*****************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
*****************************************************
அருமைச் சகோதரர்களே!
நாமும், நமது முன்னோர்களும் இந்து மதத்தில் என்று நம் வாழ்க்கையைத் தொடங்கினோமோ அன்று தொட்டு மேல் ஜாதி இந்துக்களால் அவமானப்பட்டு வருகிறோம். இந்திய-நிலபிரபுத்துவ சனாதன ஆதிக்க சக்தியை எதிர்த்து நிற்க வலுவற்றவர்களாக, வெந்ததை தின்போம் விதி வந்தால் சாவோம் என்று வாழ்ந்த மக்களிடையே தோன்றிய சமூகப் புரட்சியாளார்களால் தொடங்கப்பட்ட போராட்டம் பல நூறு ஆண்டுகளாகியும் அது முற்றுப் பெறவில்லை. தொடர்கிறது.
அருமைச் சகோதரர்களே!
நாம் வாழ்ந்து வரும் இந்து சமூக கூட்டமைப்புக்குள் எத்தனையோ முரண்பாடுகள் உண்டு. அதனால் உயர் ஜாதி இந்துக்கள் இன்று நமக்கெதிராக ஒன்றுபட்டு அணிசேர்ந்து நிற்கிறார்கள். மேல் ஜாதி இந்துக்களுக்கு கீழ் ஜாதி இந்துக்கள் அடிமையாக இருக்கவேண்டும். அவர்கள் இட்ட வேலையை, இழிவாக கருதும் தொழில்களை எதிர்ப்பின்றி விரும்பிச் செய்திட தொடர்ந்து நிர்பந்திக்கப்பட்டு வருகிறோம்.
இந்த வர்ணாசிரம தர்ம கொள்கையை ஆண்டவன் கட்டளையாகவும், வேதங்களின் சாட்சியாகவும் நியாயப்படுத்தப்பட்டு கடைபிடித்து வரும் விதியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பலம் பொருந்திய சமூகச் சட்டமது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது இந்துமதம் இருப்பது வரையிலும் சாதிகள் பாதுகாக்கப்பட்டு வரும். சாதிகள் இருப்பது வரையிலும் தீண்டாமை கொடுமை இருந்தே தீரும். இந்து சமூக அமைப்பில் இது, இங்கு யாராலும் மாற்ற முடியாக ஒரு விதியாகி விட்டது.
இதில் சீர்திருத்தம் - சமரசம் காண விரும்பியவர்கள் தனி மதம் கண்டனர். தனிமைப் பட்டனர். அல்லது தோல்வி கண்டனர். இதுதான் உண்மை.
அருமை நண்பர்களே!
காலத்தின் மாற்றத்தால் உலகில் இன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கால கட்டத்தில் நாமும் மனிதர்களே என்று சுயமரியாதைச் சிந்தனையால் - உணர்வால் உந்தப்பட்டு நம்மைப் பற்றியுள்ள கேடுபாடுகளை நீக்கிட நமது உரிமைக்காக சில சமயங்களில் அவர்களின் சாதி சமூகக் கட்டுப்பாட்டை மீறி முன்னேற முனையும் போது அவர்களால் நாம் காயப்படுத்தப்பட்டோம்.
ஆம்! கீழ் வெண்மணியும், விழுப்புரமும், புளியங்குடியும், ஊஞ்சனையும் சங்கனாக்குளமும் இந்திய நில பிரபுத்துவ சனாதன இந்துச் சாதிக் கொடுமைக்கு பலியாகிய நமது சகோதரர்களின் சவக்குழியில் கட்டி எழுப்பப்பட்ட நினைவுச்சின்னங்களாகும். அதைத் தொடர்ந்து நடைப்பெற்று வரும் சம்பவங்கள் ஒன்றா இரண்டா?
தீண்டாமைக் கொடுமை தென் மாவட்டங்களில் குறிப்பாக இராமநாதபுரம், நெல்லை மதுரை மாவட்டங்களில் அதிகமாக இருந்து வருகின்றன. இப்பொழுது அண்ணா மாவட்டமாக இருந்து வரக்கூடிய வேடச்சந்தூரை ஒட்டிய கிராமங்களில் அதன் கொடுமை தீவிரமாகவே உள்ளது. பி. புதுக்கோட்டை கிராமத்தில் தேநீர் கடைகளில் தொங்குகின்ற குவளைகளை கழுவி தேநீரைக் குடித்துவிட்டு திரும்பக் கழுவி வைத்துவிட வேண்டும்.
