Tuesday, October 11, 2005

மதமாற்றமல்ல - மனமாற்றம் - 3

************************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
************************************************************

அருமை நண்பர்களே!

எங்கள் வாழ்க்கை அது நிலைகுலைந்து - அது குப்பைமேட்டில் தூக்கி எறியப்பட்டு கிடக்கிறது இன்று. திட்டமிட்டு ஒரு சமூகம் எல்லா நிலைகளிலும் ஒதுக்கப்பட்டு தூக்கி எறியப்படும் போது அது எழுந்து வந்து வளர்ந்து நிற்க வாய்ப்பில்லை.இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நடந்து முடிந்த போன ஒரு சம்பவத்தை - தவறை நான் இங்கு கோடிட்டு காட்ட விரும்புகிறேன். 1855-ல் வெள்ளையர் ஆட்சி இந்தியாவில் நடைப்பெற்ற போது சென்சஸ் எடுக்கப்பட்டது. அப்போது சென்சஸ் எடுத்த அதிகாரிகளின் தவறால் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட - தீண்டப்படாத மக்களை ஜாதி இந்துக்களின் பட்டியலுடன் சேர்த்தே கணக்கெடுத்தனர். இது ஒரு மிகப்பெரும் திட்டமிட்ட சதியும் தவறுமாகும் என்று நான் இங்கு கூறிட விரும்புகிறேன்.

மனிதர்களை வர்ணங்களாக பிரித்து அதில் ஒரு பெரும்பகுதி மக்களை இவன் பஞ்சமன் - சண்டாளன் வேதத்தை ஓதக்கூடாது, மீறி ஓதினால் நாக்கு துண்டாக்கப்படும். வேதத்தை கேட்கக்கூடாது, மீறி கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி விடப்படும். இப்படி இழிவாகவும் அடிமையாகவும் நடத்தப்பட்டு வந்த இந்துக்கள் மனசாட்சிக்கு விரோதமாக வெட்கமின்றி வெள்ளையனுக்கு துணைநின்று எதிரிக்கு தன் பலத்தை காட்டுவதற்கு வேண்டுமானால் அரிஜனங்களை இந்துக்களோடு சேர்த்து எண்ணிக்கையை கூட்டி பெரிதுபடுத்திக் காட்ட உங்கள் உபாயங்கள் உதவியிருக்கலாம். ஆனால் உண்மையில் இந்துக்கள், அரிஜனங்களை இந்துக்களாக - சகோதரர்களாக ஏன் மனிதர்களாக மதித்து நடத்தினார்களா? நடத்தி வருகிறார்களா? தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.இந்த வேற்றுமைகள் அடிமை வாழ்வு ஒதுக்கப்பட்ட அரிஜன மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணவும் அம்மக்களை ஒன்று படவும், சிந்திக்கவும் தூண்டியது.

இதன் வெளிச்சத்தில்தான் 1931-ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியப்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.சாதி இந்துக்களின் பிரதிநிதியாக காந்திஜியும் ஒதுக்கப்பட்ட தீண்டப்படாத அரிஜன மக்களின் பிரதிநிதியாக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஒரு குழுவும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதியாக ஜனாப் ஜின்னா சாஹிபும் அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர். மாநாட்டில் ஜனாப் ஜின்னா சாஹிப் இந்தியாவில் இந்துக்கள் முஸ்லீம் மக்களுக்கு செய்து வரும் பல்வேறு கொடுமைகளை விளக்கி 14 அம்ச கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். டாக்டர் அம்பேத்கர்: வேதகாலம் தொட்டு இந்துக்கள் எங்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதின் மூலம் கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் பின்னடைந்து ஏதும் அறியாத மக்களாகவே நாங்கள் இருக்கிறோம். எனவே, விடுதலை பெற்ற இந்தியாவில் ஜாதி இந்துக்கள் எங்களை மனிதர்களாக மதித்து நடத்துவார்களா? என்ற அச்சம் எங்களுக்கு பலமாக உண்டு. இந்த வர்ணாசிரம தர்ம கொள்கைகளை கடைபிடித்து வரும் இந்துக்களோடு ஒத்து வாழ முடியாது: வாழ அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே, நான் இங்கு வலியுறுத்துவது வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்; அரிஜனங்களுக்கு தனி மாநில அந்தஸ்து; எங்களை நாங்களே தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்வு முறைகள் அமையவும் அதன் அடிப்படையில்தான் எங்கள் பிரச்சினைகளை அணுக வேண்டுமென்றார்.

காந்திஜியோ சனாதன இந்துக்களுக்காக வேண்டி வாதாடினார்.காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இப்பிரச்சினையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. வட்ட மேஜை மாநாடு வெற்றி பெறாமல் தலைவர்கள் நாடு திரும்பினர். டாக்டர் அம்பேத்கர் அன்று அடக்கி ஒடுக்கப்பட்ட அரிஜன மக்களின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கினார். அவருடைய பேச்சும் எழுத்தும் காலகாலமாக ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த மக்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை உண்டு பண்ணி நம்பிக்கை ஊட்டியிருந்தது. அதன் எதிரொலியாக நாடெங்கும் அம்மக்களை ஒன்றுபடுத்தியது - போராட அணி திரட்டியது. எங்கும் குழப்பமான நிலை! நாட்டின் நிலைமைகளும் வட்டமேஜை மாநாட்டின் தோல்வியும் காந்திஜியை நிலை குலையச் செய்துவிட்டது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு அதைத் தொடர்ந்து மேலும் பிளவுகள் ஏற்பட்டால் நாடு சிதறுண்டு போகும் என்ற அபாயத்தை உணர்ந்திருந்த காந்திஜி அரிஜன மக்களின் உணர்வுகளை தடுத்து நிறுத்தவும், அந்த மக்களை சமாதானப்படுத்தவும் விரும்பினார்;. அதற்கு டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பலவீனப்படுத்தவும் அவரது தலைமையை முடமாக்கவும் அதன் மூலமே விடுதலை பெற்ற இந்தியாவில் அவர் காலமெல்லாம் கனவு கண்ட சாம்ராஜ்யத்தைக் காணவும் இந்து சனாதன கொள்கையை நிலைநாட்டவும் முடியும் என்று உணர்ந்திருந்த காந்திஜி தீண்டாமை ஒழிப்பு என்ற வார்த்தைகளை மிகவும் மலிவாகவே விளம்பரப்படுத்தினார். நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது.

சுதந்திர போராட்டத்தின் மத்தியில் வடபகுதியில் இந்து முஸ்லீம் கலவரம் ஜாதிக் கலவரங்கள் விடுதலை இயக்கத்திற்கு பெரும் ஊறு விளைவித்துக் கொண்டிருந்தன.இந்த காலகட்டத்தில் தான் பிரிட்டீஷ் பிரதம மந்திரி வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை அளிக்க வகை செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்தச் சட்டம் தீண்டப்படாத மக்களுக்கு தனித் தொகுதியை அளித்தது. காந்திஜியோ வேதனைப்பட்டார். இந்துக்களை பிரித்து பிளவுப்படுத்தி ஒன்றுபட்ட சக்தியை பலவீனப்படுத்தி விட்டார்களே என்று மனம் குமுறினார். பிரிட்டீஷ் அரசின் இந்த முடிவை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்.தனித்தொகுதியை என் உயிரைக் கொடுத்து எதிர்ப்பேன் என்று வட்டமேஜை மாநாட்டில் தான் கூறிய கருத்துகளை நினைவு படுத்தி பிரிட்டிஷ் பிரதமருக்கு காந்திஜி கடிதம் எழுதினார். அறிக்கை விட்டார். இருந்தும் பிரிட்டிஷ் அரசு 1932 ஆகஸ்ட் மாதம் முதல் சட்டத்தில் சேர்ந்திருப்பதாக அறிவித்தது.

பிரிட்டிஷ் அரசு இவ்வுத்தரவு சட்டத்தை ரத்தாக்காவிட்டால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக பிரிட்டிஷ் பிரதமருக்கு காந்திஜி தெரிவித்தார். ஆனால் உண்ணாவிரதம் தவிர்க்கப்படவில்லை. அன்று செவ்வாய்கிழமை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பிரிட்டிஷ் பிரதமருக்கு மீண்டும் தந்தி கொடுத்தார்.காந்திஜி உண்ணாவிரதம் தொடங்கினார். காந்திஜியின் இந்த திடீர் உண்ணாவிரதத்தால் நேருஜி கருத்து வேறுபாடு கொண்டார். காந்திஜியின் உண்ணாவிரதம் தேசிய விடுதலை இயக்கத்தை அதன் நோக்கத்தை மக்களை எங்கே திசை திருப்பி விடுமோ என்று அஞ்சினார் நேருஜி. காந்திஜியின் உண்ணாவிரதம் தேசிய இந்து தலைவர்களை உசுப்பிவிட்டது. இந்த தலைவர்கள் பம்பாயில் ஒன்று கூடினார்கள். மதன் மோகன் மாளவியா, தேஜ் பகதூர் சப்ரு, எம்.ஆர். ஜெய்கர், ராஜகோபாலச்சாரி, என். ஜி. செல்கர், இராஜேந்திர பிரசாத், மூஞ்சே முதலானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் பல நாட்கள் நீண்டு பாபுஜி அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். மீண்டும் இந்த இந்து தலைவர்கள் ஒன்று கூடினார்கள். ஏர்-வாடா சிறையில் உண்ணாவிரதத்தால் அபாய கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த காந்திஜியிடம் பாபுஜி நீங்கள் உண்ணாவிரதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், நடக்க வேண்டிய காரியத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று முறையிட்டனர். உண்ணாவிரதத்தை நிறுத்த காந்திஜி உறுதியாக மறுத்துவிட்டார்.என்னுடைய உயிரை உங்களால் காப்பாற்ற முடியாது. நான் ஒரு முக்கிய கட்டத்திற்கு வந்திருக்கிறேன். நீங்கள் அம்பேத்கரை சமாதானப் படுத்தினாலொழிய இது சாத்தியமில்லை என்று காந்திஜி கூறியதைக் கேட்ட இந்த இந்து தலைவர்கள் வேறு வழியின்றி மீண்டும் ஒன்று கூடி முடிவெடுத்து சக்ரவர்த்தி ராஜகோபாலசாரியை டாக்டர் அம்பேத்கரை பார்த்து சாமாதானப்படுத்த அனுப்பி வைத்தனர்.

டாக்டர் அம்பேத்கரிடம் நிலைமைகளை எடுத்துச் சொல்லி காந்திஜியின் உயிரை காப்பாற்ற உருக்கமுடன் கேட்டுக்கொண்டார் ராஜாஜி. டாக்டர் அம்பேத்கர்: பாபுஜி இவ்வளவு சீக்கிரத்தில் இந்த அவசரமான முடிவுக்கு வருவார் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. மரியாதைக்குரிய ராஜாஜி அவர்களே! நீண்டகாலமாக எங்களை ஏமாற்றி வந்த நீங்கள் மீண்டும் ஏமாற்றவே வந்திருக்கிறீர்கள். இந்த நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி என்னை ஒரு சங்கடமான நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருப்பதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்.நான் உங்களோடு ஒத்துப்போவது மூலமாக என் சமூக மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சில கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து காந்திஜி டாக்டர் அம்பேத்கர் கையொப்பமிட்டனர். இதுதான் வரலாற்று சிறப்புமிக்க பூனா ஒப்பந்தமாகும்.

செப்டம்பர் மாதம் 26-ம் தேதி 5-15 மணிக்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் கொடுத்த பழரசத்தை பருகி காந்திஜி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். உயிர் காப்பாற்றப்பட்டது. விடுதலை அடைந்தது இந்தியா.டாக்டர் அம்பேத்கர் அன்று வட்டமேஜை மாநாட்டில் எந்த சந்தேகத்தை கிளப்பினாரோ அது இன்று சுதந்திர இந்தியாவில் நீக்கமற நிலைத்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.ஆகவே அருமை நண்பர்களே!காந்திஜி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை இந்தியாவில் எப்படியெல்லாம் நடத்தினார் அதற்குரிய காரணங்கள் என்ன என்பதற்கு பல்வேறு சம்பவங்களை நான் இங்கு உங்களுக்கு நினைவுபடுத்தினேன். எனவே, வேத காலத்திலும் காந்திஜி வாழ்ந்த காலத்திலும் தீண்டாமை கொடுமைகள் எப்படியிருந்தது அவைகளை போக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள், அணுகிய முறைகள் இவைகளை நாம் இங்கு அறிய முடிகிறது.இன்றைக்கும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வருகிற பல சம்பவங்களை நாம் மறந்தே விடுகின்றோம்.

அப்படி மறந்து போன சம்பவங்களில் ஒன்றை இங்கு நினைவுபடுத்தி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.பாபு ஜகஜீவன்ராம் அரிஜன மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர். இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது காசியில் டாக்டர் சம்பூரணானந்து அவர்களின் சிலையை திறந்து வைத்தார். விடுவார்களா? இந்த சதானிகள் இந்த செய்தியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலை தீட்டுபட்டுவிட்டதென்று ஊர் உலகத்துக்கு பிரகடனப்படுத்தி கங்கைக்கு சென்று புனித நீர் கொண்டுவந்து சிலையைக் கழுவி சுத்தப்படுத்தியதை நீங்கள் மறந்தாலும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நான் எப்படி மறக்க முடியும்?இந்த நாட்டில் சட்டங்கள் இருந்தன என்ன செய்தது? அது நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தது.

பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கே இந்த கதி என்றால் என்னைப் போன்ற சாமானியனுடைய நிலையை நான் இங்கு எண்ணிப்பார்க்கிறேன, தயவு செய்து நீங்களும் எண்ணிப்பாருங்கள்.நான் இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். காந்திஜி, நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, என். ஜாகீர் உசேன் இவர்கள் எல்லாம் மறைந்தபோது அவர்களுடைய பூத உடல்களை ஏற்றுக்கொண்ட டெல்லி பூமி பாபு ஜெகஜீவன்ராம் பூத உடலை மட்டும் - அது ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதற்கு பல காரணங்களை கண்டுபிடித்து சொல்லலாம் நீங்கள் - நாங்கள் நம்பக்கூடிய வகையில்!

No comments:

Post a Comment