Thursday, October 13, 2005

மதமாற்றமல்ல - மனமாற்றம் - 4

**************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
**************************************************

அருமை நண்பர்களே!

சமூக முன்ளேற்றத்திற்கு சமுதாய மாற்றத்திற்கு - ஜாதி தீண்டாமை ஒழிவதற்கு இது வழிவகை செய்யுமென்று நீங்கள் நம்புகிறீர்களா? தீண்டாமை கொடுமையிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருக்கின்றன. அச்சட்டங்கள் என்ன சொல்கிறது? நமது பாரத நாட்டில் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படைச் சட்டம் இந்திய அரசியல் சட்டமாகும். இந்திய அரசியல் சட்டத்திலும் குறிப்பாக மூன்றாவது பாகம் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அரசியல் சட்டத்தினுடைய மூன்றாவது பாகம், அரசியல் அடிப்படை உரிமைகளை விளக்கி கூறுகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசே நினைத்தாலும் கூட மீறவோ அல்லது பறிக்கவோ முடியாத அளவிற்கு, பாதுகாப்புகளும் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் சட்டத்தினுடைய 13 வது ஷரத்தின் படி மூன்றாவது பாகத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை குறைக்கக்கூடிய அல்லது பறிக்கக்கூடிய எந்தச் சட்டத்தையும் அரசு உருவாக்கக் கூடாது. அப்படி மீறி உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் செல்லத்தக்கவையல்ல என்று கூறுகிறது. மேலும், அரசியல் சட்டத்தினுடைய 32 வது 326 வது ஷரத்துகளின்படி அடிப்படை உரிமைகள் மீறப்படும் அல்லது பறிக்கப்படும் வேளையில் பாதிக்கப்படுகிறவர்கள் முறையே உயர்நீதி மன்றத்திலும் அல்லது உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து உரிமைகளை தீர்வுகளை பெறலாமென்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அரசியல் சட்டத்தின் மூன்றாவது பாகத்தில் 17 வது ஷரத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. அதனை எந்த வகையில் செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் சமூக ஊனம் சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். இந்த 17 வது ஷரத்தை மையமாகவும் ஆதாரமாகவும் கொண்டுதான் 1955-ம் ஆண்டு தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை 1976-ம் ஆண்டு பல திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவந்து "வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்" என சட்டத்தின் பெயரையும் மாற்றிவிட்டனர். பொதுவாக சட்டங்கள் என்றாலே பல்வேறு ஓட்டைகளும் பலவீனங்களும் இருக்குமென்பது நமது அனுபவப்பூர்வமான கணிப்பு. ஆனாலும் வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை பொறுத்தவரை ஓட்டைகள் மிகக் குறைவாக உள்ள ஒரு சட்டமெனக் கூறலாம். இருந்தும், மிக மிகக் குறைவான அளவிலேயே இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி வருகின்றனர்.

தீண்டாமை குற்றங்கள் நமது பாரத நாட்டை பொறுத்தமட்டில் எல்லா மாநிலங்களிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் அது பரவி இருக்கின்றன. ஆயினும், தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களில் பெரும்பான்மையினர் வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்புச்சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதில்லை. இந்நிலைக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் அதி முக்கியமான காரணம் தீண்டாமை என்பது இங்கே சமூக அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது.

எனவே, அருமை நண்பர்களே!

காந்திஜியின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கை இங்கு வெற்றி பெறவில்லை. ஆனால் கோட்சேயை உருவாக்கிய மனுதர்மம் - அதன் வெளிப்பாடு மதவெறி ஜாதி வெறி வெற்றிப்பெற்று வருகிறது. வேத காலம் தொட்டே இந்து மதத்தில் உயர் சாதி இந்துக்கள் மனுதர்மம் தமக்களிக்கப்பட்டிருக்கும் சமூக சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உழைக்கும் வர்க்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஒரு பெரும் பகுதி மக்களை தீண்டப்படாதவர்களாக பிரித்து, ஒதுக்கி வைத்து, இழிவுபடுத்தி அவமானப்படுத்தி, தமக்கு நிரந்தர அடிமையாக்கி இன்று ஏகபோகமாக வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் உயர் ஜாதி இந்து சமூக கூட்டமைப்பிலிருந்து - அதாவது இந்து மதத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே தீண்டப்படாத மக்களை இழிவு நீக்கி வாழ வைக்கும்.