வேடச்சந்தூர் தாலுகாவில் பூத்தம்பட்டியில் நிலைமை இன்னும் விசித்திரமாக இருக்கிறது. ஊரிலுள்ள தேநீர்க் கடைகளில் தனி கிளாஸ்கள் இருந்தாலும், டீ கடைக்கு முன்னால் இருக்கும் திண்டுகளிலோ அல்லது உயர்வான இடங்களிலோ உட்கார்ந்து டீ குடிக்க அனுமதிப்பதில்லை.
மதிப்பட்டி என்னும் கிராமத்தில் பொதுவான கிணற்றிலிருந்து தான் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்கவேண்டும். ஆனால் அரிசன மக்கள் தண்ணீரை இறைக்க அனுமதிக்கப்படுவதில்லை. நேரடியாக போய் எடுத்துவிட முடியாது. மேல் ஜாதி இந்துக்கள் எட்ட இருந்து விடும் தண்ணீரை குடத்திலோ அல்லது பாத்திரத்திலோ எடுத்து செல்லவேண்டும்.
அரசாங்கக் காரியமாக வரி வசூலிப்பது போன்ற வேலைகளில் இருக்கும் தலையாரி போன்ற அரிசன அரசு ஊழியர்கள் கிராமத்திற்குள் வந்தால், செருப்பை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு தான் ஊருக்குள் வர வேண்டும். அண்டையில் உள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தால் கட்டப்பட்டிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஐந்து நல்லிகள் உள்ளன. பொதுமக்களுக்காக உள்ள இந்த நல்லியிலிருந்து அரிசனங்கள் விருப்பம் போல் தண்ணீர் எடுத்துவிட முடியாது. இந்த நல்லிகளில் ஒரு ஓரத்தில் இருக்கும் நல்லியில் மட்டும் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்.
வெள்ளனம்பட்டி என்ற கிராமத்தில் சத்துணவுக் கூடம் ஒன்று இருக்கிறது. இதில் பணியாற்றும் ஆயாக்களில் ஒருவர் அரிசன சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சமையலில் விறகு எரிப்பு போன்ற காரியங்களோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டும். தப்பித் தவறி சமைத்துவிட்டால் சாதி இந்துக்கள், தங்களது குழந்தைகளை சத்துணவு சாப்பிட அனுப்பமாட்டார்களாம்.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சுவணம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், அரிசனங்களுக்கு என்று குறிப்பிட்ட தொழில்கள் இருக்கின்றன. சீர்வரிசைக்கோ அல்லது குழந்தை பிறந்த வீட்டுக்கோ, அரிசி மற்றும் பலகார கூடைகள் கொண்டு போனால், சிறிது கூலியை அரிசனங்களுக்கு கொடுக்கிறார்கள். சாதி இந்துக்கள் யாராவது இறந்து போனால் கூட துக்கச் செய்தியை சொல்வதும் இவர்கள் தான். இத்தகைய வேலைகளுக்கு கூப்பிட்டு அரிசனங்கள் வர மறுத்துவிட்டால் பெரிய பிரச்சினையே உருவாகி அடிக்கடி ரகளையே உருவாகி விடுகிறது.
தொட்டம்பட்டியில் காளியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அக்கோயிலில் அரிசனங்கள் வழிபடவோ, வணங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. சாமிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றால் கூட உயர்சாதி இந்துக்களின் தயவை நாடி அவர்கள் மனம் வைத்தால் தான் அரிசனங்கள் சாமிக்கு அர்ச்சனை போன்ற வழிபாடுகள் செய்யமுடியும்.
மாரியூர், நரிப்பூர், வேம்பார் போன்ற கிராமங்களிலே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரிசன பெண்கள் மாராப்பு போட முடியாது. ஆண்கள் வேட்டியை முழங்காலுக்கு கீழ் கட்ட முடியாது. மேல் துண்டு போடமுடியாது. அரசியல் கட்சிகளில் அதன் சாதி இந்துக்களின் அடியாளாக இருந்து அவர்களின் நல்லெண்ணத்தை பெற நம்மைக் காட்டிக்கொடுத்து பதவியும் சுகமும் பெற்றுள்ளார்கள். நமக்கு தியாகம் செய்து பெற்ற பதவியும், சுகமும் உயர்வும் அல்ல - அவர்கள் இங்கு பெற்று அனுபவிப்பது. எனவே, நமது இனத்தைச் சார்ந்த சமுதாயத் தலைவர்களை நம்பி பலன் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment