Sunday, October 9, 2005

யார் பகுத்தறிவுவாதி - 3

ஒருமுறை விண்வெளிப்பயணம் மேற்கொண்ட ரு.டீ. கஹாரி பூமிக்குத் திரும்பி வந்து 'நான் விண்ணிலே பயணம் செய்து வந்துள்ளேன். விண்ணில் எங்கு தேடியும் அங்கே இறைவனைக் காணமுடியவில்லை" என்று கூறினார்.
கோடிக்கணக்கான விண் துகள்களில் ஒன்றான பூமியில் இருந்து கொண்டு அருகாமையில் உள்ள கிரகத்திற்குச் சென்று வந்த மனிதனின் இந்த கர்ஜனைக்கு அகங்காரமென்பதா? அல்லது அறியாமையென்பதா? இறை மறுப்பாளர்கள் மத்தியில் இத்தகைய வாதத்திற்குப் பெயர்தான் பகுத்தறிவு வாதம்.

இறைவன் மறுமை என்றெல்லாம் கூறி இவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறானே தவிர அவைகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இது விஞ்ஞான உலகமாகும். அனுபவிக்காத 'உணராத" 'பார்க்காத" எதுவும் நம்புவதற்கு ஏற்புடையதல்ல. பல நூற்றாண்டுகள் அறிவாராய்ந்து முயற்சித்தும் இறைவன் விஞ்ஞானத்தின் பார்வையில் படவில்லை. விஞ்ஞானிகள் எல்லா வகையிலும் முயன்றும் இறைவனைப்பற்றிய யாதொரு தடயமும் கண்டதில்லை. இந்த பிரபஞ்சம் ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதல்ல. அது தானே உருவாகிக் கொண்டதாகும். தானே- சுயமாக உண்டான பிரபஞ்சத்திற்குப் பின் நின்று இயக்க எந்தவொரு சக்தியின் அவசியமும் தேவையில்லை. எனவே இறைவன் இல்லை. இறைவன் இருக்கிறான் என்று நம்புவதெல்லாம் மூட நம்பிக்கை.

இத்தகைய வாதத்தை இங்கர்சால் இவ்வாறு கூறுகிறார்.
''மனித முன்னேற்றத்திற்கு எதிரி மதமும் அது சார்ந்த கடவுளும்தான். இந்த உலகை ஏதோ மிகப் பெரிய தெய்வீக சக்தி ஆட்டிப் படைப்பதாக மனிதன் நம்பிக்கொண்டிருக்கிறான். அந்த சக்தி நாடினால் தன்னை நரகத்தில் தள்ளவும் சுவர்க்கத்திற்கு உயர்த்தவும் முடியும் என்று நம்புகிறான். இந்த நம்பிக்கை நிலைத்திருக்கும் வரை அறியாமையும் வறுமையும் துன்பமும் இந்த உலகைவிட்டுப் போகாது. இல்லாத கடவுளுக்காக மனிதன் தனது உழைப்பையும் ஆற்றலையும் பாழாக்கிக் கொள்கிறான். கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அது எனக்குத் தெரியாது. ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை ஏனெனில் அதற்கான சாட்சியங்கள் என்னிடமில்லை" இது அமெரிக்காவில் பகுத்தறிவுப் புரட்சியை ஏற்படுத்திய இங்கர்சாலின் பொன்மொழிகளாகும்.

சரித்திரக்காலத் தொடக்கத்திலிருந்து மனிதன் இறை நம்பிக்கையுடையவனாக இருந்து வருகிறான். இறை நம்பிக்கையை இழந்துவிட்ட சூனியமான காலகட்டம் எப்போதும் இருந்ததில்லை. மனிதன் எக்காலத்திலும் அங்கீகரித்து வந்த உண்மைகளில் ஒன்றாகும் இறைநம்பிக்கை. அதை நிலையில் கொள்ள ஆதாரங்கள் அவசியப்பட்டிருப்பதை விட அதை நிராகரிக்கவே ஆதாரங்கள் அவசியமாகிறது.

