வர்ணாசிரம கிரிமினல் இராமன்!
ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!
"இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? "
"அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொருமுறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.
ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் "யாரோ, எவரோ; எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.
"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்" என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ" என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல்.
"பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி" லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.
மதத்தை வைத்து "பிசினெஸ்" நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக "கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, "ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.
வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?
நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...
வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?
நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...
வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்!
நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?
வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.
நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?
வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.
நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?
வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.
(ஆதாரம்: watch the video: http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)
இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே, "தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள்தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'' என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், "நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், " உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, "இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். "கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கிறார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.
"கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். "எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் "அவாள்'' பேசவே இல்லை.
"இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, "உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி"கள்!
வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.''
வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று "அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.
இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்" என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.
"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று" பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்" என்பதல்லவோ மனுநீதி!
செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் "நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ, "அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!