Monday, December 12, 2005

எம்.பி க்களின் வாயில பொன்னு, மக்களின் வாயில மண்ணு!

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்களை ஆஜ்தக் டெலிவிஷன் நிருபர்கள் குழு மடக்கியது. எம்.பி.க்கள் கேள்வி கேட்க ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை பெற்றுள்ளனர்.


ஆஜ்தக் டெலிவிஷன், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களை `பொறி' வைத்து பிடிக்க 2 நிருபர்களை நியமித்தது. அனிருத்தா பகல் மற்றும் சுஹாசினிராஜ் ஆகிய 2 நிருபர்கள் இந்த புலன் விசாரணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழுவின் தலைவர் அனிருத்தா பகல். இவர்தான் முன்பு தெகல்கா பேர ஊழலை அம்பலப்படுத்தியவர். பின்னர் இவர் `கோப்ரா போஸ்ட் டாட்காம்' என்ற இணைய தளத்தை தொடங்கினார்.

எம்.பி.க்கள் தங்களிடம் லஞ்சம் வாங்குவதை கையும், களவுமாகப் பிடிக்கும் இந்த திட்டத்துக்கு `ஆபரேஷன் துரியோதனன்' என்று பெயரிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் தங்களது புலன் விசாரணையைத் தொடங்கினார்கள்.

புலன் விசாரணை நிருபர்கள், `வட இந்திய சிறுஉற்பத்தியாளர்கள் சங்கத்தின் (நார்த் இண்டியன் ஸ்மால் மேனுபாக்சரர்ஸ் அசோசியேசன்-நிஸ்மா) பிரதிநிதிகள் என்று போலியான ஒரு அமைப்பை உருவாக்கி, தங்களை அதன் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டனர்.

நிருபர்கள் இருவரும் சுமார் 51 எம்.பி.க்களையும், அவர்களது புரோக்கர்களையும் சந்தித்து, தங்களது சங்கத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு எம்.பி.க்கள் ஒத்துக்கொண்டனர். 11 எம்.பி.க்கள் `ஆபரேஷன் துரியோதனன்' திட்டத்தில் சிக்கினார்கள்.


கேள்விகள் மற்றும் அது தொடர்பான துணைக்கேள்விகள் கேட்க எம்.பி.க்கள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை நிருபர்கள் குழுவிடம் லஞ்சமாகப் பெற்றனர். வருடம் முழுவதும் இப்படி கேள்விகள் கேட்க, துணைகேள்விகள் கேட்க சில எம்.பி.க்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த எம்.பி.க்களிடம் 60 கேள்விகளை நிருபர்கள் கொடுத்து, பாராளுமன்றத்தில் புயலை கிளப்பச் சொன்னார்கள். அதில் 25 கேள்விகளை எம்.பி.க்கள் தேர்ந்து எடுத்தனர். இந்த கேள்விகளை அவர்கள் பாராளுமன்றத்தில் எழுப்பினார்கள். ஒருவர் கேட்ட ஒரே கேள்வியை சில சமயம் வேறு சில எம்.பி.க்களும் கேட்டிருக்கிறார்கள்.

சிறுதொழில் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்பான கேள்விகள் தவிர, சில சமயம் பங்கு மார்க்கெட் தொடர்பான, பொது மக்களுக்குப் பயன்படும் கேள்விகளையும் நிருபர்கள் கொடுத்துள்ளனர். அவற்றையும் அந்த எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளனர்.

ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த `ஆபரேஷன் துரியோதனா' கடந்த மாதம் (நவம்பர்) வரை ரகசியமாக நடைபெற்றது.

எம்.பி.க்களிடமும், அவர்களது ஏஜெண்டுகளிடமும் புலன் விசாரணை நிருபர்கள் குழு லஞ்சப்பணம் கொடுத்ததை மொத்தம் 56 வீடியோ கேசட்டுகளில் ரகசியமாக படமாக்கினார்கள். எம்.பி.க்கள் புலன் விசாரணைக்குழு நிருபர்கள், எம்.பி.க்களின் புரோக்கர்கள் மற்றும் யார்-யாருடன் அவர்கள் பேசினார்களோ, அந்த உரையாடல்களை 70 கேசட்டுகளில் ரகசியமாக பதிவு செய்தனர். 900-க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்தக் குழுவிடம் எந்த, எந்த எம்.பி. எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்ற விவரம் வருமாறு:-

1. அன்னா சாகேப் எம்.கே.பாட்டில் (பா.ஜனதா)-ரூ.45 ஆயிரம்
2. சந்திரபிரதாப்சிங் (பா.ஜனதா)-ரூ.35 ஆயிரம்
3. பிரதீப் காந்தி (பா.ஜனதா)-ரூ.55 ஆயிரம்
4. ஒய்.ஜி.மகாஜன் (பா.ஜனதா)-ரூ.35 ஆயிரம்
5. சுரேஷ்சண்டேல் (பா.ஜனதா)-ரூ.30 ஆயிரம்
6. சத்ரபால்சிங் லோதா (பா.ஜனதா மேல்-சபை எம்.பி.)-ரூ.15 ஆயிரம்
7. நரேந்திரகுமார் குஷ்வாகா (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.55 ஆயிரம்
8. லால்சந்திராகோல் (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.35 ஆயிரம்
9. ராஜாராம்பால் (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.35 ஆயிரம்
10.மனோஜ்குமார் (ராஷ்டிரீய ஜனதாதளம்-ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்
11.ராம்சேவக்சிங் (காங்கிரஸ்)-ரூ.50 ஆயிரம்.


இந்த எம்.பி.க்களை சிக்கலில் சிக்க வைத்துள்ள புலன் விசாரணைக்குழுவின் தலைவரான நிருபர் அனிருத்தா பகல் கூறியதாவது:-

"பாராளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் உயிரோட்டமுள்ள சின்னம். பொதுமக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மூலம் தங்களது குரலை எதிரொலிக்கும் இடம் அது. அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் தங்களது பிரதிநிதி மூலம் (எம்.பி.) ஆட்சியில் பங்கு பெறும் இடமும் அது. தன்னிகரற்ற உறுப்பினர்கள் மூலம் ஜனநாயகத்தின் வலிமையை-புகழை பரப்பும் இடம் அது.

பாராளுமன்றத்தின் நீதிநெறிக்குழு வகுத்துள்ள நடத்தை விதிமுறைகளை அதன் உறுப்பினர்களான எம்.பி.க்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால் எங்களது புலன் விசாரணையின்போது சிலர் இந்த புனிதமான சபையை தலைகுனிவுக்கு ஆட்படுத்துவதை கண்டோம். பாராளுமன்றத்தின் மீது எங்களது புலன் விசாரணைக்குழு ஆழமான மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளது. இந்த எங்களது புலன் விசாரணையின் மூலம் பாராளுமன்றத்தின் புனிதத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க லஞ்சம் கேட்ட எம்.பி.க்கள், சில பிரச்சினைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று யோசனை தெரிவித்து, அதற்காக ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அனிருத்தா பகலின் `கோப்ரா போஸ்ட் டாட்காம்' என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நன்றி : தினதந்தி

2 comments:

  1. Theres a famous comedy scene featuring Goundamani and Senthil where gounder will ask Senthil to carve his questions on a rock near Thanjavur big temple and sit next to it....

    we can ask these guys to carve their names in some stone next to the parliament and s(h)it next to it...

    Disgusting!!!

    ReplyDelete
  2. இதற்கு ஆபரேஷன் துச்சாதணன் எனப் பெயர் வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்.

    ReplyDelete