கிரேக்க, பாரத மதங்களின் வாயிலாக உருவெடுத்த இறை நிராகரிப்பும்- இறை மறுப்பும் சில மாறுபட்ட சிந்தனைகளை உருவாக்கினாலும் அது ஒட்டு மொத்தமான ஒரு நாத்திக சமுதாயத்தை உருவாக்கியதில்லை. மனித வரலாற்றில் பெரும்பான்மையாக ஆத்திக சமுதாயம் இருக்குமாயின் அதில் நாத்திக வாதத்தின் பங்கு சிறுதுளி மட்டுமே உண்டு. எந்தவொரு பொதுத் தத்துவமாக இருந்தாலும் அதற்கு எதிராக சில தவறான கருத்துக்கள் இருக்கலாம். எல்லா மனிதர்களும் இறை நம்பிக்கையுடையவர்களே என்னும் தத்துவத்திற்கு எதிரான விமர்சனமே நாத்திக வாதமேயல்லாது அது ஒரு பொதுவாதமோ பொதுத் தத்துவமோ அல்ல. நவீன உலகில் நாத்திகர்கள் தர்க்கவாதத்தடன் இறை மறுப்பிற்கு ஆதாரமாகக் கொள்வது விஞ்ஞானமாகும். அப்படியானால் விஞ்ஞானம் இறைவனை மறுக்கின்றதா என நாம் ஆராயவேண்டும்.

'அறிவு" என்னும் பொருள் தரும் 'ஸயன்ரிய" என்னும் லத்தீன் சொல்லிலிருந்துதான் 'சயன்ஸ்- science' என்னும் சொல் தோன்றியது. science - விஞ்ஞானம் என்பது இந்த பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பதை சொல்வதற்கு பெயர் அல்லது பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சி மூலம் அடையும் அறிவு ஆகும்.

விஞ்ஞானம் இருவகையாக இருக்கிறது. ஒன்று நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம். மற்றொன்று விஞ்ஞானக் கோட்பாடு ஆகும். விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு உறுதி செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் ஆகும். கோட்பாடுகள் என்பவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. இவை வெறும் அனுமானங்களே. காலப்போக்கில் இவை உண்மை என நிரூபிக்கப்படலாம். அல்லது நிரூபிக்கப்படாமல் பொய் என்று புறக்கணிக்கப்படலாம். இதனையே கோட்பாடு என்று சொல்லப்படுகிறது.

இந்த பூமி உருண்டை என்பது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.
இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்படி? அதன் வயது என்ன? என்பது பற்றியெல்லாம் கணித்துக் கூறுவது விஞ்ஞான கோட்பாடு ஆகும்.
ஆரம்பத்தில் 'நெபுலா" என்ற மேகத்திரளிலிருந்து முதலாவதாக நட்சத்திரங்கள் தோன்றின என்றும் அப்படித் தோன்றிய நட்சத்திரங்களில் ஒன்றுதான் சூரியன். பின்னர் சூரியன் தீடீரென வெடித்துச் சிதறியபோது அத்துண்டுகள் கோள்களாயின என்றும் அக்கோள்களிலிருந்து துணைக்கோள்கள் பிரிந்து சென்றன என்றும் கூறினார்கள்.
பின்னர் இந்த கோட்பாடு முற்றிலும் தவறானது என்று கூறினார்கள்.
கோள்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறியதல்ல. மாறாக அண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் உள்ளிட்ட யாவும் ஒரே சமயத்தில் தோன்றியதாகவே இருக்க முடியும் என்று கூறி அண்டம் எப்போதும் உள்ளது, அதற்கு ஆரம்பம், முடிவு என்பதில்லை எனவும் கூறினர். இதற்கு இயல் மாறாக் கோட்பாடு என்று பெயரிட்டு அழைத்தனர்.

பின்னர் இதுவும் தவறான கோட்பாடுதான் என்று கூறி நிராகரித்தார்கள்.
நவீன யுகத்தில் பெருவெடிப்புக் கொள்கை "Big Bang Theory " என்னும் கோட்பாட்டை முன் வைத்துள்ளார்கள். 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்கள் அனைத்தும் ஏறத்தாழ வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தி வாய்ந்த ஒரு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தால் திடீரென வெடித்து சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஓரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுத் துகள்கள், வாயுக்கள், ஈர்ப்பு விசையின் காரணமாகச் சிறுகச் சிறுக பெரிதாகி, பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சந்திரன் உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.
இந்த ("Big Bang Theory") 'பெரு வெடிப்புக் கொள்கை" நாளை பொய் என்று நிராகரிக்கப்படலாம் அல்லது அதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் அல்லது அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்படலாம். இதுதான் விஞ்ஞானக் கோட்பாட்டின் நிலைபாடு.

ஆக விஞ்ஞானிகள் 'விஞ்ஞானம்' எனும் பெயரில் மிகவும் வேகமாக சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத்து விடுகின்றார்கள். கொஞ்சகாலம் கடந்ததும் வகுத்ததை விட வேகமாக அவற்றை பொய் என்று புறக்கணித்தும் விடுகின்றார்கள். விஞ்ஞானிகள் கொள்கைகளை வளர்க்கும் வேகமும் அவற்றை இடித்துத் தள்ளும் வேகமும் அவர்களின் முடிவு நம்பத் தகுந்ததாக இல்லை என்பதை எடுத்துரைக்கிறது.

விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு உறுதி செய்யப்பட்டவைகளையும், (விஞ்ஞான விதி) - விஞ்ஞான அனுமானங்களையும் (விஞ்ஞானக் கோட்பாடு) மொத்தத்தில் விஞ்ஞானம் என்று கூறுவதுண்டு. விஞ்ஞான அனுமானங்கள் நிரூபிக்கப்பட்டதல்ல. இதை விஞ்ஞானிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒப்புக் கொள்கின்றனர். அத்தகைய விஞ்ஞானக் கோட்பாடுகளை வேதவாக்காக எடுத்துக் கொள்வது அறிவுடைமையல்ல. அதன் அடிப்படையில் விவாதிப்பதற்கு பெயர் பகுத்தறிவு வாதமுமல்ல.


கடவுள் உண்டா? இந்தக் கேள்விக்கு மூன்று விதமான பதிலைக் கூறலாம்.
1. கடவுள் உண்டா என்று அறியவில்லை
2. கடவுள் இல்லை
3. கடவுள் உண்டு
இதில் முதல் நிலையானது இறைவனைப் பற்றிய அறிவின் குறைபாட்டை தெரிவிக்கிறது. அதாவது இறைவன் உண்டு என்று நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களும் இல்லை. இறைவன் இல்லை என்று நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களும் இல்லை என்பதை குறிக்கிறது.

இரண்டாவது நிலைபாடு இறைவன் இல்லை என்றும் இப்பிரபஞ்சம் சுயமாக உருவாகியது என்றும் நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் உண்டு என்பதைக் குறிக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடுகளுக்குமிடையே தெளிவான வித்தியாசம் உள்ளது. கடவுள் உண்டா என்று அறியவில்லை என்பதற்குரிய வாதத்தைக் கொண்டு கடவுள் இல்லை என்று வாதிக்க முடியாது. ஏனெனில் இரண்டாவது நிலைபாடு கடவுள் இல்லையென்று ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாகும்.