சகோதரர்களே!

நமதுநாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் ஆகியும் நமது நிலை உயரவில்லை. இன்னும் தீண்டத்தகாத மக்களாக வேண்டாத இனமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம். ஜாதி இந்துக்கள் என்பவர்கள் உயர்ந்த ஜாதியினர். நாம் இந்துக்களாம்: ஆனால் தாழ்ந்த ஜாதியாம். நமது சமூக மக்கள் இறந்துவிட்டால் பிணங்களைக்கூட பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாத கேவலமான நிலையில் நாம் இருக்கிறோம்.

உதாரணமாக, 1985-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் வலங்கைமானில் மாண்புமிகு அமைச்சர் விஜயலட்சுமி அவர்கள் ஒரு பாலத்தை திறந்து வைத்தார்கள். பாலம் திறந்து ஒரு சில மாதங்களுக்கு பின்பு, அதன் பக்கத்திலிருந்த அரிஜன குடியிருப்பில் ஒரு முதியவர் இறந்துவிட்டார். அவரது உடலை சுடுகாட்டிற்காக எடுத்துச் செல்கிறார்கள், வழியிலேயே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பாலம்: அதன் வழியே பிரேதம் கொண்டு செல்லப்படவேண்டும். ஆனால், பிணம் கொண்டு செல்ல முடியாத இக்கட்டான நிலை, திகைத்து நிற்கின்றனர் அரிஜன மக்கள். பாலத்தின் முனையில் ஒரு பெரிய கூட்டம் ஆத்திரத்தோடும் ஆயுதங்களோடும் கூடி நிற்கிறது. இந்த பிரேதத்தை இந்த பாலத்தின் வழியே கொண்டு செல்லக்கூடாது என்று வழி மறைக்கிறது.
" ஏனய்யா நமது அரசாங்கம் கட்டிய பொதுவழி தானே, நாங்கள் போகக்கூடாதா? ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்டதும் ஆவேசத்துடன் பலாத்காரத்தில் இறங்கினர். இந்த நிலைமையை அறிந்த காவல் துறையினரும் மற்ற அதிகாரிகளும் அங்கே வந்தனர். அரிஜன மக்களின் நியாயக் குரலைக் கேட்ட அதிகாரிகள் ஜாதி இந்துக்களிடம் நியாயத்தை எடுத்துச்சொன்னார்கள். பிணம் கொண்டு போவதைத் தடுக்காதீர்கள் என்று சொன்னார்கள்.
அதிகாரிகள் கூறிய நியாயத்தை அவர்கள் அலட்சியம் செய்தனர். மதிக்க மறுத்து விட்டனர். நேரம் செல்ல செல்ல இருதரப்பிலும் மக்கள் திரள்கின்றனர். பெரும் கூட்டமாகிவிட்டது. பதட்டநிலை உருவாகிறது. மீண்டும் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள். எச்சரிக்கை செய்தார்கள். ஜாதி இந்துக்கள் கேட்கத் தயாராக இல்லை. ஜாதி இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் அவர்களை விட்டுவிட்டு அரிஜனங்களைப் பார்த்து நீங்கள் விட்டுக் கொடுத்து ஒதுங்கிப் போய்விடுங்கள் என சமாதானப்படுத்தினர். வேறு வழியின்றி சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்ட பிணத்தைத் திரும்பக் கொண்டு வந்து இறந்தவருடைய வீட்டிற்கு முன்னாலேயே இறுதிச்சடங்கைச் செய்தனர்.

இந்த சம்பவம் எதைக் காட்டுகிறது? அரசாங்கம் கட்டிய பாலத்தில் கூட போக முடியாத நிலையில் அரிஜனங்கள் நிலை இருக்கிறதென்றால், நாமும் இந்துக்களே என்று பொதுவாகச் சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா?

சகோதரர்களே! சிந்தித்துப் பார்ப்பீர்.

அரசாங்கத்தின் கடமை சட்டத்தைப் பாதுகாப்பது. ஆனால், அரசு அதிகாரிகளே இது போன்ற பிரச்சினையில் ஜாதி இந்துக்களுக்காக வளைந்து நெளிந்து கொடுக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊஞ்சனை என்னும் கிராமத்தில் அரிஜனங்கள் கோவில் விழா கொண்டாடினார்கள். விழாவிலே சாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேல்ஜாதி இந்துக்கள் வசிக்கின்ற தெரு வழியாக சாமி ஊர்வலம் சென்றது. அவ்வளவுதான் இதை ஜாதி இந்துக்கள் பார்த்தார்கள். அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஓடோடி வந்தனர். கூட்டம் சேர்ந்தது. உங்கள் சாமியை(??!!) எங்கள் தெரு வழியாக கொண்டு செல்ல விடமாட்டோம். வந்த வழியைப் பார்த்து திரும்பிப் போங்கள் என்று அச்சுறுத்தினர்.
இது பொதுத் தெருவாயிற்றே, இது சாமி ஊர்வலம் தானே இதை கொண்டு போவதில் என்ன தப்பு என்று வாதாடினார்கள். ஜாதி இந்துக்கள் கேட்கவில்லை. ஒரே கலகம், இரத்தக்காயம், சாவு, பல அரிஜன வீடுகள் தீ வைத்து சாம்பலாக்கப்பட்டன. அந்தப் பகுதி அரிஜன வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது. அரசு அதிகாரிகள் அரிஜனங்களுக்கு ஆறுதல் கூறினார்களே தவிர வேறு எதுவும் செய்து விட முடியவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அரிஜனங்கள் தூக்கிச் செல்கின்ற சாமிக்குக் கூட அவர்கள் வசிக்கின்ற பகுதியில் நுழைவதற்குத் தடை என்ன அநியாயம் இது? இன்னொரு சம்பவம். இதையும் தெரிந்துக் கொள்வோம்.

திருச்சி பக்கத்திலே ஒரு கிராமம். அங்கே மேல்ஜாதி இந்து ஒருவருடைய தோட்டத்திலுள்ள கிணற்றில் அரிஜன சிறுவர்கள் குளித்து வந்தனர். இதைப் பார்த்த தோட்ட உரிமையாளர் கிணற்றில் கீழ்ஜாதி பையன்கள் குளிப்பதா என்று குமுறினார். குதித்தார். அவரது கிணற்று தண்ணீரே தீட்டுப் பட்டுவிட்டதாக எண்ணி குமுறினார். ஒருநாள் அந்த கிணற்றிலே சிறுவர்களுடைய பிணங்கள் மிதந்தன. என்ன காரணம்? கிணற்றில் மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்தது. வழக்கம் போல் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவர்கள் பிணமாக மிதந்தனர்.

இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் இந்திய சுதந்திர திருநாட்டில் இன்றும் நடந்து வருகிறது. எனனே பரிதாபம்! என்னே கொடுமை! பாரதத்தாய் பெற்றெடுத்த பிள்ளைகளில் இத்தகைய பேதமா?

தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள ஒரு வழக்கம். மேல் ஜாதி இந்து யாராவது இறந்து போனால், அந்தச் செய்தியை அவரது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு தெரிவிக்க அரிஜன மக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல சாவுக்கு மேளம் அடிக்கின்ற இழி வேலையையும் அரிஜனங்களே செய்யவேண்டும் என நிர்ப்பந்தபடுத்தி வந்தனர். 50 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையர் ஆட்சியில் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டது. எக்காரணம் கொண்டும் அரிஜன மக்கள் விரும்பாத நிலையில் இப்படிப்பட்ட இழிவான வேலைகளைச் செய்ய அவர்களை நிர்பந்திக்கக் கூடாது என இரு தரப்பினர் ஒப்புக்கொண்டு நடைமுறையில் இருந்து வந்த ஏற்பாட்டிற்கு விரோதமாக அண்மையில் வேண்டுமென்றே அரிஜன மக்களுக்கு அவமானம் ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு வெளியூரிலிருந்து அரிஜன ஆட்களை வைத்து இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டு சச்சரவாகி சண்டையாக மாறி பாண்டியன் என்னும் பட்டதாரி இளைஞர், துப்பாக்கி சூட்டிற்கு பலியாகிவிட்டார். இதை முன்னின்று நடத்தியவர் ஒரு அரசியல் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அறியும்போது அளவு கடந்த வேதனையில் விம்முகிறோம்.

No comments:

Post a Comment