Tuesday, December 20, 2005

கறுப்பு சட்டைக் காரர்கள் கவனத்திற்கு!

சமீபத்தில் படித்ததில் பிடித்த கி.வீரமணி அவர்களின் கடிதம்:

நீ தமிழன்; எப்படி? மொழியால், இனத்தால் பண்பாட்டால் நீ தமிழன். இந்த அளவுகோல்படி நீ தமிழனாக இருக்கிறாயா? இது என் கேள்வியல்ல _ தந்தை பெரியாரின் கேள்வி.

அறிஞர் அண்ணா தமிழர்கள் என்பதற்கு விளக்கம் சொன்னார் _ மொழியால், வழியால், விழியால் (பண்பாட்டில்) தமிழர் என்றார்.

உன் பெயர் முதலில் உன் தாய்மொழியில் இருக்கிறதா? உன் தாய்மொழி உன் வீதியில் இருக்கும் கோயிலுக்குள் ஒலிக்கிறதா?

உன் வீட்டு நிகழ்ச்சிகளில் தாய் மொழிக்கு இடம் உண்டா?

தமிழா, நீ கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் உள்ளே சென்று பூசை செய்ய முடியுமா?

முடியாது! காரணம் என்ன? நீ ''சூத்திரன்'', ''பஞ்சமன்'' _ சாஸ்திரப்படி மட்டுமல்ல; இன்றைய அரசமைப்புச் சட்டப்படியும் கூட!
அதனால்தானே தந்தை பெரியாரும் 10 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்களும் 1957 நவம்பர் 26_இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26_வது மதப் பாதுகாப்பு பிரிவினை _ ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தினர். மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையும் ஏற்றனர்.
இன்று வரை அதில் மாற்றம் இல்லையே _ பின் எப்படி நாம் மானமுள்ள தமிழர்கள்?

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் ''நீச்ச பாஷை'' என்பவர்தானே உமக்கு ஜெகத்குரு?
நீ கொண்டாடுவது ''பண்டிகைகளே'' தவிர விழாக்கள் அல்லவே!
தீபாவளியாக இருந்தாலும், வேறு எந்தத் தெருப் புழுதியாக இருந்தாலும் ''தேவர்கள், அசுரர்களைக் கொன்றார்கள்'' என்கிற கதை வராத பண்டிகைகள் உண்டா?

அசுரர்கள் எனக் கூறப்படுபவர்கள் எல்லாம் சுராபானம் குடிக்க மறுத்த திராவிடர்கள்தானே? சுரர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் சுரா பானம் குடித்த ஆரியர்கள் என்று விவேகானந்தர் முதல் நேரு உள்ளிட்டு பி.டி.சீனிவாச அய்யங்கார்கள் வரை எழுதியுள்ளனரே _ அவற்றைப் பற்றி ஒரு நொடி நேரம் அறிவைச் செலுத்தி சிந்தித்தது உண்டா?

சுரர்கள் அசுரர்களைச் சூழ்ச்சியால் அழித்தார்கள் என்று எழுதி வைத்த கதைகளை நம்பி அசுரர்களாக்கப்பட்ட நாமே நமது அழிவைப் பெருமைப்படுத்திக் கொண்டாடுவது, ஒரு இனத்தின் தன்மானத்துக்கு அழகாக இருக்க முடியுமா?

இதனைத் தானே அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 60 ஆண்டு காலத்திற்குமேல் படித்துப் படித்துச் சொன்னார். _ இதற்கு மேலும் நம் தோல் மரத்துக் கிடக்கலாமா?

தமிழன் படிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து மேல் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றுதானே ஓயாது பாடுபட்டோம். குலக் கல்வியை பெரியார் ஒழித்ததால்தானே தமிழன் இன்று படிப்பும், பதவியும் பெறும் நிலை!
ஜாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறாயே! தமிழா, நீ தமிழனாக, மானம் உள்ள மனிதனாக இருக்கவேண்டாமா? அதனைத் திசை திருப்பும் ஜாதிச் சாவுக் குழி வெட்ட வேண்டாமா? உன் உடன்பிறப்பையே ''தீண்டத்தகாதவன்'' என்கிறாயே _ உன்னைச் சூத்திரன் என்பவனை 'சாமி' என்கிறாயே!

படித்த இளைஞனே _ இரண்டு பேர் நீங்கள் சந்தித்தால் உங்களின் உரையாடல் என்ன? நம் இனத்தைப் பற்றியா _ மொழி உணர்வைக் குறித்தா? பண்பாட்டுத் தளத்தைப் பற்றியா? இல்லையே!

சினிமாவைப்பற்றிதானே சிரித்துச் சிரித்துப் பேசுகிறாய்!

சீரழிக்கும் சினிமாக்கள்தான் உன் குருதி ஓட்டமா? சினிமாக்காரர்கள்தான் உங்கள் கனவு லோக லட்சியப் புருடர்களா?

உலகில் சினிமாக்காரர்களுக்காக டிக்கெட்டுகளை விற்பதும், திரைப்படப் பெட்டிகளுக்கு ஊர்வலம் விடுவதும், அதில் யார் முந்தி என்பதில் அடித்துக் கொண்டு கொலை வரை நடப்பதும் இங்கல்லாமல் வேறு எங்கு?

இந்த நாட்டைப் பீடித்துள்ள அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று தொலைநோக்கோடு தந்தை பெரியார் கூறியதை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாயா?

விஞ்ஞானம் வளர்ந்தால் அறிவு வேட்கை வளரும் என்பது பொது நியதி. ஆனால், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?

தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனம் மற்றும் ஏடுகள், இதழ்கள் மூடத்தனத்தின், பிற்போக்குத்தனத்தின் மொத்த குத்தகையாகத்தானே செயல்படுகின்றன?

அஞ்ஞானத்தை, விஞ்ஞானத்தின் மூலம் பரப்புகிறார்களே _ இது அறிவு நாணயமா? படித்த தமிழனே, பகுத்தறிவை இழந்து இந்த வலையில் வீழ்வது விவேகம் தானா?

செல்போன், இணைய தளம் என்பது தேவையான விஞ்ஞான சாதனங்கள்தான். சினிமாக் கலாச்சாரத்தால் சீரழிந்துபோன உன் சிந்தனை அவற்றில் எவற்றைத் தேடிக் கொண்டு இருக்கிறது?

இளைஞனே, இலட்சியங்கள் உன்னை கொள்ளை கொள்ள வேண்டாமா? அவற்றிற்கு மாறாக பல்வேறு ''போதைகள்'' அல்லவா உன்னைப் பாதை மாற்றத்திற்குச் செலுத்துகின்றன.

போதைகளால் தடுமாறும் உனக்கு நாடு எக்கேடு கெட்டால் என்ன _ சமுதாயம் சீரழிந்தால் என்ன _ மொழி மூக்கறுபட்டால் என்ன _ பண்பாடு பாழ்பட்டால்தான் என்ன?

அளவுக்கு மீறி கேளிக்கை உணர்ச்சிகள் ஒரு சமூகத்தில் புகுத்தப்படுவதற்கு உள்நோக்கம் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?

உணவுக்கு உப்பு தேவைதான். ஆனால், உப்பே உணவாகலாமா?

தமிழனிடத்தில் இன உணர்வும், நாட்டு உணர்வும், இலட்சியக் கோட்பாடுகளும் ஆட்கொண்டு விடக் கூடாது என்கிற சூழ்ச்சிதானே!

கறுப்புச் சட்டை உனக்குச் சுயமரியாதையை ஊட்டியது _ பகுத்தறிவைக் கொடுத்தது _ சமூக நீதியைச் சொல்லிக் கொடுத்தது _ பெண்ணுரிமையைப் பேணும் பண்பாட்டை உணர்த்தியது.

அந்த மண்ணில் இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்ட காவிகள் காலடி எடுத்து வைத்தால், பழைய சரிதம் மறந்து, அவற்றிற்கு நடைபாவாடை விரிக்க மல்லுக்கட்டி நிற்கலாமா?

உன் இனத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்களை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்த சிலர் துடிக்கும் பொழுது, 'ஏதோ ஒரு மயக்கத்தில்' அவர்களுக்குக் கைலாகு கொடுக்கிறாய். கேட்டால் விமர்சனம் என்கிறாய் _ விமர்சனத்தின் விளக்கம் தெரியுமா உனக்கு?

திராவிடன், தமிழன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கடைசியில் எதிரிகளின் காலடிக்குள் உன்னை அறியாமல் பதுங்கப் பார்க்கிறாய். புத்தம் அழிந்த வரலாறு தெரியுமா உனக்கு?

நண்பன் யார்? பகைவன் யார்? என்று அடையாளம் காணத் தெரியாவிட்டால் உன் எதிர்காலம் எங்கே போய் முடியும்?

'போதை'யை விடு _ சமுதாயப் பாதையை தேர்ந்தெடு! இலட்சிய மிடுக்குடன் வீறு நடை போடு!

5 நட்சத்திர ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்படுகிறாய். சிக்கனம் என்பதைச் சிறுமையாகக் கருதுகிறாய் _ இது உன்னை எங்கு கொண்டு சேர்க்கும் என்று சிந்திக்க மறுக்கிறாய்.

தாயை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு, தாய் மூகாம்பிகைக் கோயிலுக்குக் கடன் வாங்கிக் குடும்பத்துடன் செல்கிறாய்!
ஏனிந்த போதைகள்?

உரத்தின் மூலம் உணவு விளையும் உண்மைதான்; அதற்காக உரத்தையே உண்ண முடியுமா?

எண்ணிப் பார் தமிழா!

நன்றாகத் தான் உள்ளது. ஆனால் என்ன செய்ய! இப்படி சிந்திக்கக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து மரியாதை செய்ய ஆரம்பித்து விட்டார்களே! நாளை இதே கறுப்புச் சட்டைகள் அவரை கடவுளாக்காமல் இருந்தால் சரி தான்.

புத்தரை இந்நாட்டை விட்டு ஓட்ட ஆரியர்கள் செய்த தந்திரம் தான் சிலை வணக்கத்தை எதிர்த்த புத்தருக்கே சிலை வைத்து அவரை பின்பற்றியவர்களுக்கு அவரை கடவுளாக்கியது. ஆரியர்களின் மும்மூர்த்தி தெய்வங்களும், அவர்களுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்நாட்டில் மற்றொரு கடவுளால் பிடித்து நிற்க முடியுமா என்ன?

எனவே "அவாள்"களுக்கு எதிரான கருத்துக்களோடு வரும் சிந்தனாவாதிகளை ஒழிக்க "அவாள்"கள் செய்யும் தந்திரங்களில் ஒன்று தான் அச்சிந்தனாவாதிகளுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் முதலில் சிலை வைத்து கொடுப்பது. நம் நாட்டு மக்கள் தானே பின்னர் அவர்களாகவே அச்சிந்தனாவாதிகளை கடவுளாக்கிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களையும் அவர்களுடைய சிந்தனைகளையும் இல்லாமல் ஆக்குவது ஒன்றும் "அவாள்"களுக்கு கடினமல்ல.

இஸ்லாத்தில் இவ்வாறு முஹம்மது நபிக்கு ஒரு சிலை வைத்து கொடுக்க முடியவில்லையே என்ற கவலை தான் "அவாள்"களுக்கு இஸ்லாத்தின் மேலும், இஸ்லாமியர்களின் மேலும் இவ்வளவு "கரிசனத்திற்கு" காரணம்.

கவனம் கறுப்பு சட்டைக் காரர்கள்!

14 comments:

  1. //அசுரர்கள் எனக் கூறப்படுபவர்கள் எல்லாம் சுராபானம் குடிக்க மறுத்த திராவிடர்கள்தானே? சுரர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் சுரா பானம் குடித்த ஆரியர்கள் என்று...//

    அப்படியா??

    ReplyDelete
  2. 1850க்கு முன் திராவிடம் என்ற வார்த்தை தமிழில் இல்லை.

    பிஷப் ராபர்ட் செய்த ஒரு "incomplete research" முலம் வந்த வினை இவை அனைத்தும்.

    திராவிடம் என்றால் "southern people/language" என்று வடமொழியில் அர்த்தம்.

    ஈழத்தில் மலைநாட்டு தமிழரை "பரதேசிகள்" என்று அழைப்பதை தடுத்துவிட்டு,

    தமிழ் நாட்டில் கிரிப்பட்டி, பாப்பபட்டி ஆகிய ஊர்களில் தேர்தல் நடத்தி விட்டு பின்னர் மார்தட்டி கொள்ளலாம் "நாங்கள் தமிழர்" என்று.

    (அப்படியே இந்த மனித கழிவுகளை அகற்றும் பனியில் இனியும் மனிதரை இடுபடுத்தாமல் இருக்க வேண்டும்)

    ராஜேந்தர சொழன் காலத்தில் போனது தான் தமிழனின் சுறுசுறுப்பு.

    அதன் பின் இப்படி தான் எதையாவது பேசி, ஜாதி சண்டை, ஆரியம் திராவிடம் என்று பைசா உபயோகம் இல்லாத விசயத்தில் கவனம் செலுத்தி கொண்டு உள்ளார்கள் "தமிழ் தலைவர்கள்".

    சுத்த nonsense!

    ReplyDelete
  3. //சுத்த nonsense!// - samudra

    தமிழர்கள் தங்கள் இன மேம்பாடு குறித்து அக்கறை படுவது தமிழரல்லாத உமக்கு nonsense ஆகத்தான் தெரியும்.

    நீரெல்லாம் பேச வந்துட்டீரு!!

    ReplyDelete
  4. //இஸ்லாத்தில் இவ்வாறு முஹம்மது நபிக்கு ஒரு சிலை வைத்து கொடுக்க முடியவில்லையே என்ற கவலை தான் "அவாள்"களுக்கு இஸ்லாத்தின் மேலும், இஸ்லாமியர்களின் மேலும் இவ்வளவு "கரிசனத்திற்கு" காரணம்.//

    இது உண்மைதான்.

    "முஹம்மது நபியை டீஸண்ட்டான படமாக வரைந்தால் கூட மசூதிகளின் மாடங்களிலிருந்து கொலையாணைகள் பிறப்பிக்கப்படும் " என்று முன்பொரு சமயம் 'நேசமாக' ஒருவர் புலம்பியிருந்தார்.
    தங்களின் சிலை கோட்பாட்டால் '(முஸ்லிமல்லாத) திராவிடர்'களை வீழ்த்தியதுப்போல் இந்த 'முஸ்லிம்களை' வீழ்த்த முடியவில்லையே என்ற ஆற்றாமையால் தான் அப்படி புலம்பினார் என்று வீரமணியின் வார்த்தைகள் விளக்குகின்றன. இங்கு அதை எடுத்து வைத்த உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  5. சகோதரர்களுக்கு,

    அனானிமசாக வரும் சில பின்னூட்டங்களின் கேள்விகள் நியாயமாகவும், நன்றாகவும் உள்ளன. ஆனால் அவை அனானிமஸ் என்ற ஒரே காரணத்திற்காக நான் இங்கே அனுமதிக்கவில்லை. எனவே சகோதரர்கள் தயவு செய்து அனானிமஸாக பின்னூட்ட வேண்டாம். என்ன வேண்டுமெனினும் எழுதுங்கள். ஆனால் அதனை ஒரு அடையாளத்துடன் எழுத கேட்டுக் கொள்கிறேன். அனானிமஸ்களை அனுமதிக்காததற்கு மன்னிக்கவும்.

    அன்புடன்

    இறை நேசன்.

    ReplyDelete
  6. //தமிழர்கள் தங்கள் இன மேம்பாடு குறித்து அக்கறை படுவது தமிழரல்லாத உமக்கு nonsense ஆகத்தான் தெரியும்.

    நீரெல்லாம் பேச வந்துட்டீரு!!//

    முதலில் தமிழ்கள் இடையே எதாவது "உனர்வு" இருக்குதா?

    ஈழம் ஈழம்ன்னு வாய்கிழிய பேசற வைகோவுக்கு யாரும் ஜாஸ்தி வோட்டு போட்ட மாதிரி தெரியல்!

    தமிழ்நாட்டுல யார் அய்யர் பூசை செய்யாமல் புது விட்டுக்கு குடி போறாங்க?

    அட பெரியார் "நாயக்கன்" யாருக்காவது தெரியாம இருக்குதா ஊர்ல ?

    பாப்பாபட்டி மாதிரி ஊர்ல் எந்த் பிராமனன் பிரச்சனை பன்னறான்?

    Bishop Robert Caldwell கண்டுபுடிச்ச "திராவிடம்" ஒரு சம்ஸ்கிரத வார்த்தைன்னு கூட தெரியாம வடமொழி எதிர்ப்பு அது இதுன்னு பேசுனா nonsense இல்லாம அது வேற என்னா?

    சாமியே இல்லைன்னு என்ன பேசுனாலும் திருவன்னாமலைக்கு போற கூட்டத்த பார்த்தா தெரியாதா எத்தனை பேர் இந்த "தமிழன்" , "திராவிடன்" பத்தி எல்லாம் கவலைபடுறாங்கனு ?

    படிச்சுட்டு எழுதுங்க!
    நான் தான் தமிழ் படிக்காம அதிஅற்புதமா spelling mistakes நிறைய இருக்கர மாதிரி எழுதுனா, தமிழ் படிச்ச நிங்க எல்லாம் எவ்ளோ நல்லா எழுதுலாம் ?

    ReplyDelete
  7. அனானிமஸ் சகோதரர்களே!

    கேள்வி நல்லா கேட்டிருக்கிறீர்கள். ஒரு அடையாளத்தோட வந்தால், என்னால் முடிந்த/தெரிந்த பதில் தருவேன்.

    இதை ஏற்கெனவே மேலே கூறி விட்டேன். கவனிக்கவில்லையா?

    அன்புடன்

    இறை நேசன்.

    ReplyDelete
  8. மிக நல்ல பதிவு.

    சிந்திக்க வேண்டியவர்கள் ஏற்கனவே சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    அது கண்டு பொறுமும் மனிதர்களைப் பற்றி இனி யாரும் அக்கறைக் கொள்ளப் போவதில்லை.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. 1850க்கு முன் திராவிடம் என்ற வார்த்தை தமிழில் இல்லை.

    பிஷப் ராபர்ட் செய்த ஒரு "incomplete research" முலம் வந்த வினை இவை அனைத்தும்.

    திராவிடம் என்றால் "southern people/language" என்று வடமொழியில் அர்த்தம்.
    //

    இதிலிருந்து என்ன கூற வருகிறீர்கள் சமுத்ரா அவர்களே!

    வந்தேறி ஆரியர்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீக குடிகளை அழைத்த சொல் தான் "திராவிடர்கள்" என்று நன்றாகவே தெரியும்.

    பின்னர் தங்களுடைய நிலைநிற்பிற்காக திராவிடம் என்றால் தென் பகுதி மக்கள்/மொழி என்று அவர்கள் அர்த்தப் படுத்தியதையும் அறிவோம்.

    1850 க்கு முன் வரை தமிழில் அவ்வார்த்தை இல்லை என்பதும் தெரியும். ஏன் இப்பொழுதும் அவ்வார்த்தை எங்களுக்கு தேவையில்லை. எங்களை இந்தியர்கள் என்று அடையாளப் படுத்துவதிலேயே பெருமையும் படுகிறோம். பார்ப்பன வந்தேறிகள் இங்கு வாழ்ந்த பழங்குடிகளை அடக்கியாள உபயோகித்த வார்த்தை தான் திராவிடர்கள்/அசுரர்கள். இவ்வார்த்தை தமிழில் இல்லை, ஆனால் மனுவில் இவ்வார்த்தை உள்ளது. இல்லை என்று உம்மால் கூற முடியுமா? அதில் "த்ராவிட்" என்ற பதம் வருகிறது. மனுவை எழுதிய காலத்தை கணக்கிட்டால் "திராவிடம்" என்ற சொல்லின் காலயளவும் தெரியும்.

    ஈழத்தில் மலைநாட்டு தமிழரை "பரதேசிகள்" என்று அழைப்பதை தடுத்துவிட்டு,//

    சொந்தம் நாட்டில் "புலையன்", "சாணான்", "சக்கிலியன்" போன்ற வார்த்தைகளால் அழைப்பதை விடவா? இதற்கு காரணம் யார்? சொந்தம் வீட்டின் பிரச்சினையை கூறும் போது அடுத்த வீட்டின் பிரச்சினையை கூறி திசை திருப்புகிறீர்களே! வந்தேறி பார்ப்பனர்களை காக்க எப்படியெல்லாம் முயற்சிக்கிறீர்கள் எனத் தெரிகிறது. முதலில் இங்குள்ள வந்தேறிகளிடமிருந்து எங்களை காத்து விட்டு பின்னர் கண்டிப்பாக எங்கள் சகோதரர்களை காக்க ஈழம் செல்கிறோம். உங்கள் அக்கறை(!)க்கு நன்றி.

    தமிழ் நாட்டில் கிரிப்பட்டி, பாப்பபட்டி ஆகிய ஊர்களில் தேர்தல் நடத்தி விட்டு பின்னர் மார்தட்டி கொள்ளலாம் "நாங்கள் தமிழர்" என்று.//

    என்ன நடத்த விட மாட்டோம் என்று அந்த உயர் ஜாதி திமிரில் பேசுகிறீர்களா? தமிழன் பொறுமைசாலி தான். ஆனால் எல்லை கடந்தால்...............

    அப்படியே இந்த மனித கழிவுகளை அகற்றும் பனியில் இனியும் மனிதரை இடுபடுத்தாமல் இருக்க வேண்டும்.//

    யார் என்ன கூறுவது என்ற விவஸ்தை இல்லாமல் போய் விட்டது. இதற்கு காரணம் யார்? "பிறப்பால் அவரவருக்கு விதிக்கப் பட்ட பணியை மட்டுமே அவரவர் செய்ய வேண்டும்" என மனுவில் உள்ளதை நடப்பாக்க முயல்பவன் யார்?

    ராஜேந்தர சொழன் காலத்தில் போனது தான் தமிழனின் சுறுசுறுப்பு.//

    இது சரி தான். இல்லையெனில் ஒரு தமிழரல்லாத நீங்கள் இவ்வளவு தமிழர்களை மட்டம் தட்டிய பிறகும் உங்களை சும்மா விட்டு வைத்திருக்கிறார்களே! ஆனால் சுறுறுப்பு வந்தால் என்ன ஆகும் என்பதையும் நீங்கள் கொஞ்சம் யோசித்து தமிழர்களைக் குறித்து கருத்து கூறுவது நல்லது.

    சமுத்ரா அவர்களே அவசியமில்லாத வார்த்தைகளை தயவு செய்து பின்னூட்டமிடும் போது பிரயோகிக்க வேண்டாம் என கூறிக் கொள்கிறேன். அது நல்ல கருத்து பரிமாற்றத்திற்கு அழகல்ல. ஒரு தமிழரல்லாத நீங்கள் தமிழர்களைக் குறித்து அவசியமில்லாத வார்த்தைகளை உதிர்ப்பதும் அழகல்ல. இது வரை நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை கூட வெளிப்படுத்தாமல் இப்படி தமிழர்களை இழித்துரைப்பது என்ன விதத்தில் சரியாகும்.

    தொடர்ந்து ஆரிய வந்தேறிகளையும், அமெரிக்காவையும் தூக்கி பிடித்துக் கொண்டு உங்களை நீங்களே ஏன் தாழ்த்திக் கொள்கிறீர்கள். மனிதாபிமானத்தோடும், நடுநிலையோடும் எழுத கொஞ்சமாவது முயற்சி செய்யுங்கள்.

    நன்றி.

    அனானிமஸ் சகோதரர்களுக்கு,

    பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை, தமிழ் பெயர், பள்ளிகளில் தமிழில் பிரார்த்தனை போன்ற விஷயங்களைக் குறித்து கேள்வி வரும் என்பதை எதிர் பார்த்தே இக்கட்டுரையை இங்கு வைத்தேன். மிகவும் சிறந்த கேள்விகள் தான் இவை. ஆனால் அனானிமஸ்களுக்கு பதிலிடுவதில்லை என எடுத்த முடிவில் மாற்றமில்லை. இதை ஏற்கெனவே மேலே இரு முறை தெரிவித்து விட்டேன்.

    எனவே பின்னூட்டமிடுபவர் அனானிமஸாக பின்னூட்டமிட வேண்டாம். தயவு செய்து அடையாளத்தோடு இக்கேள்வியை கேளுங்கள். சர்ச்சை செய்வோம்.

    அன்புடன்

    இறை நேசன்.

    ReplyDelete
  10. //முதலில் தமிழ்கள் இடையே எதாவது "உனர்வு" இருக்குதா?//

    "உணர்வு"தானே? இருக்கிறதே! TNTJ நடத்தும் 'உணர்வு' வார இதழைப் பற்றி நீர் கேள்விப்படவில்லையா?

    //ஈழம் ஈழம்ன்னு வாய்கிழிய பேசற வைகோவுக்கு யாரும் ஜாஸ்தி வோட்டு போட்ட மாதிரி தெரியல்!//

    வைகோ வுக்கு ஓட்டு போட்டால்தான் தமிழுணர்வு உள்ளவர்கள் என்று அர்த்தமா?

    //தமிழ்நாட்டுல யார் அய்யர் பூசை செய்யாமல் புது விட்டுக்கு குடி போறாங்க? //

    உயர் ஜாதி என தம்மைக் கூறிக்கொள்வோர் தமது வருமானத்திற்காக ஏற்படுத்தி வைத்த வழிமுறைகளுள் இதுவும் ஒன்று. விபரம் புரியாத அப்பாவி தமிழன் இன்னமும் இதை கடைப்பிடிக்கின்றான். இதைத்தான் கி.வீ. கேட்கிறார் " உன் வீட்டு நிகழ்ச்சிகளில் தாய் மொழிக்கு இடம் உண்டா?". என்றைஇக்கு தமிழன் இதையெலாம் உணர்ந்து இந்த பழம்பஞ்சாங்கங்களை தூக்கி எறிகிறானோ அன்றுதான் அவனுக்கு விடிவு காலம். அது உம்மைல் போன்றவர்களௌக்கு பிடிக்காது என்றாலும், அது ஒருநாள் நடந்தே தீரும்.

    //அட பெரியார் "நாயக்கன்" யாருக்காவது தெரியாம இருக்குதா ஊர்ல ?//

    அவர் 'அதை' விட்டு வெளியில வந்து பல காலம் ஆகி விட்டது. உம்மைப் போன்றவர்கள்தான் இன்னும் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

    //பாப்பாபட்டி மாதிரி ஊர்ல் எந்த் பிராமனன் பிரச்சனை பன்னறான்?//

    இந்த சாதிங்குற எளவ அறிமுகப்படுத்தி மனுசங்கள கூறு போடு வச்சிருக்கிறதே அவங்கதானே! இதுல தனியா வேற பிரச்ன பண்ணனுமா என்ன?

    //Bishop Robert Caldwell கண்டுபுடிச்ச "திராவிடம்" ஒரு சம்ஸ்கிரத வார்த்தைன்னு கூட தெரியாம வடமொழி எதிர்ப்பு அது இதுன்னு பேசுனா nonsense இல்லாம அது வேற என்னா?//

    இந்தியன் என ஒருங்கிணைக்காமல், திராவிடன், ஆரியன், அசுரன் என் யார் கூறு போட்டார்கள்? ஓ.. இந்த வார்த்தை சம்ஸ்கிருத்த்துலேருந்து வந்ததா? அப்போ, இந்த மொழியை சார்ந்தவங்கதான் சக தேச மனிதர்களிடையே நிலவும் இவ்வளவூ வேறுபாடுகளுக்கும், பிரிவினைகளுக்கும் காரணமா?

    //சாமியே இல்லைன்னு என்ன பேசுனாலும் திருவன்னாமலைக்கு போற கூட்டத்த பார்த்தா தெரியாதா எத்தனை பேர் இந்த "தமிழன்" , "திராவிடன்" பத்தி எல்லாம் கவலைபடுறாங்கனு ?//

    இந்த நிலைமை மாற வேண்டும் என்கிறீரா, கூடாது என்கிறீரா?

    //படிச்சுட்டு எழுதுங்க!
    நான் தான் தமிழ் படிக்காம அதிஅற்புதமா spelling mistakes நிறைய இருக்கர மாதிரி எழுதுனா, தமிழ் படிச்ச நிங்க எல்லாம் எவ்ளோ நல்லா எழுதுலாம் ?//

    நீர் என்னதான் மாறுவேஷம் கட்டிக்கிட்டு எழுதுனாலும் அங்கங்கே உம்மோட உள் உணர்வு வெளிப்பட்டு விடுகிறதே!!

    ReplyDelete
  11. //வந்தேறி ஆரியர்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீக குடிகளை அழைத்த சொல் தான் "திராவிடர்கள்" என்று நன்றாகவே தெரியும்//

    இதுவரை நிருபிக்கபடாவிட்டாலும் வெள்ளைகாரன் கூறிவிட்டான் என்பதாலேயே இன்னும் நமது மக்களில் சிலர் inferiority complexஇனால் திரும்ப திரும்ப கூறி கொண்டு இருக்கும் விசயம் தான் "அரியம் திராவிடம்"

    உங்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இறுந்தால் Stepen Oppenheimer எழுதிய Journey of Man வாங்கி படிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

    //சொந்தம் நாட்டில் "புலையன்", "சாணான்", "சக்கிலியன்" போன்ற வார்த்தைகளால் அழைப்பதை விடவா?

    கவனம், இப்படி வார்த்தைகளை பயன்படுத்தினால் உங்களை கைதி செய்ய முடியும்.

    இனையத்தில் எழுதினாலும் கூட.


    // தமிழன் பொறுமைசாலி தான். ஆனால் எல்லை கடந்தால்...............


    வாய் சொல் வீரர்ரே,

    இப்படியே பேசி கொண்டு இருங்கள் உலகம் எங்கோ போய் கொண்டு இருக்கும். :-)

    ReplyDelete
  12. //ஒரு தமிழரல்லாத நீங்கள் தமிழர்களைக் குறித்து அவசியமில்லாத வார்த்தைகளை உதிர்ப்பதும் அழகல்ல

    அட உங்க பதிவ மொதல நல்ல பாருங்க, எத்தனை தடவை "ஜாதி" அப்பறம் இந்த யூதர்களை திட்டுனது - இந்த மாதிரி எழுதுனது நிங்க.நான் அல்ல.

    இப்படி எழுதுவோர் தான் "தமிழர்" ன்னு சொன்னா இந்த "தமிழர்" மேல எனக்கு ஒரு மரியாதையும் வரலே!

    ReplyDelete
  13. சொந்தம் நாட்டில் "புலையன்", "சாணான்", "சக்கிலியன்" போன்ற வார்த்தைகளால் அழைப்பதை விடவா? இதற்கு காரணம் யார்? சொந்தம் வீட்டின் பிரச்சினையை கூறும் போது அடுத்த வீட்டின் பிரச்சினையை கூறி திசை திருப்புகிறீர்களே! வந்தேறி பார்ப்பனர்களை காக்க எப்படியெல்லாம் முயற்சிக்கிறீர்கள் எனத் தெரிகிறது. முதலில் இங்குள்ள வந்தேறிகளிடமிருந்து எங்களை காத்து விட்டு பின்னர் கண்டிப்பாக எங்கள் சகோதரர்களை காக்க ஈழம் செல்கிறோம். உங்கள் அக்கறை(!)க்கு நன்றி.//

    கவனம், இப்படி வார்த்தைகளை பயன்படுத்தினால் உங்களை கைதி செய்ய முடியும்.

    இனையத்தில் எழுதினாலும் கூட.//


    அன்புள்ள சமுத்ரா,

    பதில் சொல்ல முடியாமல் வரும் போது திசை திருப்பும் சாமர்த்தியம், கண்டிப்பாக உங்களை கண்டு நிறைய விஷயங்கள் படிக்க வேண்டும்.

    இங்குள்ள ஜாதிப் பிரச்சினைகளுக்கு காரணம் என்ன என்பதைக் குறித்து பேசினால் மனிதர்களை மோசமான வார்த்தைகளைக் கொண்ட அடைமொழிகளோடு(ஜாதிப் பெயர்களோடு) அழைத்து தாழ்த்தி வைத்திருப்பது யார் என்று கேட்டால் நான் அவ்வார்த்தைகளை பயன்படுத்துகிறேன் என்று என்னை அதனைக் குறித்து பேசாமல் இருக்க செய்வதற்காக "கைது" என்று கூறி பயப்படுத்தி அழகாக திசை திருப்புகிறீர்கள்.

    இதுவும் பார்ப்பனர்களின் ஒரு தந்திரம் தானே!. இப்படி கூறி பயமுறுத்தி அதனைக் குறித்து பேசாமல் இருக்க வைக்க முயல்கிறீர்களா?

    மனிதர்களை "தலையிலிருந்து பிறந்தான், தோளிலிருந்து பிறந்தான், தொடையிலிருந்து பிறந்தான், காலிலிருந்து பிறந்தான்" என்று கூறி வகைபடுத்தி அதில் தன்னை கடவுளின் அடுத்த வீட்டு காரனாக காட்டி அப்பாவி இந்தியர்களை ஆன்மீக ரீதியில் அடிமைப் படுத்தி வைத்து வெறும் 2% இருக்கும் இந்திய மக்கள் தொகையில் தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொண்டிருப்பவனைக் குறித்து பேசினால் அதை அழகாக திசை திருப்புகிறீர்கள். என்ன பாசம் பொத்துக் கொண்டு வருகிறதோ?

    சரி தமிழர் பிரச்சினை, ஜாதி பிரச்சினை எல்லாம் இரண்டாவது பார்ப்போம்.

    மனுவைக் குறித்தும், பிராமணன், சத்திரியன், வைணவன், சூத்திரன் - இப்படி மனிதர்களைப் பிரிப்பதைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன?

    இதனை முதலில் கூறுங்கள். பின்னர் நாம் மற்ற விஷயங்களைக் குறித்து விவாதிப்போம்.


    அன்புடன்

    இறை நேசன்

    ReplyDelete
  14. இறைநேசன்,

    எனது பதில் எனது வலைபூவில் உள்ளது.
    http://mymeikirthi.blogspot.com/2005/12/blog-post_25.html

    ReplyDelete