாராஷ்டிரத்தில் சோகமேளா, உ.பி. யில் குருரவிதாஸ், பெரியார் ஈ.வே.ரா. போன்றவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தம் சக்திக்கு தக்க வகையில் போராடியிருக்கிறார்கள். இருந்தும் தீண்டாமைக்கொடுமை பல்வேறு நிலைகளில் புதுபலம் பெற்று புதுபுது பதாகையின் கீழ் தன் கொடூர தன்மையை அது வலியுறுத்திக்கொண்டிருப்பதை நான் இங்கு நினைவுப்படுத்துகிறேன்.
சாதி - தீண்டாமை இவைகளுக்கு மூல காரணமாக இருக்கும் பல இந்து சாஸ்திர ஆதாரங்களை, சம்பிரதாயங்களை கண்டிக்காமல் சாஸ்திரங்களையெல்லாம் புனிதமானவை என்று நம்பும்படி விட்டு விட்டு, அவர்கள் செயல்களை மட்டும் நீங்கள் கண்டிப்பது புத்திசாலித்தனம் ஆகாது. அது சமூக சீர்திருத்தத்திற்கு வழியுமாகாது.
ஜனங்களின் ஆதிக்கத்திற்கு - அவர்களின் செயல்களுக்கு அவர்களது மத நம்பிக்கையே காரணம் என்பதை மகாத்மா காந்தி உட்பட தீண்டாமையை ஒழிக்க முன் வந்திருக்கும் உங்களைப் போன்ற சீர்திருத்தக் காரர்களெல்லாம் உண்மையில் இங்கு உணராமல் இருப்பது துரதிருஷ்டமே! எனவே தான் காந்திஜியும் அவரை, இந்த விசயத்தில் பின்பற்றுகின்ற நீங்களும் தீண்டாமையை ஒழித்திட எடுத்து வரும் முயற்சியில் வெற்றி பெறாததில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்னும் இங்கு நான் அழுத்தமாக சொல்லவேண்டுமானால் தீண்டாமைக்கு அடிப்படைக் காரணம் இந்துக்கள் கடைப்பிடித்து வரும் ஜாதி முறையே. நம்மை பொறுத்தமட்டில் இங்கு பல ஜாதிகள் தோன்றுவதற்கு இந்து மதக் கொள்கைகளே காரணம். அக்கொள்கைகளை இந்து சாஸ்திரங்கள் ஆதரிக்கின்றன. தெய்வீக சக்தியுடைய ஞானிகளால் அந்த சாஸ்திரங்கள் எழுதப்பட்டன என்றும் நம்பப்படுகின்றன. எனவே, அந்த சாஸ்திரங்களுக்கு மாறாக எண்ணுவது, நடப்பது பாவம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். தீண்டாமைக்கு காரணமாக இருக்கும் ""ஜாதியை" ஒழிக்க வேண்டுமென்று நான் இங்கு கூறும் போது அது சாஸ்திரங்களுக்கு விரோதமான கூப்பாடு என்று உங்களால் வர்ணிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment