*******************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
*******************************************************
பண்டைக் காலம் தொட்டு இன்று வரை மனிதன் ஒவ்வொரு காலத்திலும், மனித பண்பினை உதாசீனப்படுத்திவிட்டு தன்னைச் சுற்றிலும் சிறுசிறு எல்லைகளை வகுத்து வந்துள்ளான். - அந்த வட்டார எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமே தன்னைச் சார்ந்தவர்கள் என்றும், அதற்கு வெளியே பிறந்தவர்கள் தன்னைச் சாராத அந்நியர் என்றும் நிர்ணயித்துக் கொண்டான். -
இந்த எல்லைகள் அறிவுப்பூர்வமாக ஒழுக்கப்பூர்வமாக அல்லது பூகோள அடிப்படையில் அமைத்துக்கொண்டவை அல்ல. மாறாக தற்செயலான பிறப்பின் அடிப்படையிலானதாகும். - சில சமயங்களில் ஒரு குடும்பம் கோத்திரம் அல்லது இனம் ஆகியவற்றில் பிறப்பதுவே இவற்றுக்கு அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. - இதிலிருந்து திரிபுகள் உண்டாகின்றன.
மனிதன் பிறப்பு-இடம், மொழி, இனம் கோத்திரம் இவைகளினால் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அணுகும் முறைகளினால் எழுந்த வேறுபாடுகள், காலகாலமாக நிலைப்பெற்று வந்துள்ளன. அதன் அடிப்படையில் தன்னை சார்ந்தவர்கள் மீது அன்பு செலுத்துவதும், மற்றவர்கள் மீது பகைமை, துவேசம் காட்டுதல், பிறரை இழிவாகக் கருதுதல், மற்றவர்களுக்கு அநீதி இழைத்தல், பிறரை அடிமைப்படுத்துதல் போன்ற கோர உருவங்கள் மனிதனின் எண்ண அலைகளில் உருவாகி அது தன் செயல்களை செய்யத் தொடங்கியது.
இக்கேடான எண்ணத்தால் உருவான பாகுபாட்டை நியாயப்படுத்தி- சித்தாந்தங்கள் உருவாக்கப்பட்டன.- மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.- சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.- ஒழுங்கு விதி முறைகள் வகுக்கப்படுகின்றன.
பல சமுதாயங்களும் பல அரசாங்கங்களும் இதனை பிரத்தியேகக் கொள்கையாக ஏற்று பல்லாயிரம் ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கின்றன.
- யூதர்கள் இதே அடிப்படையில்தான் இஸ்ரவேலர்களை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பினங்களாக கருதினர். - தங்கள் மார்க்க சட்டதிட்டங்களில் கூட இஸ்ரவேலரல்லாத மக்களின் உரிமைகளையும், அந்தஸ்த்தையும் தாழ்த்தி வைத்தனர். - கறுப்பர், வெள்ளையர் எனும் பாகுபாட்டின் காரணமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இன வேற்றுமைகள் காரணமாக தினம் தினம் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பார்த்து படித்து வருகிறோம். - ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் பெருநிலத்தில் புகுந்து செவ்விந்தியர் மீது தம் ஆதிக்கத்தை கொடுமை புரிந்த நெடிய வரலாறுகள் உண்டு.
இவைகளையெல்லாம் நாம் இன்று பார்க்கும்போது நமது நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அப்பால் பிறக்கின்றவர்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவற்றை பறிப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு - அவர்களைக் கொள்ளை அடிப்பதற்கும், அடிமைப்படுத்திக் கொள்வதற்கும், தேவைப்பட்டால் உலக வாழ்விலிருந்து அம்மக்களை அழித்தொழிப்பதற்கும் கூட தமக்கு உரிமையும் அதற்குண்டான அதிகாரமும் இருப்பதாக வாதிடுகின்றனர்.
மேலே கண்ட பாகுபாடுதான் இந்து மதத்திலும் வர்ணாசிரம தர்மத்தை தோற்றுவித்து இன்று ஆட்சி அதிகாரத்தின் மீது ஏறி இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்துகிறதே, உயர் சாதி தத்துவம், அதன் பரிணாம வளர்ச்சிதான் தீண்டாமைக் கொடுமையின் கோர உருவம்.
எனவே, இந்த இனவாத சாதி வேறுபாட்டிற்கு தெளிவான விளக்கத்தை தந்து மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுகிறது இஸ்லாம்.
இறைவன் எல்லா மனிதர்களையும் அறை கூவியழைத்து மூன்று முக்கிய உண்மைகளை விளக்கியுள்ளான்.
- உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஓரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது. இன்று உலகில் காணப்படும் உங்கள் இனங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பூர்வீக இனத்தின் கிளைகளேயாகும். அந்த பூர்வீக இனம் ஒரு தாய் தந்தையிலிருந்து துவங்கியதேயாகும். இந்த படைப்புத் தொடரில் எந்த இடத்திலும் நீங்கள் கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த வேற்றுமைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை என்ற விஞ்ஞான பகுத்தறிவு பூர்வமான விளக்கத்தை தருகிறது இஸ்லாம்.
