Sunday, December 2, 2007

டிச. 6 - இந்திய இறையாண்மை தகர்ந்த நாள்!




பாபரி மஸ்ஜித் - இடிந்து போன
15 ஆண்டுகள்





1992 டிசம்பர் 6, இந்தியாவின் வரலாற்றில் அழிக்க இயலாக் கறையாக இன்றும் என்றும் நிலைத்திருக்கிறது. அல்லாஹ்வின் ஆலயமாம் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம். இந்தியாவில் முஸ்லிம்களை இல்லாமலாக்கி பூரண இந்துத்துவ ஆட்சியை நிலைநிறுத்த வேண்டி செயல்பட்டு வரும் பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகளின்நேரடி களம் தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு.

ஆம்!!!

அன்றைய தினம் நாம் இழந்தது நமது பள்ளிவாசலை மட்டுமல்ல. மாறாக, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தன்மானத்தையும், எதிர்கால வாழ்வுரிமையையும் தான். இன்று 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது இந்திய முஸ்லிம்கள் தங்களது நிலைபாட்டை மீண்டும் ஒருமுறை மீள்ஆய்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எத்தனையோ கலவரங்களும், இனப்படுகொலைகளும் நடந்ததைப் போலல்லாமல் தெளிவாக தியதி குறிப்பிட்டு, அரசு செலவின் மூலம் பிரயாண ஏற்பாடுகள் செய்யப்பட்டு கலவரக்காரர்கள் ஒன்று கூட்டப்பட்ட இந்த சம்பவம் இந்திய இறையாண்மையையே அவமானப்படுத்தியதாகும்.

இந்திய சுதந்திரத்திற்காய் தன்னலம் பேணாமல், நாட்டை முன்னிறுத்தி தங்களது உடமைகளையும், பொருளாதாரத்தையும், உயிர்களையும் வாரிவாரித் தந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இந்திய அரசாங்கமும், அரசுத்துறைகளும் தந்த விலைமதிக்க முடியாத பரிசுதான் நமது பாபரி பள்ளி இடிப்புச் சம்பவம்.

பள்ளிவாசல் இடிப்பைத் தொடர்ந்து டிசம்பர் 1992 - ஜனவரி 1993-ல் பம்பாயில் காவல்துறையும், இந்துத்துவப் பாசிஸ்டுகளும் சேர்ந்து முஸ்லிம்களுக்கெதிராக இனப்படுகொலைகளை நடத்தினர். முஸ்லிம்களின் இரத்தம் வழிந்தோடுவதைத் தடுக்கத் திராணியற்ற அரசாங்கமாகவே மத்திய மாநிலங்களின் அரசுகள் நடந்தன. இன்று வரை அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எவ்வித நீதியோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. குற்ற பரம்பரையாகவே முஸ்லிம் சமுதாயம் இன்னும் காட்சியளிக்கிறது.

பம்பாய் படுகொலைகள் நடந்த 10 வருடங்களுக்குப் பிறகு 2002-ல் குஜராத்தில் மீண்டும் ஒரு பயங்கர முஸ்லிம் இனப்படுகொலை அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் நரேந்திரமோடியின் நேரடித் தலைமையின் கீழ் நடந்தேறியது.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களும், முஸ்லிம் பெண்களின் கற்பும் சூறையாடப்பட்டது. இன்றுவரை யாருமே தண்டிக்கப் படவில்லை. இதற்கு ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்பும், எல்லா அரசியல் கட்சிகளும்,
கட்சித் தலைவர்கள் அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

பாபரி பள்ளி இடிக்கப்பட்ட 15 ஆண்டுகள் ஆனபின்பு பள்ளிவாசலை மறந்துவிடும்படி முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் பள்ளிவாசலைக் கட்டி தருவதன் மூலம் மட்டுமே இந்தியாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும்.

மட்டுமல்லாமல், த்ற்போது மத்திய அரசுக்கு நடுநிலைபேணும் அனைத்து சமுதாயத்ததினரின் கோரிக்கைகள் இதுதான்.

1. 1961-ல் பாபரி மஸ்ஜிதும் அதைச்சுற்றியுள்ள இடங்களையும் முஸ்லிம்களிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு.

2. 1992-ல் பள்ளிவாசல் இடிப்பைத் தொடர்ந்துப் போடப்பட்ட வழக்கு.

3. பள்ளிவாசல் இடிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்றச் சம்பவங்களை விசாரிக்கப் போடப்பட்ட லிபரான் கமிஷன்.


மேற்சொன்ன வழக்குகளும், கமிஷனும் இன்று செயலற்றுப்போய் கிடக்கின்றன.

மத்திய அரசு உடனடியாக இந்த வழக்குகளை தீரவிசாரித்து உடனடி தீர்வு வழங்கவேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் தீர்க்கப்படவேண்டும். இல்லையென்றால், இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் நியாயவான்கள் ஒன்று திரட்டப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பாபரி பள்ளியை
நிர்மாணிக்கப் படுவது தவிர்க்க இயலாததாகும்.

நன்றி: South India Friends Association (SIFA) - Dammam.

No comments:

Post a Comment