Tuesday, January 31, 2006

விஷமக் கார்ட்டூன்கள் கிளப்பிய விவகாரம்!

இஸ்லாமியர்கள் தங்கள் உயிரைவிட அதிகமாக நேசிக்கக்கூடிய இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை அவமதித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் உருவங்கள் டென்மார்க்கின் தினசரி பத்திரிக்கையான Jyllands-Posten இல் கடந்த செப்டம்பர் 30 ல் வெளியானபோது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்துக்குரல் எழுப்பினர்.

தெரியாமல் நடந்துவிட்ட தவறுக்கு தினசரி வழக்கம் போல் "வருத்தம்” தெரிவித்ததினால், ஏதோ அறியாமல் செய்துவிட்டார்கள் போல என்று எண்ணி மறந்துவிட்டார்கள்.

ஆனால் மறுபடியும் ஜனவரி மாத தொடக்கத்தில் நார்வேயின் Magazinet பத்திரிகையில் இவ்விஷமம் மறுபிரசுரமாகியபோது உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் அதிர்ச்சியுடன் கொதித்தெழுந்துள்ளனர்.

டென்மார்க்கின் பிரதமர் ஆண்டர்ஸ் முதற்கொண்டு கார்ட்டூன்களை வெளியிட்ட பத்திரிகை நிறுவனம் வரை “இது எங்கள் நாட்டு பத்திரிகை சுதந்திரம். அதனால் நாங்கள் செய்தது தவறென்று நினைக்கவில்லை” என்றும் ஒரு போடு போட்டுள்ளது தான் விவகாரத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதன் விளைவாக இஸ்லாமியர்கள் முதற்கொண்டு அனைத்துலக மக்களிடம் டென்மார்க் மற்றும் நார்வே நாட்டுத் தயாரிப்புக்களைப் புறக்கணிக்கும் எதிர்ப்பு அலைகள் உலகெங்கும் எழுந்துள்ளது. ஏற்றுமதித் தொழிலையே முதன்மை வருவாயாகக் கொண்டுள்ள நார்வே மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இது பேரிடியாக இருந்தபோதிலும் தன் "இமேஜை" விட மனமில்லாமல் இருக்கிறது.

57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு நிறுவனமான Organization of the Islamic Conference (OIC) கூட நேற்று உலக முஸ்லிம் நாடுகளை டென்மார்க்கிற்கு எதிரான கண்டனங்களைத் தெரிவிக்கக் கோரியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவதில் தான் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது என்றால் டென்மார்க் உற்பத்தி பொருள்களை புறக்கணிக்கவும், பொதுமக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது அல்லவா?

இஸ்லாமிய அடிப்படையைத் தெளிவாக அறிந்திருந்தும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கோட்பாடுகளை பின்பற்றும் 130 கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் கேலிச் சித்திரங்களை பிரசுரம் செய்ததோடு மட்டுமில்லாமல் "இது பத்திரிகையின் கருத்துச்சுதந்திரம்" என்று அகந்தையுடன் பேசுவது மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட ஆபத்தான முன்மாதிரியாகத்தான் இருக்கும்.

பிறரது மத உணர்வுகளைச் சீண்டி, அதில் குளிர் காய எண்ணும் பத்திரிகைகள் கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்ற அகங்கார மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதன் தொடர்ச்சியாக, செய்த தவறுக்காக உலக அரங்கில் மன்னிப்பு கோருவதுடன் இனி இதுபோல் நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது பொறுப்புள்ளதாக தம்மைக்கருதிக்கொள்ளும் எந்த ஒரு பத்திரிகைக்கும் கடமையாகும்.

Wednesday, January 25, 2006

நல்ல காலம் வரப் போகுது!

சட்டசபையில் கலந்து கொண்டு பேசாததால்தேர்தலில் போட்டியிட கருணாநிதிக்கு தடை விதிக்க வேண்டும்தேர்தல் அதிகாரியிடம் வக்கீல்கள் மனு


சட்டசபையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசாமல் இருப்பதால் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வக்கீல்கள் மனு கொடுத்து உள்ளனர்.


சென்னையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துராஜ் (சேப்பாக்கம்), எம்.ராமகிருஷ்ணன், ஐ.சதீஷ், கே.அர்ஜ×னன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மற்றும் சபாநாயகர் காளிமுத்து ஆகியோரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


சென்னை சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அந்தப் பகுதி மக்களால் கருணாநிதி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் சட்டசபைக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதில்லை. அரசியல் காரணங்களுக்காக அங்கு வருவதை கருணாநிதி தவிர்க்கிறார்.
ஆனால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக 60 நாட்களுக்கு ஒருமுறை சட்டசபைக்கு வந்து அங்குள்ள வருகைப் பதிவேட்டில் அவர் கையெழுத்து போட்டு செல்கிறார். இந்தியாவில் இப்படி உயர்மட்டத்தில் உள்ள பொது ஊழியர்கள் தங்கள் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு வேலை செய்யாமல் சென்றுவிட்டால் இந்தியாவின் நிலை என்னவாகும்?

எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற பொது ஊழியர்களுக்காக மக்கள் பணத்தில் இருந்து பெருந்தொகை செலவழிக்கப்படுகிறது. சம்பளம், சலுகைகள், படிகள், வசதிகள், ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக பெருந்தொகை தரப்படுகிறது.
சட்டசபையில் அனுமதியை பெறாமல் 60 நாட்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் எம்.எல்.ஏ.யின் பதவியை சட்டசபை ரத்து செய்யலாம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 190(4)-ம் பிரிவு கூறுகிறது. கடந்த நாலரை ஆண்டுகளாக சட்டசபை நிகழ்ச்சிகளில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.

எனவே, இந்த சட்டத்தின் அடிப்படையில் கருணாநிதியின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்ய வேண்டும். அவரது எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்வது மட்டுமல்ல, இதுவரை அவர் பெற்றுள்ள சம்பளம், படிகள், சலுகைகள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்.


மேலும், மற்ற பொறுப்பற்ற அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையில், வரும் தேர்தல்களில் போட்டியிட கருணாநிதிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு வக்கீல்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


அப்படி போடு! எனக்கு தெரிந்து வக்கீல்கள் செய்த நல்ல காரியங்களில் இதற்கு முதலிடம் தரலாம். என்ன "திராவிட கொள்கை" என்று கூறிக் கொண்டிருப்பது இது தானா? ஒரு பெண்ணுக்கு இருக்கும் சாமர்த்தியம் கூட இல்லாத இவர்களெல்லாம் நாட்டுக்கு என்ன செய்து கிழித்து விடப் போகிறார்கள்.

"தமிழக முதல்வர்" என்ன பாடுபட்டாவது இந்த வழக்கை வெற்றி பெற வைக்க வேண்டும்.(ஆமா சும்மா விட்டு விடுவதா? எதிராளி யார்? துகில் உரி கழக தலைவர் அல்லவா? கிடைத்த சந்தர்ப்பத்தை யாராவது நழுவ விடுவார்களா என்ன?)

தமிழர்களை மடையர்கள் என நினைத்து கொண்டிருக்கும் புழுத்த அரசியல்வாதிகளுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு சாவு மணி அடிக்க வேண்டும்.

அதோடு இந்தியாவின் நல்ல காலம் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.

Thursday, January 19, 2006

காந்திஜியை மறக்கிறோமா நாம்?

மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும் - என்ற தலைப்பில் பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு அவர்கள், திண்ணையில் மலர் மன்னன் எழுதிய கட்டுரையை பதித்து சில நியாயங்களை எழுப்பியுள்ளார். பொதுவாக நியாய அநியாயங்களைக் குறித்து எழுதும் போது உள்ளது உள்ள படி எடுத்து எழுதி விட்டு பின்னர் நியாயங்களைக் குறித்து பேசுவது தான் சரி. காந்திஜி கொலையைப் பொறுத்தவரை கோட்சே யார் என்றும் அவனுடைய செயலின் பின்னணியில் யார் யார் இயங்கினார்கள் என்பதும் இன்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.

சங்க் பரிவாரத்தின் ஆரம்பமான ஆர்.எஸ்.எஸ் தோற்றுவித்த காலத்திலிருந்து அதன் செயல்களையும் செயல் திட்டங்களையும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அதன் வளர்ச்சியின் பின்னணியில் வந்தேறி பார்ப்பனர்களின் நரி மூளை செயல் படுவதை நன்கு உணர முடியும். சங்க் பரிவாரத்தில் இந்த பார்ப்பனர்களின் முக்கிய பங்கு உடல் ரீதியாக செயல்படுவதை விட மன ரீதியாக, பிரச்சார ரீதியாக, எழுத்து ரீதியாக சுருக்கமாக புத்தி பூர்வமாக செயல் படுவது தான். அதில் வரலாற்றை நேர் எதிராக தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்க முயற்சிக்கும் முக்கிய பணி இவர்களுடையது தான்.

அந்த அடிப்படையில் தான் மலர் மன்னன் வழியாக பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு அவர்களும் கயவன் கோட்சேயின் செயலை புனிதமாக்கவோ அல்லது அச்செயலுக்கும் சங்க் பரிவாரத்திற்கும் தொடர்பில்லை என்று வலிந்து நிறுவவோ முயற்சிக்கிறார். இதனை செய்வதற்கு "அவாள்கள்" என்ன வழிமுறைகளை வேண்டுமானாலும் கையாள்வார்கள். நோக்கம் சங்க் பரிவாரத்தை சமூக நீதி காவலர்களாக்குவதும், முஸ்லிம்கள் அனைவரையும் கொடூரர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் மக்கள் மனதில் வலிந்து நிறுவுவதும் தான். அதனை சரியான ஆதாரங்களுடன் நிரூபித்தால் ஒன்றும் கூறி தப்ப முடியாத நிலை வரும் போது "தனி மனித தாக்குதல்" என்று கூறி விஷயத்திற்கு அதோடு முற்று புள்ளி வைத்து விடுவர்.

இங்கும் அதே கயமைத் தன்மையைத் தான் செயல்படுத்துகின்றனர். மலர் மன்னனின் கட்டுரையை படிக்கும் சிறு பிள்ளையும் தெளிவாக கூறி விடும் மலர் மன்னன் சங்க் பரிவாரத்தின் உறுப்பினர் என்பதை. கோட்சே சங்க் பரிவாரத்தினைக் காக்க எடுத்த அதே முயற்சியை இவரும் எடுத்துள்ளார். இடையிடையே முஸ்லிம்களை மோசமானவர்களாக சித்தரிக்க முயற்சிக்கும் அதே சங்க் பரிவார மனப்பான்மை.

அவரின் கட்டுரை முழுவதும் பொய்களாலும் முன்னுக்கு பின் முரணான தகவல்களாலும் நிறைந்துள்ளன. அக்கட்டுரையின் முக்கிய நோக்கம் காந்தி கொலைக்கும் சங்க் பரிவாரத்திற்கும் சம்பந்தமில்லை என்று காட்டுவதோடு, முஸ்லிம்கள் இந்துக்களை அநியாயமாக கொடுமைப் படுத்தினர் என்று எப்பொழுதும் போல் சேறுவாரி இறைப்பதுமேயாகும். இதனை அவர் கேரள மாப்பிள்ளைமார்களின் கலகத்தினைக் குறித்து எழுதுவதைக் கொண்டே நிரூபிக்க முடியும். தென்னகத்திலேயே முதன் முதலாக பரங்கியர்களை எதிர்த்து போர் குரல் எழுப்பிய வீரர்கள் தான் மாப்பிள்ளைமார். இதனை வரலாற்றுரீதியாகவே எம்மால் நிரூபிக்க முடியும். மலர் மன்னனின் கட்டுரை பொய்களின் கூட்டு அவியல் என்பதை நிரூபிக்க அங்கெல்லாம் போக வேண்டிய அவசியம் கூட இல்லை.

அவர் கட்டுரையில் ஆதாரமாக காட்டியுள்ள காந்தியின் கொலைக்கு நேரடி சாட்சியான அவரின் உதவியாளர் "கல்யாணமே" போதும்.



இவரை மிகவும் அறிந்தவரைப் போல் தன்னைக் காட்டிக் கொள்ளும் மலர் மன்னன் இவர் காந்திஜியுடன் இருந்த நாட்களைக் குறித்துக் கூறும் பொழுது அவருடைய கட்டுரையில், "காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார். தமிழரான அவர் பெயர் கல்யாணம்." என்று அவரைக் குறித்து அறிமுகப் படுத்தும் விதமாக கூறுகிறார். இந்த ஒரு வரி போதும் வரலாற்று நிகழ்ச்சியை எந்த அளவிற்கு தெரிந்து (அல்லது திரித்துக்) கொண்டு இவர் எழுதுகிறார் என்பதற்கு. 1942 லேயே தனது வேலையினை விட்டு விட்டு காந்திஜியின் ஆசிரமத்தில் எத்திய கல்யாணம் அவர்கள் 1944 - முதல் 60 ரூபாய் சம்பளத்திற்கு காந்திஜிக்கு வரும் கடிதங்களை வகைப்படுத்துவதும் அவற்றிற்கு பதில் எழுதுவதுமான பணிக்கு அமர்த்தப் படுகிறார். அதன் பின் காந்திஜி கொலை செய்யப்படும் 1948 ஜனவரி 30 வரை அவர் அருகிலேயே இருந்துள்ளார். இதனைத் தான் மலர் மன்னன் "காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார்." என்று எழுதுகிறார். மலர் மன்னனுக்கு மிகவும் தெரிந்த கல்யாணம் அவர்கள் அதுவும் அவர் பக்கத்தில் உயிரோடு இருக்கும் போதே , காந்திஜியுடன் அவர் பணியாற்றிய வருடங்கள் எத்தனை என்ற சிறிய விஷயத்தைக் குறித்து தெரிந்திருக்கும் அவரின் ஆராய்ச்சி அறிவு - பெண் கற்பு புகழ் திருவாளர் டோண்டு அவர்களைப் போல் - எனக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறது.




"கேரள சப்தம்" என்ற மலையாள சஞ்சிகையில் டிசம்பர் 25, 2005 அன்று வெளியான "கல்யாணம்" அவர்களின் பேட்டியிலிருந்து ஒரு பகுதியினை மலர் மன்னனின் கட்டுரைக்கு பதிலாக வைக்கிறேன். பின்னர் தீர்மானிப்போம் காந்தியை கொன்றதில் சங்க் பரிவாரத்திற்கு பங்கு உண்டா என்பதை!

அதன் பின்னர் மலர் மன்னனின் எழுத்தைக் குறித்து ஆகா ஓகோ என்று அளந்த பெண் கற்பு புகழ் திருவாளர் டோண்டு அவர்களின் மாப்பிளைமார்கள் குறித்த பின்னூட்டங்களின் உண்மைதன்மை குறித்தும் தீர்மானிப்போம்.



இப்பொழுது கல்யாணம் அவர்களின் பேட்டியிலிருந்து:


1947 ஆகஸ்ட் 15 அன்று நேருவின் தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை டெல்லியில் அதிகாரம் ஏற்கும் போது, தனது வாழ்நாளில் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவி கூட வகித்திடாத காந்திஜி வங்காளம் - நவகாளியிலுள்ள பாலிகட் என்ற கிராமத்தில் ஒரு சாது முஸ்லிம் பெண்மணியின் குடிலில் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்தார். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தத்துவ சாஸ்த்திரத்தை அப்படியே நடைமுறைப் படுத்தும் ஓர் அபாக்கியகரமான நிகழ்வு தான், பாரத பிளவின் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைத்த பிரதி பலனாகும். பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் வறண்ட பூமிகள் மனித இரத்தம் குடித்து தனது தாகத்தை தணித்துக் கொண்டன. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது என்ற தவறான அபிப்பிராயத்தை, அதிகாரத்தை மட்டுமே கனவு கண்டு கொண்டிருந்த ஜின்னாவும் அவர் துதிபாடிகளும் மனப்பூர்வம் மக்களின் மனதில் விதைத்தனர்.

லால் கிருஷ்ண அத்வானி சமீபத்தில் லாகூரில் ஜின்னாவின் சமாதியில் வைத்து கூறியது போல, ஜின்னா ஒரு முழுமையான மதசார்பற்ற மனிதனாக இருந்தார். இன்னும் சற்று விளக்கமாக கூறினால் மத அனுஷ்டானங்களை கடைபிடித்து வாழ விரும்பாத ஒரு முழு உலகியல்வாதி. விஸ்கியும், பன்றி இறைச்சியும் விரும்பி உண்பவராயிருந்த அவர் ஆங்கில கலாச்சாரத்தின் ஆராதகனாக இருந்தார். ஆரம்பத்தில் பாகிஸ்தான் வாதத்தை புறந்தள்ளிய ஜின்னா, சக தலைவர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களில் அது ஒரு நடவாத காரியமென்று ஏளனமாக கூறிக் கொண்டிருந்தார். முகம்மதலி ஜின்னாவிற்கு சுதந்திர இந்தியாவின் பிரதமர் பதவியை வழங்க சம்மதித்திருந்தால் ஒரு வேளை பாகிஸ்தான் என்ற கனவு ராஜ்ஜியம் சில தீவிரவாதிகளின் மனதோடு அடங்கி ஒடுங்கிப் போயிருந்திருக்கும்.

ஆனால் பண்டித நேரு மற்றும் பட்டேலின் சிறிதும் விட்டு கொடுக்காத மனப்பான்மை தான் ஜின்னாவிற்கு தன்னை ஒரு பிரதமர் பதவிக்கு தகுதியுடையவராக உயர்த்திக் காட்டுவதற்கு முடியாமல் போனது. அதன் பலனோ, நம் நாட்டிற்கு தன்னில் ஒரு பெரிய நிலப் பகுதியையும், திறமையான ஒரு மனிதவளத்தையும் என்றென்றைக்குமாக இழக்க வேண்டி வந்தது.

ஜின்னாவை பிரதமராக்குவதில் காந்திக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லாமல் முழு சம்மதமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரசில் ஹிந்துத்துவ வாதம் வலிமையடைந்த போது, ஜின்னா 1937 - ல் உருவான முஸ்லிம் லீக்கிற்கு தாவினார். சில இடங்களிலாவது தங்களின் விகிதாச்சாரப்படி முஸ்லிம் லீக்கிற்கு அரசாங்கத்தில் இடமளிக்க வேண்டும் என்ற முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துத் தள்ளிய போதே பிரிவினையின் வித்துக்கள் தூவப் பட்டு விட்டன. 1947 ஆகஸ்ட் 15 - ல் சுதந்திரம் கிடைத்திருந்தாலும், அரசு 1948 ஜனவரி 26-ல் தான் பல லட்சங்கள் செலவளித்து டெல்லியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடத்தியது. தன்னுடைய மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் நடந்த அந்த கொண்டாத்தோடு பாபுஜிக்கு மனதில் சம்மதமில்லாதிருந்தது. பொது கஜானாவில் உள்ள மக்கள் பணத்தை ஆடம்பரங்களுக்கு செலவளிப்பதை அவர் விரும்பவில்லை. இன்னும் கூறினால் இன்றைய ரீதியிலான ஆட்சி முறையே காந்திஜியின் மனதில் இல்லாதிருந்தது.

ஆங்கில அரசாங்கத்தின் காலத்திலிருந்த எல்லா சிறைச்சாலைகளையும் கல்வி ஸ்தாபனங்களாகவோ அல்லது மருத்துவமனைகளாகவோ மாற்றவேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் ஜீவாத்மாவும், பரமாத்மாவுமாக இருந்த காந்திஜி தனக்குப் பின் தன்னுடைய அரசியல் வாரிசாக ஒரு போதும் நேருவை கருதியதில்லை. தன்னுடைய வாழ்நாளிலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்றிருந்த காந்திஜி, அகிம்சை சித்தாந்தத்தில் உறுதியாக நின்று போராட்டத்தினைத் தொடர ஏற்ற ஓர் ஆள் என்ற ஒரு முக்கியத்துவம் மட்டுமே நேருவிற்கு வழங்கியிருந்தார்.

சுசீலா நய்யாருடைய சகோதரரும் தனது அந்தரங்க செயலாளருமாக இருந்த மகாதேவ் தேசாயிக்குப் பிறகு இராஜாஜி தான் காந்திஜியின் உள்மனதை அறிந்தவராக இருந்தார். காரியங்களை விபரமாக அறிந்த, சத்தியங்களை முகத்திற்கு நேரே கூறும் குணம் கொண்ட சி. ராஜ கோபாலச்சாரியை காங்கிரசில் சில முகஸ்துதி செய்யும் கும்பல்களுக்குப் பிடிக்காமல் இருந்தது. எனவே ஒரு வழியும் இல்லாதிருந்ததால் தான் இராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜனரல் ஆனார். இராஜாஜியின் மகள் லட்சுமி மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் மருமகள் ஆனது பலருக்கும் நம்புவதற்கே இயலாததாக இருந்தது.

புத்தகங்கள் வழியேயும் சில திரைப்படங்கள் வழியேயும் ஒட்டு மொத்த மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு காட்சி, காந்திஜி "ஹே ராம்" என்று முனகிக் கொண்டு கடைசி மூச்சு விடும் காட்சி ஆகும். அவரின் இறுதிச்சடங்குகள் நடந்த ராஜ்காட் - ஸ்மிருதி மண்டபத்தின் மார்பிள் பலகைகளில் கூட மிக அழகாக "ஹே ராம்" என்று பொறித்து வைத்திருக்கிறார்கள். காங்கிரசில் உள்ள தீவிர ஹிந்துத்துவ வாதிகளான ஒரு சில தலைவர்களின் கூர்புத்தியில் உதித்த சிந்தனை தான் இந்த "ஹே ராம்" என்ற காந்தியின் கடைசி அழைப்புக்கு பின்னால் உள்ளது. காந்திஜி ஒரு அதி தீவிர ராம பக்தராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சங்க்பரிவாரின் ராமனல்ல காந்தியின் சிந்தனையில் இருந்த ராமன். அது போலவே பகவத் கீதையின் வரிகளைச் சிந்தையுள் கொண்டு தான் தன்னுடைய ஒவ்வொரு நாளின் தொடக்கமும் இருக்கும் என்று பலமுறை காந்திஜியே கூறியிருக்கிறார்.

1948 ஜனவரி 30 அன்று பிரார்த்தனை நேரத்தில் நாதுராம் வினாயக் கோட்சேயின் கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கியிலிருந்து புள்ளி இடைவெளியில் 5 க்கும் மேற்பட்ட குண்டுகளை தனது நெஞ்சில் வாங்கி ஒரு முறை துடிப்பதற்கு கூட நேரம் கிடைக்காமல் அந்த வயோதிகன் கீழே விழுவதை கண்ட சாட்சிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒரு முறை முனகுவதற்கு முன்பே ஜீவன் அவர் உடம்பிலிருந்து பிரிந்திருந்தது. டில்லி போலீசை பாதுகாப்பு பரிசோதனைகளில் இருந்து விலக்கிய மகாத்மா, ஒரு கணக்கில் மரணத்தை விலை கொடுத்து வாங்கினார் என்று தான் கூற வேண்டும்.

காந்திஜியின் கொலைக்கு யதார்த்த காரணத்தைத் தேடினால், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிற்கு இந்தியா கைமாறிய 50 கோடி ரூபாய் பணத்திற்கு ஒரு பெரும் பங்குள்ளதை காணலாம். காலம் காலமாக ஒன்றாக இருந்த ஒரு விசாலமான பூமி இரண்டு நாடுகளாக பிரிந்த போது அதனுடைய ஆஸ்திகளும் பங்கு வைக்க வேண்டி வந்தது. அப்போதைய நிலைமையில் பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டிய 50 கோடி ரூபாயை கொடுப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் காந்திஜி கோரினார். அந்த நேரத்தில் தான் காஷ்மீரின் இந்து ராஜாவான ஹரிசிங் ஒருதலைப் பட்சமாக இந்தியாவோடு இணைய தீர்மானம் எடுத்தார். அதனைத் தடை செய்ய பாகிஸ்தான் காலாட்படை வரவும், இந்தியாவின் விமானப் படையின் சமயோஜிதமான செயல் பாடுகளால் ஹரிசிங்கின் ராஜ்ஜியம் இந்திய குடியரசில் இணையவும் செய்தது. பகை மாறாத பாகிஸ்தானிகள் காஷ்மீரில் குழப்பங்கள் உருவாக்கி விட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் இந்த 50 கோடி ரூபாயின் விஷயம் மேலே வந்தது.

நாம் கொடுக்கும் 50 கோடி ரூபாய் கொண்டு பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்கி நமக்கே எதிராகப் பிரயோகிக்கும் என்று தீர்க்கதரிசியான பட்டேல் ஊகித்தார். அதனால் அவர் 50 கோடி கொடுப்பதைக் கடுமையாக எதிர்த்தார். காந்திஜியின் வேண்டுகோளிற்கு அரசாங்கம் உடன்படாத போது அவர் உண்ணாவிரதமிருந்தார். முடிவில் எப்பொழுதும் போல் காந்திஜி தான் வெற்றி பெற்றார். பட்டேல் ஊகித்தது போல் அப்பணம் ஆயுதங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வந்து சேர்ந்தது வேறு விஷயம். இது இந்து மகாசபை தலைவர்களை எரிச்சலடைய செய்தது. அதனால் அவர்கள் புனேயில் ஒன்றுகூடி காந்திஜியை கொலை செய்வதற்குண்டான திட்டங்களை தயாராக்கினர். காந்திஜியின் முஸ்லிம் அனுகூல நிலைபாடுகள் அவர்களுடைய செயலுக்கு ஆக்கம் கூட்டியது. முதல் முயற்சியில் தோல்வியடைந்தாலும் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பத்தில், பெயருக்கு மட்டும் இருந்த பாதுகாப்பு வளையத்தினை உடைத்துக் கொண்டு நாதுராம் வினாயக் கோட்சேக்கு அந்த மகாத்மாவினை கொல்வதில் வெற்றிபெற முடிந்தது. காந்திஜியின் கொலையினூடாக, முஸ்லிம்களின் ஒரு பெரிய பலமான பாதுகாப்பு அரணை இல்லாமல் ஆக்கி விட்டோம் என்ற தவறான அகங்காரம் நாட்டின் பல பாகங்களில் பரவியிருந்த இந்து மகாசபை தலைவர்களின் மனதில் நிறைந்திருந்தது.

அதிகப் பெரும்பான்மையுள்ள இந்துக்கள், மிகவும் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாவது இந்தியாவில் சமாதானம் நிலை நிற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த மகாத்மா மனதில் நிறைந்திருந்தது.

காந்திஜியின் வாழ்க்கை தான் அவரின் உபதேசம். அவரிடம் சவர்ணனோ, அவர்ணனோ, இந்துவோ, முஸ்லிமோ என்ற வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் ஹரி - அதாவது தெய்வத்தின் பிள்ளைகள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற மகான்கள் காந்திஜியின் மகத்துவத்தை நெஞ்சில் ஏற்றியவர்களாவர். காந்திஜியை கேவலப் படுத்த நினைப்பவன், தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொள்கிறானேயன்றி வேறில்லை.

நன்றி : கேரள சப்தம் 25 டிசம்பர் 2005.


இந்நிலை தொடர்ந்தால் காந்திஜியை மறக்கவல்ல இந்தியாவின் இன்றைய பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணமே காந்தி தான் என்று கூறினாலும் கூறுவார்கள் அயோக்கியர்கள்!

இப்பொழுது பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி;

* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?