ஆகவே இறைவன் உண்டு என்றோ, இல்லை என்றோ அறியேன் என்பவர் இறைவன் இல்லை என்று கூறும் நிலைபாடுடையவராக இருக்க முடியாது. ஆனால் கடவுளைப் பற்றிய விஷயத்தில் நாத்திகர்கள் இந்த முதலிரண்டு நிலைபாடுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவன் இல்லை என்று கூறுகின்றார்கள். அதற்கு ஆதாரமாக முதல் நிலைபாட்டை ஏற்றவருடைய ஆதாரங்களை சமர்ப்பிக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு வியாழனில் உயிரினங்கள் உண்டா? இந்த கேள்விக்கு உண்டு என்றோ இல்லை என்றோ உறுதியாக பதில் சொல்ல விஞ்ஞானிகளால் முடியாது. காரணம் உறுதியாக சொல்வதற்கான ஆதாரங்கள் முழுமையாக விஞ்ஞானிகளுக்கு கிடைத்திருக்கவில்லை.

1. வியாழனில் உயிரினங்கள் உண்டா என்று அறியவில்லை.
2. வியாழனில் உயிரினங்கள் உண்டு என்று அறிகிறோம்.
என்று இரு நிலைபாடுகள் இருக்க வாய்ப்புண்டு. இதில் முதல் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டவர் இரண்டாவது நிலைபாட்டை ஏற்றுக் கொள்ளவோ, இரண்டாவது நிலைபாட்டை ஏற்றுக் கொண்டவர் முதல் நிலைபாட்டை ஏற்றுக் கொள்ளவோ முடியாது. அதே சமயம் முதல் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டவர் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் உண்டு என்று கூறும் வாதத்தை நிராகரிக்க முடியாது. மாறாக அந்த தீர்வை ஏற்று உண்மையில் உயிரினங்கள் உண்டா? என்று அறிவதற்குரிய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்.

இதுபோல் தான் இறைவன் பற்றிய காரியத்திலும் விஞ்ஞானத்தின் நிலைபாடு இருக்க வேண்டும். இறைவனை சோதனைக்கூடங்களில் சோதித்து முடிவு செய்ய விஞ்ஞானத்தால் இன்றுவரை முடிந்ததில்லை. விஞ்ஞானம் ஒன்றை அங்கீகரிக்க வெண்டுமென்றால் அதற்கு சில அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கவேண்டும். அத்தகைய அடிப்படைகளையும் ஆதாரங்களையும் கொண்டு இறைவனை பரிசோதிக்க விஞ்ஞானத்தால் முடியவில்லை. முடியாத ஒரு காரியத்தை இல்லை என்று நிராகரிக்கவும் விஞ்ஞானவாதத்தில் இடமில்லை.

இந்த பிரபஞ்சநிலை அதன் தோற்றம் பற்றி விஞ்ஞானம் பல கோட்பாடுகளைக் கூறியிருந்தாலும் அவையொன்றும் கடவுள் இல்லையென்று கூறுவதற்கு ஆதாரமாகாது.
இந்த பிரபஞ்சம் பற்றியே திட்டவட்டமாக தெளிவாக அறியவில்லை என்ற நிலைபாட்டை விஞ்ஞானம் கொண்டிருக்க அந்த மாற்றம் திருத்தத்திற்கு உட்பட்ட விஞ்ஞானக்கோட்பாட்டை இறைவன் இல்லை என்று வாதிடுபவர் ஆதாரமாக சமர்ப்பிப்பது எப்படி சரியாகும்.

'அறியவில்லை" என்பது எக்காலத்திலும் 'இல்லை" என்றாகாது. இந்த பிரபஞ்சத்தில் சில மட்டுமே விஞ்ஞானத்திற்கு தெரியும். அதனால் விஞ்ஞானத்திற்கு தெரியாததெல்லாம் உண்மையில் இல்லை என்றாகாது. உண்மையில் அது இருக்கலாம். காரணம் ஒரு விஷயம் இல்லை என்று சந்தேகமில்லாமல் தெளிவாகும் வரை அதை நிராகரிக்கக்கூடாது என்பதே விஞ்ஞானத்தின் நிலைபாடு. இந்த நிலையை விஞ்ஞானிகள் மேற்கொண்டதாலேயே கண்ணுக்கு தெரியாத வஸ்துக்களை எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது.

பரந்து விரிந்த ஆகாயத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அது பண்டைய மனிதனின் மனதில் பல சிந்தனைகளை ஏற்படுத்தியிருந்தது. அழகிய இந்தக் காட்சியை காணும் பொழுது அவன் மனதில் பல கேள்விகள் எழுந்ததுண்டு. நாம் காணும் இந்த நட்சத்திரங்களுக்கு அப்பாலும் வேறு பல நட்சத்திர சமூகம் உண்டா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங்களுக்கு அப்பாலும் நட்சத்திரங்கள் இருக்குமா? என அன்று அறிய முடியவில்லை. அறிய முடியாததை இல்லை என்று விஞ்ஞானிகள் மறுத்து தீர்மானித்திருந்தால் புதிய பல நட்சத்திரங்களை பற்றிய கண்டுபிடிப்புகளை செய்திருக்க முடியுமா?

ஆக அறிய முடியாததையெல்லாம் இல்லை என்று விஞ்ஞானிகள் தீர்மானித்ததில்லை. புதிய நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். தொலை நோக்கியை கண்டுபிடித்தார்கள். இதனால் புதிய பல நட்சத்திரங்களைக் கண்டுபிடித்தார்கள். இன்னும் அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கியை கண்டுபிடித்தார்கள். இதனால் இன்னும் பல புதிய நட்சத்திரங்களைக் கண்டுபிடித்தார்கள். மிகப் பெரியதும், அதிக சக்தி வாய்ந்த தொலைக் காட்சிக் கருவியைக் கண்டுபிடித்து முன்னேற புதிய பல நட்சத்திரங்களின் கண்டுபிடிப்புகளும் அதிகமாகியது. அவைகளில் பல நம்முடைய சூரியனை விட பலமடங்கு பெரியது. விண்வெளியில் அறியப்படாத நட்சத்திரங்களும், கிரகங்களும் கோடிக்கணக்கில் இருக்கின்றன என்பதே விஞ்ஞானத்தின் தீர்வு. அவைகளை கண்டுபிடிப்பதற்குரிய ஆய்வுகளையே விஞ்ஞானிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். அறிய முடியாத காரியங்களை இல்லையென்று தீர்மானிக்கக் கூடாது என்பதற்காக இவ்வுதாரணம் கூறப்பட்டுள்ளது.

ஆக ஒரு பொருளைக் குறித்த 'அறிவில்லாமை"க்கும் ஒரு பொருளை குறித்த 'இல்லாமை" க்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டதால் தான் விஞ்ஞானம் முன்னேற்றத்தின் பாதையில் செல்ல முடிந்தது. இந்த வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் அறியாதது எல்லாம் இல்லாதது என்ற நம்பினால் மனிதன் காட்டைத் தாண்டி நகரத்திற்கே வந்திருக்க மாட்டான்.

1 comment:

  1. //மனிதன் எக்காலத்திலும் அங்கீகரித்து வந்த உண்மைகளில் ஒன்றாகும் இறைநம்பிக்கை. அதை நிலையில் கொள்ள ஆதாரங்கள் அவசியப்பட்டிருப்பதை விட அதை நிராகரிக்கவே ஆதாரங்கள் அவசியமாகிறது.//

    மனிதன் எல்லா காலத்திலும் கண்ணை மூடி ஏற்றுக் கொண்டான் என்பதற்காகவே அதை நிலை கொள்ள ஆதாரம் தேவையில்லை என்பது அறிவுடைய வாதமாக தெரியவில்லை. மனிதன் கண்ணைமூடிக்கொண்டு பல மூடனம்பிக்கைகளில் மூழ்கியுள்ளான். அதில் ஒன்றே இதுவும்.

    ReplyDelete