குடைக்குள் மழை என்பதைப் போல, காவி உடுத்திய "நெருப்பு', உமாபாரதி!
அந்த நெருப்பு இப்போது பாஜகவை வறுத்தெடுக்கிறது. ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, அத்வானிக்கு எதிராக சவால் விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. "உங்கள் மகளைப் போன்றவள்' என்று கூறி, வாஜபேயி, அத்வானியைச் சமாதானப்படுத்தி மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தார்.
ஆனால், இந்த முறை உமாபாரதி ஏந்தியிருக்கும் ஆயுதம் மிகவும் கூர்மையானது. இழந்துவிட்ட மத்தியப் பிரதேச முதல்வர் பதவி, பிகார் தேர்தலுக்குப் பிறகு தனக்கு மீண்டும் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்த அவரது ஆசையில் மண்ணைக் கொட்டிவிட்டது பாஜக தலைமை. தலைமையின் விசுவாசி சிவராஜ் சிங் சௌஹானை, பாபுலால் கௌருக்குப் பதிலாக முதல்வராக அறிவித்தது. அந்த ஆத்திரம் தாங்க முடியவில்லை.
அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினார்கள். வார்த்தைக் கணைகளால் தலைமையை அடித்து நொறுக்கினார் உமா. தில்லியில் நான்கு பேர் (அருண்ஜேட்லி, பிரமோத் மகாஜன், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு) அமர்ந்து கொண்டு அடுத்தவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கலாசாரத்தை ஏற்க முடியாது என்றார். அந்த நால்வரும் சேர்ந்து, வாஜபேயி, அத்வானி இயக்கும் விமானத்தை கத்தி முனையில் கடத்திச் செல்கிறார்கள் என்றார். அதாவது, கட்சித் தலைவருக்கு சுயமாக சிந்திக்கும் சக்தி இல்லை என்று ஆத்திரமூட்டியிருக்கிறார்.
உமாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பாரதீய ஜனதா கட்சியைப் பாதிக்காது என்று அதன் தலைவர்கள் ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அது கட்சியின் வெற்றி வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும்.
வாஜபேயி பிரதமராக இருந்தபோது, அவரை விமர்சனம் செய்தார் கல்யாண் சிங். அதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய கட்சியையும் துவக்கினார். ஒரு கட்டத்தில் சோனியா காந்திக்குக் கூட புகழாரம் சூட்டினார். 2002-ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதன் பிறகு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு, கட்சிக்குள் இழுக்கப்பட்டார் கல்யாண் சிங். ஆனாலும் கூட, கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் பாஜகவின் பலம் 59-ல் இருந்து 10 ஆகக் குறைந்தது.
பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்யாண் சிங், உ.பி.யில் பாஜகவைப் பலவீனப்படுத்தும் அளவுக்குப் பலமுள்ளவராக இருந்தார். அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க, தொண்டர்கள் ஆதரவு பெற்ற தலைவராக இருப்பவர் உமாபாரதி. அவரும், லோத் என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
ஒழுங்கு தவறியதாக தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தான் ஏற்கப்போவதும் இல்லை, அங்கீகரிக்கப்போவதும் இல்லை என்று சொல்கிறார் உமா. தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கிறார். "ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அருண்ஜேட்லி ஆஜராகவில்லையா? குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக கட்சிப் பத்திரிகையில் மகாஜன் கடிதம் எழுதியது தவறில்லையா? தில்லி மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு உள்கட்சி தகராறுதான் காரணம் என்று சுஷ்மா குற்றம் சாட்டியது மட்டும் நியாயமா? ஜின்னா பற்றி அத்வானி சொன்னது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டதா? அவர்கள் மீதும் விசாரணை நடத்துங்கள்' என்று ஆவேசப்பட்டிருக்கிறார் உமாபாரதி.
முக்கியத் தலைவர்களை முரட்டுக் காளைகளாகவும், அவர்கள் குறி வைக்கும் "ஆடு' -எனத் தன்னையும் சித்தரித்து இன்னும் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்.
கட்சிக்குள் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக(பாவம் பங்காரு லக்ஷ்மணன்) முக்கியமான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார் அவர். குஜராத்தில், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா (தற்போதைய மத்திய அமைச்சர்) புறக்கணிக்கப்பட்டதால்தான் காங்கிரஸில் சேர்ந்தார். அதேபோல, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக கட்சிக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், உமா விவகாரத்தைப் பொறுத்தவரை பாஜக தலைமை இந்த முறை மிக உறுதியாக இருப்பதாகவே தோன்றுகிறது. பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும், கட்சியில் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று உணர வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கருதும் பாஜக தலைவர்களும் உண்டு. வெளிப்படையாக அதைச் சொல்லாவிட்டாலும், பிகாரின் புதிய துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பாஜகவின் சுஷில் மோடி போன்ற தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இப்படித்தான் புலம்புகிறார்கள். "பிகாரில் கிடைத்த வெற்றியை ஆதாரமாக வைத்து, கட்சிக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ம.பி.யில் கை வைத்து பிகார் வெற்றியை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். பாபுலால் கௌர் இன்னும் சில காலம் தொடர அனுமதித்திருக்கலாமே. அப்படி அவசரமாக முதல்வரை மாற்ற வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது?' என புலம்புகிறாராம் சுஷில் மோடி.
உமாபாரதியின் குருவான உடுப்பி பெஜாவர் மட சீயர், தன் சிஷ்யை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முறையானது அல்ல என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
ஆனால், சங்கப் பரிவாரங்கள் உமா மீது பரிவு காட்டுவதாக இல்லை. உள்கட்சி விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று ஆர்எஸ்எஸ், விசுவஹிந்து பரிஷத் ஆகிய இரண்டு அமைப்புகளுமே ஒதுங்கிக் கொண்டுவிட்டன. மத்தியப் பிரதேச பாஜக விவகாரங்களில் ஆர்எஸ்எஸ்ஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேஷ் சோனி தலையிடுவதாக கடந்த அக்டோபர் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ். சுதர்சனுக்கு கடிதம் எழுதினார் உமா. அதை பத்திரிகைகளுக்கும் கொடுத்துவிட்டார். அதனால், ஆர்எஸ்எஸ் அவர் மீது கடும் ஆத்திரத்துடன் இருக்கிறது.
ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா உமாவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"கர்வம் கொண்ட சில தலைவர்களின் திருப்திக்காக மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக கட்சித் தலைமை எனக்கு உத்தரவாதம் தர வேண்டும். அதாவது, புதிதாக வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்குள் சாதி, மத, இனப்பாகுபாடுகளை அகற்ற வேண்டும். பத்திரிகையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் மற்ற தலைவர்களுக்கு எதிராக செய்தி கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பவை அந்த நிபந்தனைகள். ஏற்கெனவே, கடந்த முறை தான் கட்சிக்குள் சேர்க்கப்பட்டபோதே இந்தக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதாக தலைமை உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என்று கூறியிருக்கிறார்.
சண்டைக் கோழி உமா, சமாதானமாகச் செல்லும் மனநிலையில் இல்லை. "நான்தான் உண்மையான பாஜக' என்று அவர் கூறிக்கொண்டாலும், அடுத்துவரும் மாதங்களில் தனியாக மாநிலக் கட்சி துவக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை பலவீனப்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மாத இறுதியில் பாஜக தலைவர் அத்வானி தனது மகுடத்தை இறக்கி வைக்கப் போகிறார். இப்போது, உமாவை ஓரங்கட்டிவிட்ட நிலையில், நால்வர் அணி (அருண்ஜேட்லி, பிரமோத் மகாஜன், சுஷ்மா, வெங்கைய நாயுடு) தங்களுக்குள் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக்கூடும். அதற்குக் குறுக்கே நிற்கும் ஆர்எஸ்எஸ் ஆசி பெற்ற முரளி மனோகர் ஜோஷியை வீழ்த்துவது எப்படி என்று அவர்கள் சிந்தனை அடுத்த பாதையில் திரும்பக்கூடும்.
ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்கும் முன்பு, உண்மையான கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து வந்த பாஜக, இப்போது "காங்கிரஸ் கலாசாரத்துக்கு' முற்றிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்டது. அதனால், மீண்டும் ஒரிஜினல் கட்டுப்பாட்டுக்குத் திரும்புவது என்பது பாஜகவுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
உமாபாரதி ஒரு போராளி. அவரை எளிதில் அடக்கிவிட முடியாது. ஒரு உமாபாரதியை ஒழித்துக் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதைவிட, இன்னும் பல உமாபாரதிகள் உருவாகாமல் தடுப்பது எப்படி என்பதில் தனது கவனத்தைத் திருப்புவதே பாஜகவின் எதிர்காலத்துக்கு நல்லது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
- நன்றி : தின மணி
எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே!
Subscribe to:
Post Comments (Atom)
நன்பரே! நல்ல முயற்சி தினமணியில் வெளியிடப்பட்டதாக இருந்தாலும், தமிழ் வலைப்பூவில் ஏற்றி வாசகர்களை ஈர்த்தது சிறப்பானது. தொடருங்கள் உங்கள் முயற்சியை.. இதையும் வாசியுங்கள்...
ReplyDeletehttp://santhipu.blogspot.com/2005/11/blog-post_30.html
//"ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அருண்ஜேட்லி ஆஜராகவில்லையா? குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக கட்சிப் பத்திரிகையில் மகாஜன் கடிதம் எழுதியது தவறில்லையா? தில்லி மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு உள்கட்சி தகராறுதான் காரணம் என்று சுஷ்மா குற்றம் சாட்டியது மட்டும் நியாயமா? ஜின்னா பற்றி அத்வானி சொன்னது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டதா?//
ReplyDeleteஇப்படித்தான் இருக்க வேணும் பொம்பள!
அட ஏஞ்சாரே?
ReplyDeleteபின்னாலேயே வந்து டோண்டு, மாயவரத்தான், பத்ரி, அருண், முகமூடி, எஸ்கே, திருமலை, முரளி, ஸ்ரீகாந்த் என ஏதாவது ஒரு பார்ப்பனர் காவியை ஆதரித்து பதிவு எழுதினாலும் எழுதுவர். தேவையா இதெல்லாம் நமக்கு???
/பாதிக்கப்பட்ட ஜாதிக் கட்சி!/
ReplyDeleteபோறப் போக்கப் பார்த்தா பாதிக்கப்பட்ட ஜாதிக்கட்சி என்பது உண்மையாலுமே பாதிக்கட்சியாக ஆயிடும் போல் இருக்கு!
பாதிக்கப்பட்ட ஜாதிக் கட்சி சோதிக்கப்பட்ட சகதிக் கட்சியாக மாறியிருக்கிறது. கேரளாவில் அதன் தலைமை அலுவலகத்தை ரவுடி சப்ளையர் சங்க(:-)) உறுப்பினர்கள் அடித்து தகர்த்ததை கண்டீர்களா?(அவர்கள் இவர்களுடைய தொண்டர்கள் இல்லை என்ற அறிவிப்பு வேறு - பாவம் மூளைச் சலவை செய்யப்பட்ட திராவிடர்கள்!)
ReplyDeleteபாதிக்கப்பட்ட ஜாதிக் கட்சி சோதிக்கப்பட்ட சகதிக் கட்சியாக மாறியிருக்கிறது. கேரளாவில் அதன் தலைமை அலுவலகத்தை ரவுடி சப்ளையர் சங்க(:-)) உறுப்பினர்கள் அடித்து தகர்த்ததை கண்டீர்களா?(அவர்கள் இவர்களுடைய தொண்டர்கள் இல்லை என்ற அறிவிப்பு வேறு - பாவம் மூளைச் சலவை செய்யப்பட்ட திராவிடர்கள்!)
ReplyDelete