- ஒரே இறைவனே உங்களைப் படைத்தவன். பலவித மனிதனை பலவித கடவுள் படைக்கவில்லை. ஒரே மூலப்பொருளில் தான் நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள். சில மனிதர்கள் மட்டும் ஏதோ ஒரு தூய்மையான மூலப்பொருளிலிருந்தும் வேறு சிலர் அசுத்தமான மூலப்பொருளிவிருந்தும் உருவாக்கப்படவில்லை. ஒரே வழிமுறையில் தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்று திருமறை அறிவுறுத்துகிறது. எச்சரிக்கிறது.
ஆரம்பத்தில் பல மனித ஜோடிகள் இருந்து அவர்களின் மூலம் உலகின் பல பாகங்களிலும் மனித சமுதாயம் தனித்தனியாக தோன்றவில்லை. பூர்வீகத்தில் ஒரே இனமாக இருந்தபோதிலும் நீங்கள், பல சமுதாயமாகவும் கோத்திரங்களாகவும் பிரித்து விட்டிருப்பது ஒரு இயற்கையான விஷயமாகும்.
உலகம் முழுதும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே குடும்பம் இருக்க முடியாதது வெளிப்படையான ஒன்றாகும். மனித இனம் பெருக பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும் பின் பல கோத்திரங்கள், பல சமுதாயங்கள் உருவாவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. எனவே, மனிதன் பூமியில் பல பகுதிகளிலும் வசிக்கத் தொடங்கினான். உடலமைப்பு, நிறம், மொழி, நடை, உடை, பாவனை ஒன்றுக்கொன்று வேறுபட்டேயாக வேண்டியது இருந்தது.
ஒரு பகுதியில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும் வெகு தொலைவில் வசிப்பவர்கள் நெருக்கமற்றவர்களாகவும்தான் இருக்க முடிந்தது. இந்த இடைவெளி (அல்லது வேற்றுமை என்ன ஏற்படுத்தி விட்டதென்றால்) உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண்டான், அடிமை மேலோன், கீழோன் என்ற பாகுபாடுகள் தோற்றுவிக்க வேண்டுமென்பதில்லை.
ஒரு இனம் மற்றோர் இனத்தைவிட தன்னை உயர்ந்ததாக கருதி வேற்றுமை பாராட்ட வேண்டுமென்பதில்லை. மாறாக, இறைவன் மானிட சமூகங்களை பல்வேறு சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்து அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாக பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த இயற்கை வழியை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வம்சத்தாரும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒன்று கூடி ஒரு கூட்டு சமுதாயத்தையே உருவாக்கியிருக்கமுடியும். வாழ்க்கை பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். ஆனால் இறைவனின் இயற்கை நியதி எவற்றையெல்லாம் அறிமுகத்திற்கான சாதனங்களாக ஆக்கி தந்ததோ, அவற்றை எல்லாம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வீண் பெருமை பேசி ஒருவருக்கொருவர் குரோதம் காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டனர். இந்த விரோதம் இத்துடன் நின்று விடாமல் கொடூரத்தின் எல்லைக்கே போய்விட்டது.
ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே சிறப்பு அல்லது உயர்வுக்கான அடிப்படை ஏதேனும் இருக்கிறது அல்லது இருக்க முடியுமென்றால் அது ஒழுக்கச் சிறப்பேயாகும். ஆகவே இஸ்லாம் மிக சிறப்பாகவே சொல்லுகிறது. பிறப்பை பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமானவர்களே. ஏனெனில் அவர்களைப் படைத்தவன் ஒருவனே. மனிதனின் படைப்பிற்கான மூலப் பொருள், படைப்பு முறை அனைத்தும் ஒன்றே.
எனவே, ஒருவனுக்கு மற்றொருவனை விட பிறப்பால் உயர்வு கிட்டுவதற்கு எவ்வித அறிவுப் பூர்வமான காரணமும் இல்லை. ஒருவனுடைய உயர்வு தாழ்வு அவனுடைய வாழ்க்கையிலிருந்து தான் அறிய முடியும்.
நல்லவை நாடியவன் நல்லவனாகவும், தீயவைகளை நாடியவன் தீயவனாகவும் இருக்கிறான். இங்கு இன வேறுபாட்டிற்கு இடமில்லை.
குர்ஆனின் வசனத்தில் விளக்கப்பட்டுள்ள இந்த உண்மைகளைத்தான் அண்ணலார் நாயகம் அவர்கள், தமது சொற்பொழிவில் மேலும் விளக்கியுள்ளார்கள். மக்காவை வெற்றிக்கொண்டபோது கஃபாவை இறை ஆலயத்தை வலம் வந்து தவாப் செய்தபின் பெருமானார் அவர்கள் ஆற்றிய பேருரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்கள்.
உங்களிடமிருந்து குறைகளையும் அதன் வீண் பெருமைகளையும் போக்கிவிட்ட இறைவனை துதித்து நன்றி செலுத்துகிறேன். மக்களே, எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினர்களாக பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர் இறையச்சம் உள்ளவர் அவரே இறைவனின் பார்வையில் கண்ணியமிக்கவர். மற்றொருவன் - துர்பாக்கியவான்.
அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன் அன்றி மனிதர் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர்.
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான் (பை ஹகீ, ஈமானைப் பற்றிய பிரிவு, திர்மிதி) என்று மனிதன் தோன்றிய வரலாறை விளக்குகிறது.
தன் இறுதி ஹஜ் பயணத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிகின்றார்கள்:
மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியனுக்கு அரேபியன் அல்லாதவனை விடவோ கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தை பொறுத்தே தவிர, வேறு எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களிடத்தில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே. நான் உங்களிடம் இறைவனின் தூதை சேர்ப்பித்து விட்டேன் அல்லவா?
மக்கள் பதிலளித்தனர்: "இறைவனின் தூதரே! ஆம்! சேர்ப்பித்துவிட்டீர்கள்!" - அப்படியானால் இங்கே வருகை தந்திருப்போர் இங்கில்லாதவர்களுக்கு இவ்விஷயத்தை எட்டச்செய்ய வேண்டும். (பை ஹகீ).
ஒரு ஹதீஸில் பெருமானார் அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதை விட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.
மற்றொரு ஹதீஸில் கூறுகிறார்கள்: "அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.", "இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்."
பின் வருபவை இன்னொரு ஹதீஸின் வாசகமாகும்:"அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின் பாலும் செயல்களின் பாலும் தான் நோட்டமிடுகிறான்." (முஸ்லிம் - இப்னுமாஜா)
இந்த போதனைகள் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறை விசுவாசிகள் கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. அச்சமுதாயத்தில் நிறம், இனம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை வகுப்பு மாச்சரியம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது.
இஸ்லாமிய குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும், எந்த இனத்தை எந்த குலத்தை எந்த நாட்டை சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
அங்கே இன பேதமில்லை, நிற பேதமில்லை, புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டற கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை.
பழைய மனப்பான்மையும் தாழ்வு நிலையும் மாறி புதிய சிந்தனையும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. நேற்றுவரை ஒரு இனம் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டே எடுபிடிகள் ஏவல்காரர்களாக எண்ணினார்கள். தங்கள் தயவில் வாழவேண்டிய கூட்டம் என்று அவர்கள் எண்ணியது மட்டுமல்ல. மனுதர்மமே அதுதான். சட்டமே அதுதான் என்ற அகங்காரமும், ஆணவமும் கொண்டவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். இன்னும் பல நூறு ஆண்டுகளென்ன, ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இங்கே அந்த நிலை மாறப்போவதில்லை. மாற்றவும் மாட்டார்கள்.
அரசாங்கச் சட்டமெல்லாம் நடைமுறைக்கு வருவதெல்லாம் சில சலுகைகளை அளிப்பதற்கே தவிர, நமது வாழ்வை மாற்றுவதற்கல்ல. நமது சமுதாய நிலையை உயர்த்துவதற்கல்ல என்பதை ஒவ்வொருவரும் தெரிந்தாக வேண்டும். இந்த சாதிக்கென இத்தனை சலுகை என பகிரங்கமாக - பட்டவர்த்தனமாகப் பேசுவது கூட இன்னும் நிற்கவில்லை. நாம் ஏனைய இந்து சாதியினரைப் போன்று தொழில் செய்ய முடிவதில்லை. வியாபாரத்துறையிலே நமக்கு வாய்ப்பில்லை. கடை விரிப்பார், கொள்வாரில்லை என்ற பரிதாப நிலையே நீடிக்கிறது.
இந்துக்களின் எண்ணிக்கைக்காகவே அரிசனங்கள் இந்துக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனரே தவிர, நம்மை இந்துக்கள் என்று சொல்லவோ, சமுதாய அந்தஸ்து தரவோ எந்த சாதி இந்துவும் தயாராக இல்லை என்பதை யாரும் மறுக்கமுடியாது.
எனவே, அறிவுப்பூர்வமான முடிவுக்கு வந்தாக வேண்டும்.
அவசரக்கோலத்திலோ அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலோ திடீரென மாறிவிட வேண்டும் என்ற துடிப்பிற்காகவோ அல்ல. ஒரு இனத்தின் பெயரிலே அதே இன மக்களால் ஆழம் காண முடியாத அடித்தளத்திலே அமுக்கி, அழுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலையிலிருந்து விடுபட்டாக வேண்டும். விடுதலை அடையவேண்டும். இல்லையேல் விமோசனமே கிடையாது. இதை தர்க்க ரீதியாக ஆணித்தரமாக வாதிட்டு நிரூபிக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment